Saturday, September 28, 2024
Home » முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் மின்துறையின் முனைப்பான திட்டங்களால் மின்தடையில்லா மாநிலமானது தமிழ்நாடு

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் மின்துறையின் முனைப்பான திட்டங்களால் மின்தடையில்லா மாநிலமானது தமிழ்நாடு

by Karthik Yash

* 36,671 மெகாவாட்டாக அதிகரித்தது மின் உற்பத்தி திறன்
* 54 புதிய துணை மின் நிலையங்கள் அமைப்பு
* 17,785 கி.மீ உயர் அழுத்த மின் பாதைகள்
* 31,705 கி.மீ தாழ்வழுத்த மின் பாதைகள்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆட்சியில் மின்துறை செயல்படுத்தும் முனைப்பான திட்டங்களால் மின்தடையில்லாத மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆட்சிப் பொறுப்பேற்ற பின், மின் உற்பத்திக்காகப் புதிய பல திட்டங்களை உருவாக்கி வருகிறார். 2021 முதல் மூன்றாண்டுகளில் 2 லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்க ஆணையிட்டு வழங்கி வருகிறார். “94987 94987” என்னும் கைப்பேசி எண் வழியாக, நுகர்வோர் மின்சாரம் தொடர்பாக, தமக்கு ஏற்படும் சிக்கல்கள் குறித்து புகார்களை பதிவு செய்திட மின்னகம் எனும் மாநில அளவிலான மின் நுகர்வோர் சேவை மையத்தை கடந்த 2021 ஜூன் 20ம் தேதி தொடங்கி வைத்தார்.

இந்த மின்னகம் வழியாக மக்கள் இருந்த இடத்திலிருந்தே இதுவரை தெரிவித்த 23 லட்சத்து 97 ஆயிரத்து 957 புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு 99.82 சதவீத புகார்கள் மீது தீர்வுகள் காணப்பட்டதால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் அரசைப் பாராட்டுகின்றனர். ஆட்சிப் பொறுப்பேற்ற 2021ம் ஆண்டில் 32,595 மெகாவாட்டாக இருந்த தமிழ்நாட்டின் மொத்த மின் நிறுவுதிறன் 36,671 மெகாவாட் என அதிகரித்துள்ளது. 30.4.2024 அன்று ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 454.32 மில்லியன் யூனிட் மின்சாரத்தையும், 2.5.2024 அன்று 20,830 மெகாவாட் உச்ச மின் தேவையையும் எவ்வித தடங்கலுமின்றி வழங்கப்பட்டுள்ளது.

* புதுப்பிக்கத்தக்க எரிசக்தி
கடந்த 2023 செப்டம்பர் 10ம் தேதி காற்றாலை மூலம் பெறப்பட்ட அதிகபட்ச மின் உற்பத்தி 120.25 மில்லியன் யூனிட்டுகளும், கடந்த ஏப்.23ம் தேதி சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் கிடைத்த அதிகபட்ச மின் உற்பத்தி 40.50 மில்லியன் யூனிட்டுகளும் தமிழ்நாடு மின்சார தேவைகளை ஈடுசெய்வதில் பெரிதும் துணைபுரிந்துள்ளன. இந்த அரசு பதவியேற்ற நாளில் இருந்து 3,984 மெகாவாட் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையங்கள், தமிழ்நாடு மின் கட்டமைப்பில் இணைக்கப்பட்டு சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையங்களின் மொத்த நிறுவு திறன் 8,496 மெகாவாட்டாக உயர்ந்து, தமிழ்நாட்டு மக்களுக்கு மிகுந்த பயனளிக்கிறது.

2021-22ம் ஆண்டில் கட்டடங்களின் கூரைகள் மேல் நிறுவப்பட்ட சூரிய மின் சக்தி திறனுக்காக, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சம் ரூ.7.9 கோடி ஊக்கத் தொகை வழங்கி தமிழ்நாட்டை பாராட்டியுள்ளது. தர்மபுரியில் 12 மெகாவாட், எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 15 மெகாவாட் இணை மின் திட்டங்கள் இயக்கி வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் தனியாருக்கு சொந்தமான பழைய திறனற்ற 16.8 மெகாவாட் காற்றாலைகளை மீண்டும் வலுப்படுத்திடும் முயற்சியில் திராவிட மாடல் அரசு ஊக்கம் தந்துள்ளது.

