சைனீஸ் முதல் பர்மீஸ் வரை… பட்ஜெட் விலையில் ஸ்டார் ஹோட்டல் உணவுகள்!

சோஷியல் மீடியாக்களில் நாம் அடிக்கடி பார்க்கும் வீடியோக்கள் பெரும்பாலும் உணவு சார்ந்தவைதான். சைனீஸ், அரேபியன் போன்ற வெளிநாட்டு உணவுகளில் இருந்து ஹைதராபாத், பர்மா போன்ற வெளியூர் உணவு வரை அனைத்தையுமே சோசியல் மீடியாக்களில் பார்த்து வருகிறோம். அவற்றைக் காணும்போதே சுவைத்துப் பார்க்க வேண்டும் என்ற ஆசை வரும். சென்னையில் இந்த மாதிரியான உணவுகளைச் சாப்பிட வேண்டுமென்றால் பெரிய பெரிய ஸ்டார் ஹோட்டல்களுக்குத்தான் செல்ல வேண்டும். ஆனால், அது எல்லோராலும் முடியாத காரியம். அப்படி எல்லோரும் விரும்புகிற வெளிநாட்டு உணவுகளைக் குறைந்த விலைக்கு குடும்பத்தோடு சாப்பிட வேண்டும் என நினைப்பவர்களுக்கு ‘டார்ஜிலிங் கஃபே’ நல்ல சாய்ஸ். சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் இயங்கி வரும் இந்த கஃபே, சைனீஸ் உணவுகளைத் தொடர்ந்து பர்மா, திபெத் போன்ற இடங்களில் கிடைக்கும் உணவுகளை அசல் சுவையில் கொடுத்துவருகிறது.

“ இந்த மாதிரியான வெரைட்டி உணவுகளைச் சாப்பிடுவதற்கு தனிக்கூட்டமே இருக்கிறது. பர்மீஸ் உணவுகளை சாப்பிடுவதற்கு தொலைவில் இருந்து நிறைய பேர் வருகிறார்கள். காத்திருந்து சாப்பிட்டுவிட்டுச் செல்கிறார்கள்’’ என மகிழ்ச்சியோடு பேசத் தொடங்குகிறார் இந்த உணவகத்தின் உரிமையாளர் சந்திரகலா.“சொந்த ஊர் பெங்களூராக இருந்தாலும் படித்தது, வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். பிஎஸ்சி ஹோம் சயின்ஸ் படித்துவிட்டு, ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்தேன். அதன்பிறகு, சில வருடங்கள் வெளிநாட்டில் இருக்கும்படி ஆனது. மீண்டும் சென்னை வந்து பத்து வருடங்கள் ஆனது. படிக்கும் காலத்தில் இருந்தே ஏதாவது சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்ற ஆசை எனக்கு அதிகம். எனக்கு சமையல் ரொம்ப பிடிக்கும். அதிலும் அசைவ உணவுகளை ரொம்பவே நன்றாக சமைப்பேன். அதனால், எனக்கு ஹோட்டல் தொடங்க வேண்டும் என்ற யோசனை இருந்தது. ஹோட்டல் என்றால் எல்லா இடத்திலும் கிடைக்கக்கூடிய உணவுகளைக் கொடுக்காமல் ஏதாவது வித்தியாசமாக, அதே சமயம் அனைவருக்கும் பிடித்த உணவுகளைக் கொடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. சென்னையில் லக்னோ பிரியாணி எங்குமே கிடைக்காது. அதனால், அந்த பிரியாணி செய்து விற்பனை செய்யலாம் என ஆசை இருந்தது.

அந்த பிரியாணி செய்வதற்கு சமையல் தெரிந்த மாஸ்டர்ஸ் யாரும் கிடைக்காததால் பிரியாணி கடை போட முடியவில்லை. அதன்பிறகு, சைனீஸ் உணவகம் தொடங்கலாம் என யோசித்து இப்போது இந்த உணவகத்தை நடத்தி வருகிறேன். சைனீஸ் என்றால் மற்ற உணவகங்களில் கிடைக்கக்கூடிய உணவுகள் மாதிரி இல்லாமல், அந்த நாட்டில் கிடைக்கக்கூடிய அசல் உணவுகளை கொடுக்க வேண்டும் என்று யோசித்தேன். அதனாலே, எல்லா வகையான சைனீஸ் உணவுகளையும் சமைக்கக்கூடிய ஸ்டார் ஹோட்டல் செஃப் ஒருவரை எங்கள் உணவகத்தில் செஃப் ஆக வைத்திருக்கிறோம். சைனீஸ் என்றால் நமக்குத் தெரிந்தது ஃப்ரைடு ரைஸும், நூடுல்ஸும் தான். ஆனால், அதுமட்டும் கிடையாது. நமது ஊரைப் போலவே சைனீஸிலும் ஒவ்வொரு ஊருக்கும், ஒவ்வொரு கிராமத்திற்கும் தனித்தனி உணவு இருக்கிறது. நமது ஊரில் ஒரே பிரியாணி ஒவ்வொரு ஊரிலும் வேறுவேறு மாதிரியாக தயாரிக்கப்படுவது மாதிரியே அங்கேயும் ஒவ்வொரு உணவும் ஊர் சார்ந்து வேறுபடும். பல உணவுகள் அந்தந்த ஊர் பெயரிலேயே இருக்கும். இவை அனைத்தையும் நாங்கள் கொடுத்து வருகிறோம். சைனீஸ் உணவுகளுக்கு அடுத்தபடியாக நமது உணவகத்தில் பர்மா உணவுகள் கிடைக்கும்.

