நாட்டில் 1.58 கோடி குழந்தைகள் போதைக்கு அடிமையாகியுள்ளனர்: ஐகோர்ட் கிளை நீதிபதி வேதனை

மதுரை: நாட்டில் 1.58 கோடி குழந்தைகள் போதைக்கு அடிமையாகியுள்ளதாக ஐகோர்ட் கிளை நீதிபதி கூறியுள்ளார். மதுரை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிட்டம்பட்டி பகுதியில் காரில் கஞ்சா கடத்துவதாக போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், போலீசார் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டபோது ஒரு காரில் 85 கிலோ கஞ்சா கடத்தி வந்த கணேசன் என்பவரை கடந்த 2016ல் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த மதுரை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம், கணேசனுக்கு 10 ஆண்டு சிறைதண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது. இதை எதிர்த்து கணேசன், ஐகோர்ட் மதுரை கிளையில் அப்பீல் மனு செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன், ‘‘மனுதாரர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு தண்டனை வழங்கியது சரிதான். எனவே, அந்த உத்தரவில் தலையிட விரும்பவில்லை. நாட்டில் 10 முதல் 17 வயது வரையுள்ள 1.58 கோடி குழந்தைகள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர். போதைக்கு அடிமையானதால் பலவித பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக குற்றச்சம்பவங்கள் மட்டுமின்றி, மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு ஆளாகின்றனர். போதையால் 2011 முதல் 2021 வரையிலான 10 ஆண்டுகளில் 10,560 பேர் தற்கொலை செய்துள்ளனர். இந்த மனுவை பொருத்தவரை கீழமை நீதிமன்றம் தண்டனை வழங்கியது சரியே என்பதால், இந்த அப்பீல் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’’ என உத்தரவிட்டுள்ளார்.

Related posts

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள ரவுடி சம்போ செந்திலை பிடிக்க துபாய் விரைகிறது சென்னை போலீஸ்

ஓசூர் அருகே பதுக்கி வைத்திருந்த ரூ.17 லட்சம் பட்டாசுகள் பறிமுதல்

மாலத்தீவு நாட்டுடன் இறுதி செய்யப்பட்ட ஒப்பந்தங்களில் பிரதமர் மோடி கையெழுத்து..!!