ரூ.250 கோடியில் குழந்தைகளுக்கான சிறப்பு பன்னோக்கு மருத்துவமனை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

சென்னை: கிண்டி, தஞ்சாவூரில் குழந்தைகளுக்கான உயர் சிறப்பு பன்னோக்கு மருத்துவமனை ரூ.250 கோடியில் நிறுவப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். தமிழக சட்டப் பேரவையில் நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்த பின்பு அமைச்சர் மா.சுப்பிரமணியன் 110 அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் முக்கிய அறிவிப்புகள் வருமாறு:

* கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை- கிண்டி வளாகத்திலும், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி ராசா மிராசுதார் மருத்துவமனையிலும் குழந்தைகளுக்கான உயர் சிறப்பு பன்னோக்கு மருத்துவமனை ரூ.250 கோடியில் நிறுவப்படும்.

* சென்னை கே.கே. நகரில் உள்ள அரசு புனர்வாழ்வு மருத்துவமனை வளாகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான பிரத்யேக மருத்துவமனை ரூ.50 கோடியில் அமைக்கப்படும்.

* தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ், ஆறு மண்டல ஆராய்ச்சி மையங்கள் ரூ.16 கோடியில் நிறுவப்படும்.

* கருப்பைவாய், மார்பக மற்றும் வாய் புற்றுநோய்களை பரிசோதனைகள் மூலம் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தகுந்த சிகிச்சையளிக்கும் திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் ரூ.27 கோடியில் விரிவுப்படுத்தப்படும்.

* தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துமனையில் சிறுநீரகவியல் அறுவை சிகிச்சை மற்றும் இரைப்பை குடலியல் ஆகிய இரண்டு புதிய சிறப்புத் துறைகள் உருவாக்கப்படும். மேலும் விபத்து மற்றும் அவசரகால சிகிச்சைப் பிரிவு சேவைகளை மேம்படுத்த 5 அவசரகால மருத்துவ அலுவலர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும்.

* சிறப்பு பச்சிளம் குழந்தை பராமரிப்பு பிரிவிலிருந்து விடுவிக்கப்படும் குறைப் பிரசவம் மற்றும் எடை குறைவான பச்சிளம் குழந்தைகளை தொடர்ந்து அவர்களது இல்லங்களிலேயே தொழில்நுட்ப உதவியோடு கண்காணிப்பதற்கான முன்னோடித் திட்டம் ரூ.1.28 கோடியில் 7 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்.

* நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் நோயாளிகளில் நோய் கட்டுப்பாட்டின்மையால் வரக்கூடிய விழித்திரை மற்றும் சிறுநீரக பாதிப்புகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கான சிறப்பு பரிசோதனைகள் ரூ.3.19 கோடியில் மாநிலம் முழுவதும் நடத்தப்படும்.

* நீரிழிவு நோயினால் ஏற்படும் பாத பாதிப்புகளை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து, கால் இழப்பினைத் தடுப்பதற்கான ஒருங்கிணைந்த பாதம் பாதுகாப்போம் திட்டம் ரூ.26.62 கோடியில் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும்.

* 4 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இருதய உள்ளூடுருவி கதிரியக்க ஆய்வகங்கள் ரூ.32 கோடியில் நிறுவப்படும்.

* அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் வட்ட மருத்துவமனைகளுக்கு ரூ.101 கோடியில் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படும்.

* சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகத்தில் ரூ.18.13 கோடியில் கூடுதல் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

* 25 அரசு மருத்துவக் கல்லூரிகளிலுள்ள 100 வகுப்பறைகள் நவீன தொழில்நுட்பத்துடன் ரூ.50 கோடியில் தரம் உயர்த்தப்படும்.

* அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதியோர் பராமரிப்பு சேவை உதவியாளர் என்ற புதிய சான்றிதழ் படிப்பு தொடங்கப்படும்.

* 8 அரசு மருத்துவமனைகளில் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவுகள் ரூ.190 கோடியில் நிறுவப்படும்.

* 18 மாவட்டங்களில் மாவட்ட ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகங்கள் ரூ.22.50 கோடியில் நிறுவப்படும்.

* தாய்சேய் நல சேவைகளை மேலும் வலுப்படுத்தும் விதமாக நான்கு அரசு மருத்துவமகைளுக்கு மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்புக்கான புதிய கட்டடங்கள் ரூ.20.44 கோடியில் கட்டப்படும்.

* கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனைக்கு உயர்தர மருத்துவ உபகரணங்கள் மற்றும் நடமாடும் ரத்த சேமிப்பு வாகனம் ரூ.61.25 கோடியில் வழங்கப்படும்.

* ஊரகப் பகுதிகளில் வாடகை மற்றும் பழைய கட்டங்களில் செயல்பட்டு வரும் 164 துணை சுகாதார நிலையங்களுக்கு ரூ.75.20 கோடியில் புதிய கட்டடங்கள் கட்டித் தரப்படும்.

* 74 வட்டார பொது சுகாதார அலகுகளுக்கான புதிய கட்டடங்கள் ரூ.48.10 கோடியில் கட்டப்படும்.

Related posts

அண்ணா பல்கலைக்கு குண்டு மிரட்டல்

அமைச்சர் சேகர்பாபு தலைமையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை

தமிழ்நாடு பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு தீர்மானத்திற்கு ஒப்புதல் தர வேண்டும்: திமுக எம்.பி. ராஜேஷ்குமார் வலியுறுத்தல்