உலக அளவில் பர்மா உணவுகளுக்கு தனித்த அடையாளம் இருக்கிறது. ஏனெனில் அந்த நாட்டில் உணவுக் கலாச்சாரம் ரொம்ப அழகானது. பெரும்பாலும் பர்மா உணவுகள் அனைத்தும் ஸ்ட்ரீட் ஃபுட் உணவுகளாகவே இருக்கும். நமக்குத் தெரிந்த பர்மீஸ் உணவு என்றால் அது அத்தோ, பேஜோ தான். ஆனால், அதைத் தாண்டியும் பல உணவுகள் அங்கு ஸ்பெஷல் உணவாக இருக்கும். நான் இப்போது சென்னையில் இருந்தாலும் எனது கணவரின் அம்மா, அப்பா அதாவது எனது அத்தை, மாமா அவர்கள் இருந்த இடம் பர்மா தான். ரொம்ப வருடம் பர்மாவில் இருந்ததால் பர்மீஸ் உணவுகள் செய்வதும் அவர்களுக்கு தெரியும். இப்போதும் கூட எங்கள் வீட்டில் மாதத்திற்கு ஒருமுறையாவது பர்மீஸ் உணவுகள் செய்து குடும்பத்தோடு சாப்பிடுவோம். அந்தளவிற்கு எங்களுக்கும் பர்மீஸ் உணவுகளுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. அசலான பர்மா உணவுகளைக் கொடுக்கலாம் என்ற நோக்கத்தில் அந்த உணவுகளையும் எனது உணவகத்தில் கொடுத்து வருகிறேன். பர்மா உணவு செய்முறையின்போது எந்த சந்தேகம் வந்தாலும் எனது அத்தையிடம் கேட்டு செய்கிறேன். ஒவ்வொரு உணவின் தயாரிப்பின்போதும் மிகக் கவனம் எடுத்து அதை செய்கிறேன். எனது உணவகத்தில் இருக்கிற செஃப் சைனீஸ் உணவுகள்தான் செய்வார்.

அவருக்கு, தொடர்ந்து பர்மா உணவுகள் செய்வது பற்றி பயிற்சி கொடுத்து இப்போது அவரும் எல்லா வகையான பர்மா உணவுகளையும் செய்து வருகிறார்.உணவுகளைப் பொருத்தவரையில் வெஜ்ஜில் இருந்து நான்வெஜ் வரை அனைத்துமே தயாரிக்கிறோம். அதேபோல் சூப், மோமோஸ், ஸ்டார்டர்ஸ் என எல்லாம் இருக்கிறது. வெஜ் ஸ்டார்டர்ஸில் செஷ்வான் பேபி கார்ன், கோல்டன் ஃப்ரைடு வோண்டன்ஸ், கிரிஸ்பி ஃப்ரைடு வெஜிடபிள், ஸ்பிரிங் ரோல் என எல்லாமே இருக்கிறது. நான்வெஜ் ஸ்டார்டர்ஸில் லாலிபப், பெப்பர் லாலிபப், ட்ராகன் சிக்கன், சிக்கன் மஜ்சூரியன், குங்ஃபா சிக்கன், லெமன் சிக்கன் என சிக்கனில் மட்டும் 14 வகையான ஸ்டார்டர்ஸ் இருக்கிறது. அதேபோல முட்டையிலும் ஸ்டார்டர்ஸ் இருக்கிறது. இறாலில் ஹாட் கார்லிக் ப்ரான், ட்ராகன் ப்ரான், சில்லி பிரான் இருக்கிறது. மீன்களிலும் ஸ்டார்டர்ஸ் இருக்கிறது.

சைனீஸ் ரைஸில் 10 வகையான வெரைட்டி. அதேபோல, நூடுல்ஸில் 10 வகையான வெரைட்டி இருக்கிறது. பர்மீஸ் உணவுகளில் அத்தோ, மொஹிங்கா, கவ்ஷே என அனைத்துமே இருக்கிறது. அதுபோக, பர்மீஸில் வெஜ் அன்ட் நான்வெஜ்ஜில் கிரேவி, ஸ்டார்டர்ஸ் என எல்லாமே இருக்கிறது. உணவகத்திற்கு சாப்பிட வருபவர்கள் ஒவ்வொரு உணவையும் சுவைத்துப் பார்த்துவிட்டு மிகுந்த மகிழ்ச்சியோடு செல்கிறார்கள். பலர், இந்த உணவுகளைச் சாப்பிடுவதற்கு மீண்டும் மீண்டும் வருகிறார்கள். பெரிய ஸ்டார் உணவகங்களில் கிடைக்கக்கூடிய உணவுகளைக் குறைந்த விலையில் நமது உணவகத்தில் கொடுத்து வருவதால் நமது உணவகத்திற்கும், உணவிற்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது. இவை அனைத்திற்கும் எனக்கு உதவியாகவும் உறுதுணையாகவும் இருப்பது எனது கணவர்தான். அவரின் துணையோடுதான் இந்தத் தொழிலை இவ்வளவு நல்ல முறையில் கொண்டு செல்ல முடிகிறது’’ என மகிழ்ச்சியோடு பேசி முடித்தார் சந்திரகலா.

– ச.விவேக்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்

Related posts

ஆட்சி அமைக்கப் போவது யார்? இங்கிலாந்தில் இன்று பொதுத்தேர்தல்: சுனக் – ஸ்டார்மர் இடையே கடும் போட்டி

காதலுக்கு ஊழியர் மறுப்பு; கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு: சிறுவன், 3 பேர் கைது

இரட்டை கொலை வழக்கு : 3 பேருக்கு இரட்டை ஆயுள்