Thursday, June 27, 2024
Home » குழந்தையாக வரும் தெய்வம் பாலா திரிபுரசுந்தரி

குழந்தையாக வரும் தெய்வம் பாலா திரிபுரசுந்தரி

by Kalaivani Saravanan

நன்றி குங்குமம் ஆன்மிகம்

வெல்லக் கட்டியில் எந்தப் பக்கம் இனிப்பு என்று கேட்பதைப் போலத்தான் சக்தி வழிபாட்டில் எந்த வழிபாடு உயர்ந்தது என்பது! அதாவது சக்தியை எந்த உருவில் எப்படி வழிபட்டாலும் அது உள்ளம் நெகிழச் செய்யும் அற்புத ஆராதனைதான். அந்த வகையில் பாலா திரிபுரசுந்தரியைப் பற்றியும் அவள் வழிபாட்டு முறைகள் பற்றியும் அறிவோம்.

பாலாதிரிபுரசுந்தரி த்யானஸ்லோகம்

அருணகிரண ஜாலை: ரஞ்சிதாசாவகாசா
வித்ருத ஜப படீகா புஸ்தகாபீதி ஹஸ்தா
இதரகரவராட்யா: புல்ஹ கல்ஹார ஸம்ஸ்தா
நிவஸது ஹ்ருதி பாலா நித்ய கல்யாண சீலா:
அக்ஷமாலைதான் வித்ருத படீகா

ஜபம் செய்ய ஏற்றது அக்ஷமாலை. அ முதல் க்ஷ வரையிலான 51 மாத்ருகா எழுத்துக்களை தன்னுள் கொண்டதால் அக்ஷமாலை என்று அழைக்கப்படுகிறது.

பொதுப் பொருள்: செந்நிறக் கிரணங்களால் சூழப்பட்டவள் பாலா திரிபுரசுந்தரி. கைகளில் அபயமுத்திரையுடன் அக்ஷமாலையையும் புத்தகத்தையும் ஏந்தி அருள்பவள். தாமரைப்பூவில் அமர்ந்து கோலோச்சுபவள். அந்த பாலா தேவி என்னைக் காக்கட்டும்.

(இதே தியான ஸ்லோகக் கருத்து பராசக்தி மாலையிலும் உள்ளது.)
செங்கதிராற்றிசை பத்தையும் செம்மை செய்
செவ்வுருவும்
அங்கைகள் நான்கில் வரதாப மணியக்
கவடம்
துங்க நற்புத்தகம் தாங்கியணீன்
செந்தாரணியும்
பங்கய வாசனப் பாலைக் கமலைப்
பராசக்தியே.
என்கிறது.
பாலாத்ரியக்ஷரி மந்திரம்
மந்த்ரம்
ஐம் க்லீம் ஸௌ: ஸௌ: க்லீம் ஐம்

இதில் ஐம் எனும் பீஜம் வாக்பவபீஜம் எனப்படுகிறது. பிரம்மா, சரஸ்வதி போன்றோரின் அம்சமாக இந்த பீஜம் விளங்குகிறது. இந்த பீஜம் நல்ல வாக்குவன்மை (பேச்சாற்றல், வாக்குபலிதம், ஞானம், அறிவு போன்றவற்றைத் தரும்.

க்லீம் எனும் பீஜம் காமராஜபீஜம் எனப்படுகிறது. இதில் விஷ்ணு, லக்ஷ்மி, காளி, மன்மதன் போன்றோர் அடக்கம். இந்த பீஜம் நல்ல செல்வம், செல்வாக்கு, கௌரவம், வசீகரசக்தி, உடல், மன பலம் போன்றவற்றைத் தரும்.

ஸௌ: பீஜத்தில் சிவன், பார்வதி, முருகன் போன்றோர் அடக்கம். ஸௌ: எனும் இந்த பீஜத்தில் இருந்தே சௌபாக்கியம் எனும் வார்த்தை தோன்றியதாக வேதம் கூறுகிறது. இப்பீஜம் சௌபாக்கியம் நிறைந்த வாழ்வினைத் தரும்.

