முதல்வர், அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு புதுச்சேரியில் இருந்து இடமாற்றம் கேட்டு ஒன்றிய அரசுக்கு தலைமை செயலர் கடிதம்

புதுச்சேரி: புதுவையிலிருந்து இடமாற்றம் கேட்டு ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கு புதுவை தலைமை செயலர் கடிதம் அனுப்பியுள்ளதால் அரசு வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி தலைமை செயலாளராக ராஜீவ் வர்மா பணியாற்றி வருகிறார். இவர் தன்னிச்சையாக செயல்படுவதாக முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்ட அனைத்து எம்எல்ஏக்களும் சில மாதங்களாகவே போர்க்கொடி தூக்கி வருகின்றனர். கடந்த வாரம் அரசு செயலர் ஜவகர் தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார், அப்போது அவர் வைத்திருந்த நிதி, தொழில் மற்றும் வணிகவரி உள்ளிட்ட துறைகளை புதிதாக பொறுப்பேற்ற ஆசிஷ் மாதராவ் மோர் என்பவருக்கு ஒதுக்கப்பட்டது. இந்நடவடிக்கையை தலைமை செயலகமானது முதல்வருக்கே கோப்பு அனுப்பாமல் மேற்கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதனையறிந்த தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள எம்எல்ஏக்கள் தலைமை செயலரை கண்டித்து தலைமை செயலகத்தில் போராட்டம் நடத்த முடிவெடுத்தனர். சபாநாயகர் அனைத்து அமைச்சர்கள் மற்றும் தே.ஜ. கூட்டணி எம்எல்ஏக்களையும் அழைத்து பேச்சு நடத்தினார். மேலும் தலைமை செயலரையும் அந்த கூட்டத்துக்கு அழைத்து பேசினார். அப்போது கூட்டத்துக்கு வந்த தலைமை செயலரை அனைவரும் சரமாரியாக கேள்வி கேட்க கூட்டத்திலிருந்து தலைமை செயலர் பாதியிலேயே வெளியேறினார். முதல்வருக்கு தெரியாமல் அரசு செயலரை மாற்றியது குறித்து சட்டசபை செயலகம் மூலம் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை விளக்கம் தரவில்லை. புகாருக்கு விளக்கம் தராதது குறித்து ஒன்றிய அரசிடம் புகார் தெரிவிக்கப்படும் என சபாநாயகர் செல்வம் கூறியிருந்தார்.

இந்நிலையில் முதல்வர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களின் எதிர்ப்பால் புதுச்சேரியில் தலைமை செயலராக தொடர்வது சிரமம் என ராஜீவ் வர்மா கருதுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக புதுச்ேசரியில் இருந்து உடனடியாக தனக்கு பணி இடமாற்றம் கேட்டு ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பி எழுதி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனை ஒன்றிய உள்துறை அமைச்சகமானது விரைவில் ஏற்றுக்கொண்டு புதிய தலைமை செயலரை நியமிக்கலாம் என தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே தலைமை செயலர் தனிப்பட்ட பயணமாக அமெரிக்கா செல்வதற்கான அனுமதியை கவர்னர் தமிழிசை வழங்கியுள்ளார்.

 

Related posts

சுற்றுலா தலமாக்க பணிகள் நடந்து வரும் மதுரை வண்டியூர் கண்மாய்க்கு வந்த சோதனை; கழிவுநீர் கலப்பதாக புகார்

ஜோலார்பேட்டை சுற்றுப்பகுதியில் தொடர் கனமழை; ஏலகிரி மலை சாலையில் பாறைகள் சரிந்து விழுந்தது

திருப்பத்தூர் பகுதியில் கனமழையால் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி