முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் பயன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி பதிவு

சென்னை: முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தால் மாணவர்கள் பயன்பெற்று வருவது குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் அன்றாடப் பணிச்சுமையைக் குறைத்து இருக்கிறது என்பது என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி இருக்கிறது. மாணவச் செல்வங்கள் படிப்பைப் பாதியில் கைவிடுவதை இந்தத் திட்டம் தடுத்து நிறுத்தியது மட்டுமன்றி, பள்ளிக் கூடங்களிலும் சமுதாயத்தில் பல நற்பயன்களுக்கு வித்திட்டு வருகிறது. தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு சிற்றுண்டி உண்ட பின், மீதமிருக்கும் உணவு வீணாவதில்லை, மாறாக, 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியரில் யார் காலை உணவு சாப்பிடாமல் வந்துள்ளனர் என்பதைக் கண்டறிந்து, அவர்களுக்கு அந்த உணவை வழங்குகின்றனர் என்ற செய்தி அறிந்து இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தேன்.

காலையில் வேலைக்குச் செல்லும் தனது தாயால் சமைக்க முடியவில்லை என்பதால் பசியோடு பள்ளிக்கு வந்த ஒன்பதாம் வகுப்பு மாணவன் ஒருவன், பள்ளியில் பகிர்ந்தளிக்கப்படும் சிற்றுண்டியை உண்பதாகக் கூறியதைப் படிக்கும் போது நெகிழ்ந்தேன். அவரைப் போல, பசியோடு வரும் பல மாணவர்களும் உணவருந்திய பின் வகுப்புக்குச் செல்கிறார்கள் என்பதைக் கண்டு, ஒரு நல்ல நோக்கத்தோடு செயல்படுத்தப்படும் திட்டம், மேலும் பற்பல சமூக நன்மைகளுக்கு வித்திடுகிறது நிறைவைத் தருகிறது. உணவை வீணாக்காமல், பகிர்ந்தளிக்கும் ஆசிரியர்கள் பாராட்டுக்குரியவர்கள். எத்தனைக் கடினமான சூழ்நிலை இருந்தாலும் நம் வருங்காலத் தலைமுறைக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்துத் தர வேண்டும் என்ற எனது கனவு, கண் முன்னே பலன் தரும் போது ஏற்படும் மகிழ்ச்சியைச் சொல்லவா வேண்டும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

Related posts

‘முதலில் ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்குங்கள்…’ : இஸ்ரேலுக்கு டொனால்டு ட்ரம்ப் யோசனை!!

அனைவரும் ஒன்று என்பதுதான் சனாதன தர்மம்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

தமிழக மீனவர்களுக்கு ஒன்றரை ஆண்டு சிறை, அபராதம் விதிப்பு: இலங்கை அரசின் அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும்… ராமதாஸ் வலியுறுத்தல்