இவ்வாறு மும்மூர்த்திகளின் பீஜத்தையும் ஒருங்கே தன் மந்திரத்தினுள் கொண்டவள் பாலா திரிபுரசுந்தரி. இவள் மந்திரத்தை முறையாய் ஜபித்தால் நல்வாழ்வு வாழ்ந்து ஆன்மீகத்திலும், வாழ்விலும் உயர்ந்த நிலையை அடையலாம். அம்பிகையை பல வடிவங்களில் பக்தர்கள் வழிபடுகின்றனர். அவற்றில் குழந்தை வடிவமாக பாலா திரிபுரசுந்தரியாக அருளும் வடிவத்தின் பெருமைகள் சொல்லிலடங்காதவை.

லலிதா பரமேஸ்வரியின் விளையாட்டின் ரூபமாக பண்டாசுர வதத்தின்போது தோன்றியவள் பாலாதேவி. மன்மதனை ஈசன் எரித்த சாம்பலிலிருந்து உற்பத்தி யானவன் பண்டன் எனும் அசுரன். ஒரு பெண்ணைத் தவிர தனக்கு யாராலும் மரணம் நேரக்கூடாது என வரம் பெற்றான். அந்த உற்சாகத்தில் அவன் தேவர்களையும் ஏனையோரையும் துன்புறுத்தினான். அவர்கள் பராசக்தியைச் சரணடைய, தேவி தன் சேனைகளோடு போர்புரிந்து பண்டனை வதைத்தாள். அந்த சரித்திரமே லலிதோபாக்யானம் எனும் பிரசித்தி பெற்ற நூலாக விளங்கிவருகிறது. பிரம்மாண்ட புராணத்தில் உள்ள லலிதோபாக்யானத்தில் பாலாவின் பெருமையை விளக்கும் 125 ஸ்லோகங்கள் உள்ளன.

பண்டாசுர வதம் நடந்தபோது பண்டாசுரனின் புதல்வர்கள் போருக்கு வந்ததும் அவர்களை வதம் செய்ய பாலாதேவி தோன்றினாள். லலிதையின் அங்கத்திலிருந்து தோன்றியவள். இப்போதும் ஒன்பது வயது தோற்றத்தோடு கூடியதால் ‘ஸதாநவவர்ஷா’ எனவும், (ஸதா & எப்போதும், நவவர்ஷா & ஒன்பது வயதினள்) வெள்ளை அன்னங்கள் பூட்டிய கர்ணீ ரதத்தில் ஏறி பண்டனின் புதல்வர்களை அழித்ததால் ‘பண்டபுத்ர வதோத்யுக்த பாலா விக்ரம நந்திதா’ எனவும் லலிதா ஸஹஸ்ர நாமத்தில் வஸின்யாதி வாக்தேவதைகள் இத்தேவியைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர். இந்த வசின்யாதி வாக்தேவதைகள் எட்டு பேர்களே திருமீயச்சூரில் அன்னையின் அருளாணைப்படி லலிதா ஸஹஸ்ரநாமத்தை அரங்கேற்றியவர்கள்.

காஞ்சி காமாட்சியின் முன் ஆதிசங்கரர் நிறுவிய சக்கரத்தில் அமர்ந்து கருணையுடன் ஆட்சி புரிபவர்கள். சிறு குழந்தையைப் போல விளையாட்டில் ஆசை கொண்டதால் அம்பிகைக்கு பாலா எனும் பெயர் ஏற்பட்டதாக திரிபுரா ரகஸ்யம் எனும் நூல் விளக்குகிறது. அம்பிகை வழிபாட்டின் உச்சபட்ச வழிபாடான மஹாக்ஷோடஸி தேவிக்கு உள்ள பெருமைகள் யாவும் பாலா லீலா வினோதியான இந்த திரிபுரசுந்தரிக்கும் உண்டு. பாலாதேவியின் திருவருள் கிட்டினால் லலிதாம்பிகையின் திருவருளும் உடனே கிட்டும் என்பது உபாசனா ரகஸ்யம். இந்த பாலா மந்திரம் த்ரைலோக்ய வசகாரிணீ என்று மந்திர சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.

