மாமல்லபுரம் அருகே சீரமைத்த பிறகும் திறக்கப்படாத சிறுவர் பூங்கா

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகேரூ.15 லட்சம் மதிப்பில் புதிதாக சீரமைக்கப்பட்டும், கடந்த 2 ஆண்டுகளாக ஒரு சிறுவர் பூங்கா பயன்பாட்டுக்கு திறக்கப்படவில்லை. அப்பூங்காவை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டுவர பேரூராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். மாமல்லபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பூஞ்சேரி, இசிஆர் சாலையை ஒட்டி ஒரு தனியார் மருத்துவமனை நுழைவுவாயிலுக்கு அருகே, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பேரூராட்சி சார்பில் ஒரு சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. அப்பூங்காவை முறையாக பராமரிக்காமல் விட்டதால், அங்கு அடர்ந்து முட்புதர் காடுகள் உருவாகிவிட்டன. அதிலிருந்து ஏராளமான பாம்புகள், பூச்சிகள் உள்பட பல்வேறு விஷ ஜந்துக்கள் வெளிவர துவங்கியதால், அங்கு விளையாடுவதற்கு சிறுவர்கள் அச்சப்பட்டனர். அப்பூங்காவை முறையாக சீரமைத்து, உரிய முறையில் பராமரித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.

இக்கோரிக்கையை ஏற்று, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்ரூ.15 லட்சம் மதிப்பில் பூஞ்சேரியில் உள்ள சிறுவர் பூங்காவில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சீரமைக்கும் பணிகள் நடைபெற்றன. மேலும், பூங்காவை சுற்றிலும் நடைபாதை அமைத்து, சுற்றுச்சுவருக்கு வர்ணம் தீட்டி, முட்புதர்களை அகற்றி, பலவகை செடிகள் நட்டு, மேடுபள்ளங்களை சீரமைக்கும் பணிகள் நடந்து நிறைவு பெற்றன. எனினும், அந்த சிறுவர் பூங்கா கடந்த 2 ஆண்டுகளாக இதுவரை பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் பூட்டியே வைத்துள்ளனர். இதனால் அங்குள்ள செடிகள் கருகி, நடைபாதைகளில் உடைப்பு ஏற்பட்டு, சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் பாழாகி வருகின்றன. இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இப்பூங்காவை மீண்டும் முறையாக சீரமைத்து, விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர பேரூராட்சி உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

 

Related posts

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கவில்லை

யானைகள், புலிகள் நடமாட்டத்தை தொடர்ந்து அரிய வகை செந்நாய்கள் என்ட்ரி : மூணாறு தொழிலாளர்கள் கலக்கம்

ரெட்டியார்சத்திரம் அருகே நான்கு வழிச்சாலை பணிக்காக 40 தென்னை மரங்கள், 2 வீடுகள் அகற்றம் : இழப்பீடு கோரி விவசாயிகள் போராட்டம்