சின்னமலை – தரமணி ஐடி பூங்கா வரை மெட்ரோ இணைப்பு வாகன சேவை


சென்னை: சின்னமலை மெட்ரோ ரயில் நிலையம் முதல் தரமணி ஐடிபிசி ஐடி பூங்கா வரை மெட்ரோ இணைப்பு வாகன சேவை தொடங்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இணைப்பு வாகன சேவைகள் சென்னை முழுவதும் உள்ள பல ஐடி பூங்காக்களில் தொடங்கப்பட்டுள்ளன. சென்னை பயணிகளுக்கு அவர்களின் பணியிடத்திலிருந்து அருகிலுள்ள மெட்ரோ ரயில் நிலையத்திற்கு இணைப்பு வாகன சேவை வழங்கப்படுகிறது.

அதன்படி, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், கேப்டல்லாண்டு இன்வெஸ்மென்ட் மற்றும் நியூ ட்ராவல் லீனாஸ் நிறுவனத்துடன் இணைந்து, தரமணியில் அமைந்துள்ள ஐடிபிசி ஐடி பூங்காவில் பணிபுரிவோரின் போக்குவரத்து வசதிக்காக குளிரூட்டப்பட்ட மெட்ரோ இணைப்பு வாகன சேவையை தொடங்கியுள்ளது. சின்னமலை மெட்ரோ ரயில் நிலையம் முதல் ஐடிபிசி ஐடி பூங்கா இடையே தோராயமாக 6 கி.மீ தொலைவிற்கு, சாலை போக்குவரத்து நெரிசலின் அடிப்படையில் 25 முதல் 30 நிமிட இடைவெளியில் மெட்ரோ இணைப்பு வாகன சேவை இயக்கப்படும். திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 8.30 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையிலும் இச்சேவை இயக்கப்படும்.

ஐஓஎஸ் மற்றும் ஆன்ரைட் மொபைல்களில் ஜி-டாக்சி செயலி மூலம் பயணிகள் மெட்ரோ இணைப்பு வாகன சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம். ஒரு பயணத்திற்கு ஒரு நபருக்கான கட்டணம் ரூ.50 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பு வாகன சேவை தினசரி பயணம் மேற்கொள்பவர்களுக்கு பயனுள்ளதாக அமையும். இந்த சேவையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்வின் போது, கேப்டல்லாண்டு இன்வெஸ்மென்ட் நிறுவனத்தின் துணை நகரத் தலைவர் ரோஹித் சந்தோஷ், கோபிநாத் மல்லையா, தலைமை ஆலோசகர் (இயக்கம் மற்றும் பராமரிப்பு), சதீஷ்பிரபு கூடுதல் பொது மேலாளர் (தொடர்வண்டி மற்றும் இயக்கம்), சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், கேப்டல்லாண்டு இன்வெஸ்மென்ட் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

 

Related posts

நடிகை அதிதி ராவுடன் நடிகர் சித்தார்த் திருமணம்

செஸ் ஒலிம்பியாட்; 5வது சுற்றில் இந்திய ஆண்கள் அணி வெற்றி

எச்.ராஜாவை கண்டித்து நாளை தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு