குழந்தைகள் ஆபாச படம் பட்டதாரி வாலிபருக்கு ஆயுள் தண்டனை

தஞ்சாவூர்: சிறார்களை ஆபாசமாக படம் எடுத்து இணையதளத்தில் பதிவேற்றிய வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து தஞ்சாவூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. ஆன்லைன் குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளைக் கையாள சிபிஐ 2020ல் ஒரு சிறப்புப் பிரிவை அமைத்தது. தொடர்ந்து, 2022ல் இண்டர்போலின் சர்வதேச சிறுவர் பாலியல் துஷ்பிரயோக தரவுத்தளத்தில் சேர்ந்தது. இண்டர்போல் அமைப்பின் குழந்தை பாலியல் சுரண்டல் தரவுத்தளத்தில் இருந்து, சிறாருக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான படங்கள் மற்றும் வீடியோக்களை சிபிஐ கண்டறிந்தது. இதில் கிடைத்த புகைப்படங்களை சைபர் தடயவியல் கருவிகளை கொண்டு பகுப்பாய்வு செய்ததில், சம்பவம் நடந்த இடம் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு இடம் என கண்டறியப்பட்டது.

திரட்டப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலம் அருகே பூண்டி தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் விக்டர் ஜேம்ஸ் ராஜா (36) என்பவரை பிடித்து விசாரித்தனர். இதையடுத்து அவரது வீட்டில் நடத்திய சோதனையில் லேப்டாப் உள்ளிட்ட மின்னணு சாதனங்களும் மீட்கப்பட்டுள்ளன. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல்வேறு நாடுகளில் உள்ள நண்பர்களுடன் சேர்ந்து ஆபாச படத்தை கட்டாயப்படுத்தி பார்க்க வைத்து 5-18 வயதுக்கு உள்பட்ட சிறுவர், சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்டது தெரியவந்தது.

இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் 2023, மார்ச் 16ம் தேதி விக்டர் ஜேம்ஸ் ராஜாவை கைது செய்தனர். இந்த வழக்கு தஞ்சாவூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.சுந்தரராஜ், ஜேம்ஸ் விக்டர் ராஜாவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.6.54 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுவர், சிறுமிக்கு தலா ரூ.4லட்சம் நிவாரணம் வழங்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Related posts

மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் மின்விளக்கு எரியாமல் இருளில் மூழ்கிய நடைபாதை: சுற்றுலா பயணிகள் அவதி

முதலில் வருவோருக்கு முதலில் முன்னுரிமைத் திட்டத்தின் கீழ் 402 குடியிருப்புகள் விற்பனை

விமான சாகச நிகழ்ச்சி; வெயில் தாக்கத்தால் 5 பேர் உயிரிழந்தது குறித்து உயர்மட்ட விசாரணை தேவை: தமிழ்நாடு அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்