* மின் உற்பத்தி
அனல் மின் நிலையங்களின் மூலம் 2020-21ல், உற்பத்தி செய்யப்பட்ட 15,554 மில்லியன் யூனிட்டுகள் மின்சாரம், 2021-22ம் ஆண்டில் 20,391 மில்லியன் யூனிட்டுகளாக இது 31.1 சதவீதம் ஆகும். இது 2022-23ம் ஆண்டில் 22,689 மில்லியன் யூனிட்டுகளாக 11.27 சதவீதம் அதிகரித்தது. மேலும், 2023-24ம் ஆண்டில் 25,479 மில்லியன் யூனிட்டுகள் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. இது 12.3 சதவீதமும் அதிகரித்து தொடர்ந்து சாதனைகள் படைக்கப் பட்டுள்ளன. அதேபோல தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் புனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி 2021-22 & 2022-23ம் ஆண்டுகளில் ஒன்றிய மின் ஆணையம் நிர்ணயித்த இலக்கை விட 1,660.36 மற்றும் 2,261.08 மில்லியன் யூனிட்கள் முறையே கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்டும் சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.

* மின் உற்பத்தி திட்டங்கள்
தமிழகத்தின் சொந்த நிறுவுதிறனை அதிகரிக்கும் பொருட்டு, நான்கு புதிய திட்டங்களுக்கான பணிகள் நடந்து வருகின்றன. அனல் மின்நிலையங்களுக்கு தேவைப்படும் அதிக அளவு நிலக்கரியை குறுகிய காலத்தில் கையாள்வதற்காக, தூத்துக்குடி துறைமுகம் தளம் 1ல் அதிக கொள்ளளவு கொண்ட புதிய இரண்டு நிலக்கரி கையாளும் இயந்திரங்களை முதல்வர் கடந்த 2023 ஜனவரி 31ம் தேதி தொடங்கி வைத்துச் செயல்பாட்டிற்கு கொண்டுவந்தார். மேலும் வட சென்னை அனல் மின் நிலையம் -3 திட்டத்தை கடந்த மார்ச் 7ல் தொடங்கி வைத்ததை தொடர்ந்து அந்நிலையம் 425 மெகாவாட் அளவிற்கு உற்பத்தித் திறன் அடைந்து, 70.5 மில்லியன் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ளது. வடசென்னை அனல் மின் நிலையம் -1ல் இருந்து கரி துகள்கள் வடசென்னை அனல் மின் திட்டம் -3ஐ பாதிக்காமல் இருப்பதற்காக, ரூ.38 கோடி செலவில் தூசித் திரை 2023 ஜனவரியில் அமைக்கப்பட்டுள்ளது. 2021 முதல் 54 புதிய துணை மின் நிலையங்கள் 10,779 எம்.வி.ஏ. நிறுவு திறனுடன் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

* புதிய மின் கோட்டங்களும், மண்டலங்களும்
தஞ்சாவூர், திருவண்ணாமலை மற்றும் கரூர் ஆகிய இடங்களை தலைமையிடமாகக் கொண்டு மூன்று புதிய மின்மண்டலங்களும், சேப்பாக்கம், சோழிங்கநல்லூர், பல்லாவரம், தேன்கனிக்கோட்டை, பென்னாகரம், திருவெண்ணெய்நல்லூர், ஊத்துக்குளி, வேடசந்தூர், ஜெயங்கொண்டம், சாத்தூர், கெங்கவல்லி என 11 புதிய கோட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. ஒருங்கிணைந்த மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கடந்த 2021ம் ஆண்டு ஆக.29ம் தேதிமுதல் அதிக மின்பளுவுள்ள பகுதிகள் மற்றும் குறைந்த மின்னழுத்தம் நிலவிய பகுதிகளில் தடையின்றி சீரான மின்சாரம் வழங்குவதற்காக இதுவரை மொத்தம் 11,038 புதிய மின்மாற்றிகள் நிறுவப்பட்டன.

டெல்டா மாவட்டங்களின் கடலோரம் அமைந்துள்ள துணை மின் நிலையங்களுக்கு இடையே செல்லும் 33 கே.வி. மேனிலை உயரழுத்த மின் கம்பிகள் புதைவடங்களாக மாற்றப்பட்டு தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது. சுசீந்திரம், திருவரங்கம் கோயில்களின் தேரோடும் வீதிகளில் மேலே செல்லும் உயரழுத்த மின்கம்பிகள் புதைவட மின்பாதைகளாக மாற்றப்பட்டுள்ளன. 33/11 கி.வோ துணை மின் நிலையங்கள் 46 நிறுவப்பட்டுள்ளன. 17,785 கி.மீ உயர் அழுத்த மின் பாதைகளும் 31,705 கி.மீ தாழ்வழுத்த மின் பாதைகளும் நிறுவப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டன. சென்னையில், மழைக்காலங்களின் போது மழைநீர் தேங்கும் இடங்களில் உள்ள மின் தூண் பெட்டிகள் கண்டறியப்பட்டு, 5,086 மின்தூண் பெட்டிகள் தரை மட்டத்திலிருந்து 1 மீட்டர் உயரத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளன.

