நெல் கொள்முதல்  நிலையக் கட்டடங்கள், கூட்டுறவுத் துறை சார்பில் ரூ.15.22 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்!

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில்  ரூ.57.95 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ள
கலைஞர் நூற்றாண்டு உணவுப்பொருள் சோதனைக் கூடம், 4 சேமிப்பு கிடங்கு வளாகங்கள், 58 நேரடி நெல் கொள்முதல்  நிலையக் கட்டடங்கள் மற்றும் கூட்டுறவுத் துறை சார்பில் ரூ.15.22 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை திறந்து வைத்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 110 நபர்களுக்கு பணி நியமன மற்றும் பணி நிரந்தர ஆணைகள் – தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  இன்று (23.9.2024) தலைமைச் செயலகத்தில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 4 கோடியே 66 இலட்சம் ரூபாய் செலவில்  நிறுவப்பட்டுள்ள  கலைஞர் நூற்றாண்டு உணவுப்பொருள் சோதனைக் கூடம், திண்டுக்கல், திருச்சி மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் 17 கோடியே 4 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 4 சேமிப்புக் கிடங்கு வளாகங்கள், 36 கோடியே 25 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 58 நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டடங்கள், கூட்டுறவுத் துறை சார்பில் 15 கோடியே 22 இலட்சம் ரூபாய் செலவில் சாலிகிராமம் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம், பூங்கா நகர் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மற்றும் திருவல்லிக்கேணி நகரக் கூட்டுறவு சங்கம் ஆகியவற்றில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை  திறந்து வைத்தார்.
மேலும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிக்காலத்தில் இயற்கை எய்திய 32 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளையும், 78 பருவகால பணியாளர்களுக்கு பணி நிரந்தர ஆணைகளையும் வழங்கிடும் அடையாளமாக 3 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். விவசாயிகளின் கடின உழைப்பில் உற்பத்தியான நெல்மணிகளை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, அவற்றினை இயற்கைப் பேரிடர் மற்றும் மழைப் பொழிவுகளிலிருந்து பாதுகாப்பாக  சேமித்து வைத்திடவும், அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையிலும், பொது விநியோகத் திட்டத்திற்கான உணவு தானியங்களைச் சேமித்து வைத்திடும் கிடங்குகளின் கொள்ளளவினை உயர்த்தும் வகையிலும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலமாக அதிக அளவில் சேமிப்புக் கிடங்குகள் கட்டப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் கலைஞர் நூற்றாண்டு உணவுப்பொருள் சோதனைக் கூடம், 4 சேமிப்பு கிடங்கு வளாகங்கள் மற்றும் 58 நேரடி நெல் கொள்முதல் நிலையக் கட்டடங்களை திறந்து வைத்தல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் வட்டம், கருமத்தம்பட்டியில் பொது விநியோகத் திட்ட பொருட்கள் தரமானதாக இருப்பதை உறுதி செய்திட 4 கோடியே 66 இலட்சம் ரூபாய் செலவில்  நிறுவப்பட்டுள்ள  கலைஞர் நூற்றாண்டு உணவுப்பொருள் சோதனைக் கூடம்; திண்டுக்கல், திருச்சி மற்றும் வேலூர் மாவட்டங்களில் 17 கோடியே 4 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள நான்கு சேமிப்பு கிடங்கு வளாகங்கள்; தென்காசி, திண்டுக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் தலா 62 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் மொத்தம் 36 கோடியே 25 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 58 நேரடி நெல் கொள்முதல் நிலையக் கட்டடங்கள்; என மொத்தம் 57 கோடியே 95 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை  தமிழ்நாடு முதலமைச்சர்   திறந்து  வைத்தார்.
கூட்டுறவுத் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை திறந்து வைத்தல் சாலிகிராமம் – தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம் சென்னை, சாலிகிராமத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்திற்கு சொந்தமான காலிமனையில் 29,195 சதுரஅடி பரப்பளவில் 7 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இணையத்திற்கான புதிய அலுவலகக் கட்டடம்; பூங்காநகர் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை 2022-2023-ஆம் ஆண்டிற்கான கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கையில் அறிவித்தபடி, சென்னை அண்ணா நகரில், பூங்கா நகர் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைக்கு சொந்தமான 15-வது பிரதான சாலையிலுள்ள இடத்தில், 4800 சதுர அடி நிலத்தில், 9801 சதுர அடி கட்டடப் பரப்பளவில் 4 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அலுவலகம், சுய சேவைப் பிரிவு, பண்ணைப் பசுமை நுகர்வோர் கடை மற்றும் மருந்தகம் ஆகியவற்றுடன் கூடிய வணிக வளாகம்;
திருவல்லிக்கேணி நகரக் கூட்டுறவு சங்கம்
2022-2023-ஆம் ஆண்டிற்கான கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கையில் அறிவித்தபடி, கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதியிலிருந்து 3 கோடியே 22 இலட்சம் ரூபாய் செலவில் சென்னை, திருவல்லிக்கேணி நகரக் கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான மயிலாப்பூரில் உள்ள இடத்தில் தரைதளத்தில் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி கிளைக்கான கட்டடம், முதல் தளத்தில் திருமண மண்டபம் / கூட்ட அரங்கம் மற்றும் திருவல்லிக்கேணி – மாதவபுரத்தில், சங்கத்திற்கு சொந்தமான இடத்தில் தரைதளத்தில் சென்னை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி கிளைக்கான கட்டடம் மற்றும் முதல் தளத்தில் திருமண மண்டபம் / கூட்ட அரங்கம்;
என  மொத்தம்  15 கோடியே 22 இலட்சம் ரூபாய் செலவில் கூட்டுறவுத் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை  தமிழ்நாடு முதலமைச்சர்  திறந்து வைத்தார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 110 நபர்களுக்கு பணி நியமனம் மற்றும் பணி நிரந்தர ஆணைகள் வழங்குதல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிக்காலத்தில் இயற்கை எய்திய 32 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளையும், 78 பருவகால பணியாளர்களுக்கு பணி நிரந்தர ஆணைகளையும், என மொத்தம் 110 நபர்களுக்கு ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக  தமிழ்நாடு முதலமைச்சர்  3 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில்,  நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு,  பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு,  கூட்டுறவுத் துறை அமைச்சர்  கே.ஆர். பெரியகருப்பன்,  சட்டத்துறை அமைச்சர்  எஸ். ரகுபதி,  உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி,  பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்  அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர்
 நா. முருகானந்தம், இ.ஆ.ப., கூட்டுறவு, உணவு மற்றும்  நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., கூட்டுறவு சங்கங்களின்  பதிவாளர் டாக்டர் நா. சுப்பையன், இ.ஆ.ப., தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் ஆ.அண்ணாதுரை, இ.ஆ.ப., உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இயக்குநர்  த. மோகன், இ.ஆ.ப., கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்  துறை இணைச் செயலாளர் அமர் குஷ்வாஹா, இ.ஆ.ப., கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் திருமதி ப. காயத்ரி கிருஷ்ணன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

செட்டிகுளத்தில் மக்காச்சோளம், பருத்தி வயல்களில் வேளாண்மை துறை அதிகாரிகள் ஆய்வு

சீசிங் ராஜாவுக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்குக்கும் தொடர்பு இல்லை: தெற்கு இணை ஆணையர் விளக்கம்!

குட்கா வழக்கு; முன்னாள் அமைச்சர்கள் நேரில் ஆஜராக உத்தரவு!