தலைமைச் செயலக மொழிபெயர்ப்புப் பிரிவைச் சேர்ந்த அலுவலர்களுக்கு பிரிட்டிஷ் கலை நிறுவன ஆங்கிலப் பயிற்சிக்கான சான்றிதழ் வழங்கும் விழா

சென்னை: 2022-ம் ஆண்டில் அக்டோபர், நவம்பர் ஆகிய தினங்களில் நடைபெற்ற ஆங்கில பயிற்சியை சிறப்பாக நிறைவு செய்த தலைமைச் செயலகத்தின் மொழிபெயர்ப்புப் பிரிவைச் சேர்ந்த 2 துணை இயக்குநர்கள், 4 பிரிவு அலுவலர்கள் மற்றும் 12 உதவிப் பிரிவு அலுவலர்களுக்கு பிரிட்டிஷ் கலை நிறுவன ஆங்கிலப் பயிற்சிக்கான பாராட்டுச் சான்றிதழ்களை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சென்னை, தலைமைச் செயலகத்தில் வழங்கிச் சிறப்பித்தார்.

இந்த அறிவிப்பு 2018-2019ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பாகும். கொரோனா பெரும்தொற்றை முன்னிட்டு இப்பயிற்சி பல நிலைகளில் ஒத்திவைக்கப்பட்டது. மேலும், இப்பயிற்சிக்கு தமிழ்நாடு அரசு ரூ.8,07,000 நிதியுதவி அளித்துள்ளது. பின்னர் அமைச்சர் தன் உரையில், “கல்வி கற்பதால் ஒருவர் பெறும் அனுபவமும் ஆற்றலும் கற்றல் ஆகும் என புகழ்பெற்ற ‘வெப்ஸ்டெர் ‘ என்ற அகராதி கூறுகிறது என்றும் கற்றல் திறனைப் பெறுபவர் தங்கள் நடைமுறை வாழ்க்கையுடன் பொருந்தி வாழும் வல்லமையைப் பெறுவர்.” என்றும் குறிப்பிட்டார் மேலும், “யாமறிந்த மொழிகளிலே” என்று தொடங்கித் தமிழின் புகழ் பாடிய மகாகவி பாரதியார் பதினெட்டு மொழிகள் அறிந்திருந்தார்.

இதன் காரணமாகவே, அவர் தமிழ் மொழி குறித்து கூறிய கருத்துகள் வலுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. சுந்தரத் தெலுங்கு மட்டுமல்லாமல் அவர் கற்ற திராவிட, ஐரோப்பிய மொழிகள் அவரின் சிந்தைக்கு கூடுதல் பலம் சேர்த்திருந்தன.” என்றும், “ஒரு முறை முத்தமிழறிஞர் கலைஞர் தன்னுடைய உரையில், தன்னை வளர்த்த பேரறிஞர் அண்ணா, ஆங்கிலத்தில் பேசும் முறையை குறித்து பேசியது என் நினைவிற்கு இப்பொழுது வருகிறது. அண்ணா சொன்னாராம் I Speak English rarely but that does not mean my English is rare and I am proud to belong to the Dravidian stock அந்த வகையில், ஆங்கில மொழியை பயிற்றுவதில் பல்வேறு நிலைகளை வகுத்து, அதை மாணவர்களுக்கும், தனியார் மற்றும் அரசுப் பணியாளர்களுக்கும் சென்னை பிரிட்டிஷ் கவுன்சில் நிறுவனம் சிறப்பான வகையில் தொடர்ந்து பல ஆண்டுகளாக பயிற்றுவித்து வருவதை நான் நன்கறிவேன். அந்நிறுவனத்திற்கு என்னுடைய பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றும் குறிப்பிட்டார்.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையின் ஓர் அங்கமான மொழிபெயர்ப்புத் துறையில், பள்ளி வழியாக 12ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்ற 9 மொழிபெயர்ப்பாளர்கள் உள்ளிட்ட 20 மொழிபெயர்ப்பாளர்கள் தங்களின் ஆங்கில மொழித் திறனை மேம்படுத்திக்கொள்ளும் பொருட்டு, சிறப்பானதொரு பயிற்சியினை பிரிட்டிஷ் கவுன்சில் நிறுவனத்தில் நிறைவு செய்துள்ளார்கள். அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அரசுப் பணியாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசு பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறது. அதன் வெளிப்பாடாகவே இந்த ஆங்கில பயிற்சி அமைந்துள்ளது”. என்று தன் தலைமை உரையில் குறிப்பிட்டார்.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையின் அரசு செயலாளர் அவர்கள் தன் உரையில், மொழிவளம் குறித்தும், மொழிபெயர்ப்பாளர்களுக்கு ஆங்கில மொழி நுட்பத்தை அறிந்து கொள்வது எத்துணை அவசியம் என்றும் வலியுறுத்திக் கூறினார்.பிரிட்டிஷ் கலை நிறுவனத்தின் தென்னிந்திய இயக்குநர் திருமதி ஜனகா புஷ்பநாதன் அவர்கள் தன்னுடைய உரையில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் தான், பிரிட்டிஷ் கலை நிறுவனத்திற்கு வருகை புரிந்த ஒரே தமிழ் நாட்டு முதலமைச்சர் என்று குறிப்பிட்டதுடன், அரசு அலுவலர்கள் அனைவரும் மென்மேலும் இப்பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெற அழைப்பு விடுத்தார்.

இவ்விழாவிலேயே தமிழ் வளர்ச்சித் துறை தொடர்ந்து வெளியிட்டு வரும் ஆட்சிசொல் அகராதியினை செந்தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்ககம் வாயிலாக மூன்று பகுதிகளாக தமிழ்நாடு அரசு அச்சகத்தின் வாயிலாக அச்சிடப்பட்டு இன்று காலை மாண்புமிகு அமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்டது. முதல் பிரதியினை அரசு செயலாளர் பெற்றுக் கொண்டார். இக்கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் மருத்துவர் இரா. செல்வராஜ், தமிழ் வளர்ச்சி மற்றும் மொழிபெயர்ப்புத் துறை இயக்குநர், ந.அருள், பிரிட்டிஷ் கவுன்சில் நிறுவன இயக்குநர் ஜனகா புஷ்பநாதன், பிரிட்டிஷ் கலை நிறுவன முதுநிலை ஆசிரியை கிருபா இரகுராம், தகவல் தொழில்நுட்ப முதுநிலை மேலாளர் ரேட்லி இம்மானுவேல் மற்றும் கல்விச் செயற்பாடுகளுக்கான ஒருங்கிணைப்பாளர் லதா பெர்னாண்டோ ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related posts

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்