பட்டத்து இளவரசியான பாலா, அருணகிரண ஜாலங்கள் எனும் இளஞ்சூரியனின் நிறத்தைப் போன்ற தன் மேனியில் பேரொளியால் திக்குத் திசைகளையெல்லாம் செம்மை நிறப்படுத்துகிறாள். லலிதமான பேரழகுடைய பாலா தன் அதிரூப சௌந்தர்யத்தால் அழகாய்ப் பொலிந்து அருள்கிறாள்.

இவள் தன் இடக்கரத்தில் நூலை ஏந்தியிருப்பது சகல வித்யைகளையும் சாதகர்களுக்கு அருளவே. இவள் மறுகரத்தில் கொண்டுள்ள ஜபமாலை, அம்பிகையின் நாமத்தை அனைவரும் ஜபிக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.அபய வரத கரங்கள் பக்தர்களைக் காக்கவும், கேட்ட வரங்களைத் தரவும் தயாராக உள்ளன. நித்ய கல்யாண சீலையான இவள், சகல நலன்களையும் இம்மையில் தந்து, வறுமையில் வீடு பேற்றையும் அளிக்க வல்லவள்.

பட்டுப்பாவாடை, சட்டையுடன், சர்வ ரத்னாலங்காரங்களுடன் நட்சத்திரங்களைப் பழிக்கும் மூக்குத்தியை அணிந்திருக்கிறாள். இதை ‘தாராகாந்தி திரஸ்காரி நாஸாபரணபாஸுரா’ எனும் லலிதா ஸஹஸ்ரநாமம் உணர்த்துகிறது. மேலும் அது த்ரயக்ஷரீ, பாலா லீலா விநோதினீ என்று பல்வேறாக பாலாம்பிகையை போற்றுகிறது.இத்தேவிக்கு நவாவரணம், ஸஹஸ்ர நாமம், கட்கமாலா போன்ற பல்வேறு பூஜை முறைகள் உண்டு. இருப்பினும் பேரன்பால் அவளை வழிபடுவதையே அவள் மிகவும் விரும்புவாள்.

திரிபுரம் என்பதற்கு பல்வேறு பொருட்கள் உண்டு. இவள் மும்மூர்த்திகளுக்கும் மூத்தவள் என்றும் பொருள் கொள்ளலாம். புரை எனில் மூத்தவள் என்று பொருள். மும்மலங்கள், முச்சக்திகள், மூன்று காலங்கள், மூவுலகங்கள் முதலிய மூவகை பிரிவுகளுக்கெல்லாம் இவள் உரியவள் என்பதை கௌடபாத சூத்திர உரை கூறுகின்றது. சந்திர கண்டம், சூரிய கண்டம், அக்னி கண்டம் என்னும் முப்பிரிவுடைய சக்ரத்திற்கு இவளே தலைவி என்பதை அபிராமி பட்டர்,

பொருந்திய முப்புரை செப்புரை செய்யும் புணர்முலையால்
வருந்திய வஞ்சி மருங்குன் மனோன்மணி வார்சடையோன்
அருந்திய நஞ்சமுதாக்கிய அம்பிகையம்புயமேல்
திருந்திய சுந்தரி பாதமென் சென்னியதே

– என்று பாடிக் கொண்டாடியுள்ளார்.

இதில் மனோன்மணி என்பது அம்பிகையின் திருநாமங்களில் ஒன்று. மனதை அழித்து ஞான நிலைக்கு அழைத்துச் செல்பவள் என்பது மனோன்மணியின் பொருள். புருவ மத்திக்கு மேலே பிரம்மரந்திரத்திற்கு கீழ் உள்ள பிந்து முதலிய எண்வகை நிலைகளில் இறுதி நிலை உன்மனி எனும் மனோன் மணியாகும். அங்கு உறைவதால் இவளுக்கு மனோன்மணி என்றும் பெயர்.

பற்றற்ற மனம் இயங்குதல் அற்று நிற்கும் நிலை உன்மனி. அந்நிலையில் அருள்புரிவதால் அம்பிகைக்கு இப்பெயர் ஏற்பட்டது. மனோன்மணி வடிவாய் இயங்குபவள் இந்த பாலாதேவி. குண்டலினி யோகத்தில் முதல் இரு ஆதார சக்கரங்களில் அம்பிகை பாலாவாகவும், அடுத்த இரண்டு ஆதாரங்களில் தருணியாகவும், அடுத்த இரண்டு ஆதாரங்களில் சுமங்கலியாகவும். ஸஹஸ்ராரத்தில் சுவாசினியாகவும் பூஜிக்கப்படுகிறாள்.

திருமூலர் தன் திருமந்திரத்தில்,
சக்தி என்பாள் ஒரு சாதகப் பெண் பிள்ளை
முக்திக்கும் நாயகி என்பதை அறிகிலர்
பத்தியை பாழில் உருத்த அப்பாவிகள்
சுத்திய நாய் போல கதறுகின்றனவே (1199)

பராசக்தி சாதகர்களுக்கு சாதகமான பாலாவாவாள். அவளே முக்திக்கும் தலைவி. இதை மக்கள் அறியாமலிருக்கிறார்களே என்று பாடியுள்ளார்.

கருவூர் சித்தர்,
ஆதியந்தம் வாலையவள் இருந்த வீடே
ஆச்சரியம் மெத்த மெத்த அதுதான் பாரு

– என்று பாடியுள்ளார்.

அம்பிகையை வாலை பெண்ணாக முன் வைத்து அவளது மாயை முதலான கூறுகளை பல வடிவங்களாக்கி அவளை கன்னியாகவும் மன அடக்கத்தை சோதிக்கும் சிவகாமசுந்தரியாகவும் விளையாட்டு வம்புக்காரியாகவும் சித்தரித்துள்ளார்.

மேலும் முக்கோண வட்ட கிணற்றுக்குள்ளே மூல மண்டல வாசி பழக்கத்திலே
அக்கோண வட்டச் சக்கரத் திக்வாலை அமர்ந்திருக்கிறாள் வாலைப் பெண்ணே
காலனை காலால் உதைத்தவளாம் வாலை ஆலகால விடம் உண்டவளாம்
மாளாச் செகத்தைப் படைத்தவள் இந்த மானுடன் கோட்டை பிடித்தவளாம்

– என்று போற்றுகிறார்.

கொங்கண சித்தர் அருளிய வாலைகும்மி பிரசித்தி பெற்றது. பாலா நம் உடம்பில் குடி கொண்டுள்ளவள் என்பதை, ‘மானுடக் கோட்டையை பிடித்தனளாம்’ என்கிறார். நாம் தூங்கும் போதும் அவள் நம்மைக் காப்பதையே கடமையாகக் கொண்டவள். கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவள் பாலா என்கிறார் அவர்.பாலை எனும் பாலாதிரிபுரசுந்தரி ஆராதனை தேவி வழிபாட்டின் முதற்படி என்பர். ஸ்ரீவித்யா உபாசனா மார்க்கத்தில் பெரும்பாலோர் பாலா தேவியை மட்டுமே உபாசிப்பது வழக்கம். அதனால் இம்மந்திரத்திற்கு லகு ஸ்ரீவித்யா என்றே பெயர்.

ஆழ்வார்கள் காலத்தில் ஒருவர் கூட குருவாயூரப்பனை மங்களாசாஸனம் செய்யவில்லை. ஏனெனில் அக்காலத்தில் குருவாயூரப்பன் கோயில் பாலா க்ஷேத்திரமாக இருந்ததுதான். திருக்கடவூரில் மிருத்யுஞ்ஜய சக்கரத்திற்கு, ‘பாலாசமேத ம்ருத்யுஞ்ஜயாய நமஹ’ என்றே அர்ச்சனை செய்யப்படுகிறது. இந்த பாலாம்பிகையின் மந்திரத்தில் உள்ள ‘ஐம்’ எனும் வாக்பவ பீஜம், ஜபிப்பவர்களுக்கு சகல வித்யைகளையும் தரும்.

‘க்லீம்’ எனும் மன்மத பீஜம், ஜபிப்பவர்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றும். ‘ஸௌ:’ எனும் சக்தி பீஜம் அம்பிகைக்கு உரியது. அதை ஜபித்தால் தேவியின் பேரருள் கிட்டும்.ஒரு முழு நிலவு நாளில் குபேரன் அம்பிகையை லலிதா ஸஹஸ்ரநாமத்தால் பூஜித்துக் கொண்டிருந்தான். அப்போது ‘நித்ய யௌவனா’ எனும் நாமம் வந்த போது அந்த நாமத்திற்குரிய அம்பிகையின் திருவுருவைக் காண ஆவல் கொண்டு ஈசனை தியானித்தான்.

பாரதத்தின் தென் மூலையில் முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில், கன்னியாகுமரி எனும் பெயரில் நித்ய யௌவனா எனும் திருநாமத்திற்குரிய திருவுருவில் அம்பிகையை தரிசிக்கலாம் என்று ஈசன் திருவாய் மலர்ந்தருளினார். உடனே புஷ்பக விமானத்தில் ஏறிச் சென்று தேவியை தரிசித்தான் குபேரன். திரும்பி வரும் வழியில் காவிரிப்பூம்பட்டினத்தின் அழகில் மயங்கி சிவபூஜைக்கான நேரத்தையும் மறந்து அந்நகரின் அழகில் லயித்தான்.

பிறகு தன்னிலை உணர்ந்து ஈசனிடம் மன்னிப்பு கேட்க, ‘எந்நகரில் உன் மனம் லயித்ததோ அந்நகரிலேயே வணிகர் குலத்தில் பிறப்பாய் யாமே உமக்கு மகனாவோம்’ என்று சொன்னதோடு, மருதவாணன் எனும் பெயரில் அவருக்கு மகனாகப் பிறந்து, ‘காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே’ என்று உணர்த்தி, அந்த வணிகர் குல கோமானை, பட்டினத்தார் ஆக்கினார். அந்த குபேரனைக் கவர்ந்த கன்னியாகுமரி, அம்பிகை பாலாம்பிகையின் அம்சமாகவே போற்றப்படுகிறாள்.

அந்த கன்னியாகுமரியின் மூக்குத்தியும் உலகப்பிரசித்தி பெற்றது. லலிதா ஸஹஸ்ரநாமத்தில் வாக்தேவதைகள் அம்பிகையின் மூக்குத்தியை தாராகாந்தி திரஸ்காரி நாஸாபரணபாஸுரா எனப் போற்றுகின்றனர். நாஸாதண்டம் என்பது மூக்கினுடைய நடு தண்டு பாகமும் மூக்கும் சேர்ந்த பகுதி. அது எப்படி இருக்கும் எனில் அப்போதுதான் மலர்ந்தும் மலராத செண்பகப்பூவைப் போல இருக்கிறதாம். அதுவும் இளஞ்சிவப்பு நிறம். அப்படிப்பட்ட மூக்கில் தேவி ஜாஜ்வல்யமாக ஜொலிக்கும் மூக்குத்தியை அணிந்திருக்கிறாள்.

அதை வர்ணிக்க நம்மால் ஆகாது. மூக்குத்தியின் மகிமை தெரிய வேண்டும் எனில் கன்னியாகுமரிக்கு சென்று தரிசிக்க வேண்டும். நடுக்கடலில் சென்று கொண்டிருக்கும் கப்பல் ஒன்று இந்த மூக்குத்தியின் ஒளியை கலங்கரை விளக்கம் என நினைத்து தரைதட்டியது வரலாறு. முத்து மூக்குத்தியும் ரத்னப் பதக்கமும் மோகன தங்கத்தால் முடிந்திட்ட தாலியழகும் அடியனாற் சொல்லத் திறமோ எனும் காமாட்சி அம்மைபதிகம்தான் நினைவிற்கு வருகிறது. குமரகுருபரருக்கு பாலா எனும் சிறு குழந்தை வடிவிலேயே அம்பிகை மீனாட்சி வந்து, அவர் பாடிய மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் கேட்டு மகிழ்ந்து முத்து மாலையை பரிசளித்தது வரலாறு.

பாலா எனில் சிறுமி எனவும் பொருள் உண்டு. பொதுவாகவே சிறுவர்கள் எவரிடமும் பேதமில்லாமல் இருப்பர். தீய எண்ணங்கள் இருக்காது. அதேபோல் சிறுமியாக இருக்கும் இவளும் பக்தர்களுக்கு பேதம் பாராட்டாமல் அருள்வாள். இவளைத் தியானிக்க உடனே மனதில் பிரசன்னமாவாள்; அன்பைப் பொழிவாள்.சிறுவனாக கண்ணனுடன் சுலபமாகப் பழக முடிந்த குசேலன், பெரியவனானதும் துவாரகை சென்று வாயிற்காப்போன் அனுமதி பெற்றுத்தான் கண்ணைக் காண முடிந்தது. ஆனால், சிறுவன் பிரஹலாதன் பேதமில்லாமல் எங்கும் நாரணனைக் கண்டதால் அவனை யாராலும், எதனாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

இந்த பாலா வழிபாடு ஸ்ரீவித்யையில் மிக முக்கியமானது. அந்த ஸ்ரீவித்யையில் விடாமுயற்சி என்ற வைராக்கிய குணமும், பற்றின்மையும் மிக மிக முக்கியம். அவை இரண்டையும் அஸ்திவாரமாக அமைக்காமல் ஸ்ரீவித்யை எனும் மாளிகையை எழுப்ப முடியாது. குழந்தைகள் ஒரு பொருள் வேண்டும் என்று அழுது ஆகாத்தியம் செய்யும். இது விடாமுயற்சி. அப்பொருள் கிடைத்ததும் அதை பத்திரமாக வைத்துக் கொள்ளாமல் தூக்கி எறிந்து விடும். அது பற்றற்ற நிலை. பாலா வழிபாடு பலமடைந்தால்தான் ஸ்ரீவித்யை பரிபூரணமாக சித்திக்கும்.

இந்த ஸ்ரீவித்யை எனும் தேவி வழிபாட்டை பெரும்பாலானோர் பாலா மந்திர உபதேசத்துடனே நிறுத்தி விடுவர். எனவே பாலா உபாசனை லகு ஸ்ரீவித்யை என்று போற்றப்படுகிறது. இந்த பாலாம்பிகை உபாசனை புரிபவர்களுக்கு தேவி சொற்திறன், அழியாத செல்வங்களோடு சகல மங்களங்களையும் அருள்வாள். குழந்தைகளை இந்த பாலாம்பிகையை வணங்கி வரச் செய்ய அவர்கள் கல்வியறிவு செழிப்புறும்.

பால முருகன், பால கிருஷ்ணன், பால ஐயப்பன், பால கணபதி எனத் தெய்வங்களை பால ரூபத்தில் வழிபடுவதால் நமக்கு அவர்கள் அருள் எளிதில் கிட்டும். தேவி பாலா, ஸர்வேஸ்வரி. குழந்தையும், தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என்பர். இங்கே தெய்வமே குழந்தையாக வரும்போது கொண்டாட்டத்திற்குக் கேட்கவும் வேண்டுமோ?

தொகுப்பு: ந.பரணிகுமார்

You may also like

Leave a Comment

three + 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi