சீன கார் இறக்குமதியால் ஆபத்து?

பொம்மை தொடங்கி, எலக்ட்ரானிக் பொருட்கள், கார் என அனைத்திலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது சீனா. இந்நிலையில், சீன கார்களால் தனிநபர் தகவல்கள் திருடப்படும் ஆபத்து இருப்பதாக அமெரிக்கா சந்தேகிக்கிறது. இதுதொடர்பாக அமெரிக்க வர்த்தக துறை விசாரணை நடத்தி வருகிறது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்மார்ட் வாகனங்கள், அமெரிக்க மக்களின் தகவல்களை திருட வாய்ப்பு உள்ளதாகவும், இந்த தகவல்கள் சீனாவுக்கு அனுப்பப்படலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த விசாரணை நடத்தப்படுகிறது. சீன கார்களால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து என அதிபர் ஜோபிடன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். ஆனால், விசாரணை துவக்க நிலையில் இருப்பதால், சீன கார்களுக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்படுமா என்பது குறித்து தற்போது கூற இயலாது என அமெரிக்க அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். ஆளில்லாமல் இயக்கப்படும் சீன ஸ்மார்ட் கார்கள் தகவல்களை திருடாமல் தடுக்க புதிய வரைவு விதிகள் வெளியிடப்படலாம் எனவும் அவர்கள் கூறினர். சீன தயாரிப்பான பிஒய்டி எலக்ட்ரிக் கார்கள் தென்கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. மிகப்பெரிய எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனமான பிஒய்டி, அமெரிக்காவில் தங்கள் கார்களை சந்தைப்படுத்துவதற்கான திட்டம் எதுவும் இல்லை என தெளிவுபடுத்தியுள்ளது.

 

Related posts

நாமக்கல் முட்டை விலை ரூ.5.15 ஆக நீடிப்பு

நீட் முறைகேடு – குஜராத் பள்ளி உரிமையாளர் கைது

விஷச் சாராய வழக்கு: 9 பேரிடம் விசாரணை