சித்தூர் அருகே விவசாய நிலத்தில் 15 காட்டு யானை கூட்டம் அட்டகாசம்-10 ஏக்கர் நெல், தக்காளி உள்ளிட்ட பயிர்கள் நாசம்

சித்தூர் : சித்தூர் அருகே 15 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கூட்டமாக விவசாய நிலத்தில் புகுந்து 10 ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல், தக்காளி உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வி.கோட்டா மண்டலம் தோட்டக்கனுமா கிராமம் அருகே விவசாய நிலத்தில் நேற்று 15க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் விவசாய நிலத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்துள்ளது.

இது குறித்து அக்கிராம மக்கள் கூறியதாவது: தமிழ்நாடு வனப்பகுதியில் இருந்து 15க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் நேற்று விவசாய நிலத்தில் புகுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நாங்கள் உடனடியாக குப்பம் வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தோம். அதன்படி வனத்துறை அதிகாரிகள் எங்கள் கிராமத்திற்கு வந்து கிராம மக்கள் உதவியுடன் காட்டு யானைகளை வனப்பகுதிக்கு விரட்ட முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். இப்பகுதியில் நெல், தக்காளி, மக்காச்சோளம் உள்ளிட்ட காய்கறி பயிர்கள் 10 ஏக்கருக்கும் மேல் காட்டு யானைகள் நாசம் செய்துள்ளது எனவே, சேதம் அடைந்த பயிர்களுக்கு அரசு நிவாரண தொகை வழங்க வேண்டும்’ என்றனர்.

மேலும் இதுகுறித்து பலமனேர் சரக வனத்துறை அதிகாரி பிரசாத் தெரிவிக்கையில், தமிழ்நாடு வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் வழி தவறி வி.கோட்டா மண்டலத்தில் உள்ள வனப்பகுதிக்கு புகுந்துள்ளது. அங்கிருந்து பைரெட்டிப்பள்ளி மண்டலம் கைகால் வனப்பகுதிக்கு வந்துள்ளது. அங்கிருந்து வி கோட்டா மண்டல வனப்பகுதியில் நுழைந்து, பின்னர் தோட்டக்கணுமா கிராமம் அருகே விவசாய நிலத்தில் புகுந்து விவசாய பயிர்களை நாசம் செய்து வந்தது.

நாங்கள் கிராம மக்கள் உதவியுடன் சம்பவ இடத்துக்கு சென்று பட்டாசுகள் வெடித்து 15 க்கும் மேற்பட்ட காட்டு யானைகளை மீண்டும் வனப்பகுதிக்கு விரட்டி உள்ளோம். மேலும் வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராம மக்கள் அனைவரும் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவித்துக் கொள்கிறோம். அதேபோல் விவசாயிகள் தங்களுடைய விவசாய நிலங்களுக்கு செல்லும்போது மிகவும் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்.

மீண்டும் காட்டு யானைகள் விவசாய நிலத்திற்கு வருவது தெரிய வந்தால் உடனடியாக வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். விவசாயிகள் விவசாய நிலத்துக்கு செல்லும் போது வெள்ளை நிற ஆடையை பயன்படுத்த வேண்டாம். யானைகளுக்கு வெள்ளை நிறம் என்றால் பிடிக்காது. ஆகவே மற்ற நிறங்களில் ஆடைகளை அணிந்து செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். 15க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் விவசாய நிலத்திற்கு புகுந்து பயிர்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Related posts

கள்ளக்குறிச்சி மாவட்டம்: வடதொரசலூரில் சிறுவர்கள், சிறுமிகள் உட்பட 7 பேருக்கு எலிக்காய்ச்சல் பாதிப்பு!

திருப்புத்தூர் அருகே காய்கறி வேன் கவிழ்ந்து விபத்து: டிரைவர், கிளீனர் படுகாயம்

ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர்களிடம் ‘கூகுள் லொகேஷன்’ கேட்க கூடாது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு