சித்தூர் மாநகரில் முக்கிய சாலைகளில் மின்விளக்குகள் சரியாக எரிகிறதா?

சித்தூர் : சித்தூர் மாநகரில் உள்ள முக்கிய சாலைகளில் மின்விளக்குகள் சரியாக எரிகிறதா? என அதிகாரிகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்று மாநகராட்சி ஆணையர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.சித்தூர் மாநகராட்சி ஆணையர் அருணா நேற்று முன் தினம் இரவு மாநகராட்சி அதிகாரிகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்று மாநகரத்தில் முக்கிய சாலைகளில் உள்ள மின்விளக்குகள் சரியாக எரிகிறதா, இல்லையா என ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது:

சித்தூர் மாநகரத்தில் ஏராளமான சாலைகளில் உள்ள தெருக்களில் இரவு நேரங்களில் மின்விளக்குகள் எரியவில்லை என பல்வேறு புகார்கள் வந்தன. இதனால் முக்கிய சாலைகளான சர்ச் தெரு, பஜாஜ் தெரு, காந்தி சாலை, ஹை ரோடு, பலநேர் சாலை, சித்தூர்- வேலூர் சாலை, சித்தூர்- திருத்தணி சாலை உள்ளிட்ட சாலைகளில் மின்விளக்குகள் சரியாக எரிகிறதா என அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டோம். ஒரு சில பகுதியில் உள்ள மின் கம்பங்களில் உள்ள மின்விளக்குகள் எரியவில்லை. உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மின்விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளேன்.

அதேபோல் ஏராளமான தெருக்களில் இரவு நேரங்களில் ஒரு சில மின் கம்பங்களில் உள்ள மின் விளக்குகள் எரிவதில்லை. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளேன்.
மேலும் ஏராளமான மின் கம்பங்களில் உள்ள மின்விளக்குகள் பழுதடைந்து விட்டதால் அதனை சரி செய்ய ஓரிரு நாட்கள் ஆகும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரு சில மணி நேரத்திற்குள் மின்விளக்குகள் எரிய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளேன். சித்தூர் மாநகரத்தை பொறுத்தவரை இரவு நேரங்களில் அனைத்து பிரதான சாலைகள், அனைத்து தெருக்களிலும் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை மின்விளக்குகள் எரிய வேண்டும். ஒரு சில மின்விளக்குகள் பழுதடைந்தால் உடனடியாக அதனை சரி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் இரவு நேரங்களில் எந்தெந்த பகுதியில் உள்ள மின் கம்பங்களில் மின்விளக்குகள் எரியவில்லை என ஆய்வு நடத்தி மறுநாள் காலை உடனடியாக மின்விளக்குகளை மாற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆய்வின்போது, ஏராளமான மாநகராட்சி, மின்சார துறை அதிகாரிகள் மற்றும் இன்ஜினியரிங் துறை அதிகாரிகள் இருசக்கர வாகனங்களில் மாநகராட்சி ஆணையருடன் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்