உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இயக்குநர் விக்ரமனின் மனைவிக்கு தேவையான சிகிச்சைகளை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

சென்னை: உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு கடந்த 5 ஆண்டுகளாக படுக்கையில் உள்ள இயக்குநர் விக்ரமனின் மனைவிக்கு தேவையான சிகிச்சை அளிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். வானத்தைப்போல, பூவே உனக்காக, சூர்ய வம்சம் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் விக்ரமன். இவரது மனைவி ஜெயப்பிரியா கடந்த 5 ஆண்டுகளாக படுத்த படுக்கையாக உள்ளார் என்று சமீபத்தில் விக்ரமன் தெரிவித்த தகவலானது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குச்சிப்புடி கலைஞரான ஜெயப்பிரியா தமிழ்நாட்டில் 4,000 மேடைகளில் நடனமாடியுள்ளார். மருத்துவ குளறுபடியால் கடந்த 5 ஆண்டுகளாக அவர் படுத்த படுக்கையாக இருக்கிறார். உடல் பாகங்கள் ஒவ்வொன்றாக பிரச்சனை ஏற்படுத்த தற்போது சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறார். பல ஆண்டுகளாக திரைப்படங்களை இயக்காமல் உள்ள விக்ரமன் தனது சொத்துக்களை விற்று தனது மனைவிக்கான மருத்துவ செலவினை கவனித்து வருகிறார். விக்ரமனின் மனைவி உடல்நிலை பாதிக்கப்பட்டது அந்த குடும்பத்தின் மகிழ்ச்சியை கேள்விக்குறியாக்கியுள்ளது.

இந்நிலையில், பிரபல திரைப்பட இயக்குநர் விக்ரமன் தனது மனைவிக்கு தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சை கொடுத்தாக பேட்டி கொடுத்திருந்த நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்துள்ளார். இயக்குநர் விக்ரமனின் கோரிக்கையை முன்னிட்டு,15க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவர்கள் அவரின் இல்லத்திற்கு சென்று பரிசோதனை செய்தனர். அமைச்சருடன் கலைஞர் உயர் சிறப்பு மருத்துவமனையின் இயக்குனர், ஸ்டான்லி மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் டீன் மற்றும் மருத்துவ குழுவினர் உடன் இருந்தனர்.

 

Related posts

புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு: சென்னை குடிநீர் ஏரிகளில் 39.82% நீர் இருப்பு

மேட்டூர் அணையின் நீர்வரத்து சரிவு

குமரியில் கடல்நீர் உள்வாங்கியதால் படகு சேவை நிறுத்தம்