* தகவல் தொழில்நுட்பத்துறைமேம்பாட்டுப் பணிகள்
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கும் பணி மிக குறுகிய காலத்தில் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. புதிய விவசாய மின் இணைப்பு, கட்டண மாற்றம், பெயர் மாற்றம், சோலாரை சோலார் அல்லாததாக மாற்றுதல் மற்றும் மின் ரசீது பதிவிறக்கம் போன்ற அனைத்து தாழ்வழுத்த சேவைகளுக்கான வசதி ஆன்லைன் விண்ணப்ப போர்டல் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் அனைத்து கள சொத்துகளின் விவரங்கள் டிஜிட்டல் மயமாக்கபட்டுள்ளது. இப்பணியை வெற்றிகரமாக நிறைவு செய்த இந்தியாவின் முதல் டிஸ்காம் என்ற பெருமை தமிழ்நாடு மின்வாரியத்திற்கு கிடைத்துள்ளது. புவியியல் தகவல் முறைமையை வாரிய பொறியாளர்களை பயன்படுத்தி செயல்படுத்தியதன் விளைவாக ரூ.200 கோடி செலவு சேமிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நிறுவன வள திட்டமிடல் செயல்படுத்தியதற்கு 2022ல் – ஸ்காட்ச் தங்க விருது. தொழில்நுட்பத்துடன் கூடிய தானியங்கி மின் அளவிகளை காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களில் பொருத்தியதற்கான வெள்ளி ஸ்காட்ச் விருது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், இந்திய ஸ்மார்ட் கிரிட் போரம் இன்னோவேஷன் விருது 2023ல் பங்கேற்று புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி நிலையங்களில் தானியங்கி மின் அளவிகள் பொருத்தி செயல்படுத்தியமைக்கான வைர விருது, இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் எக்ஸ்பிரஸ் கம்ப்யூட்டர் ஐடி எக்ஸலன்ஸ் விருது, ஜிஐஎஸ் அமலாக்கத்திற்காக ஸ்கோச் “ஆர்டர் ஆப் மெரிட்” விருது ஆகிய விருதுகளை பெற்றுத் தமிழ்நாடு மின்துறை புகழ் ஈட்டியுள்ளது.

* 2.36 கோடி வீட்டு உபயோக மின்நுகர்வோர் பயன்
2022 செப்.10ம் தேதி முதல் திருத்தப்பட்ட மின்கட்டணத்தில், வீட்டு மின் நுகர்வோர்களுக்கு நிலைக் கட்டணம் இரு மாதங்களுக்கு ரூ.20 முதல் ரூ.50 வரை செலுத்துவதில் இருந்து முழுவிலக்கு அளிக்கப்பட்டு, நுகர்வோர்களிடம் இருந்து மின் பயன்பாட்டுக் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இதனால், தமிழ்நாட்டில் உள்ள 2.36 கோடி வீட்டு மின் நுகர்வோர்கள் பயன்பெற்று வருகின்றனர். மேலும், 2.36 கோடி வீட்டு நுகர்வோர்களுக்கு, 2023 ஜூலை 1ம் தேதி முதல் 2.18 சதவிகிதம் மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. கைத்தறி நெசவாளர்களுக்கு இரு மாதங்களுக்கு 200 யூனிட்டுகள் மட்டுமே இலவசம் என்ற நிலை மாற்றியமைக்கப்பட்டு இரு மாதங்களுக்கு 300 யூனிட்டுகள் இலவசம் என உயர்த்தி வழங்கியது். இதனால் தமிழ்நாட்டில் உள்ள 73,642 கைத்தறி நெசவாளர்கள் பயன் பெற்று வருகின்றனர்.

விசைத்தறி நெசவாளர்களுக்கு இரு மாதங்களுக்கு 750 யூனிட்டுகள் இலவசம் என்ற நிலை மாற்றப்பட்டு இரு மாதங்களுக்கு 1,000 யூனிட்டுகள் இலவசம் என உயர்த்தப்பட்டது. மேலும், மின் கட்டண உயர்வில் யூனிட்டுக்கு 35 காசுகள், இரு மாதங்களுக்கு 1,001 யூனிட் முதல் 1,500 யூனிட் வரை மற்றும் யூனிட்டுக்கு 70 காசுகள் இரு மாதங்களுக்கு 1,500 யூனிட்டுகளுக்கு மேல் உள்ள மின் நுகர்வுக்கு குறைக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் உள்ள 1,68,000 விசைத்தறி நுகர்வோர்கள் அரசை மனதார பாராட்டி வருகின்றனர். மின் கட்டண உயர்வு 4.7 சதவீதத்திலிருந்து 2.18 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. எனவே, அனைத்து 3.30 கோடி நுகர்வோர்களும் 2023ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் பயனடைந்து வருகின்றனர்.

* சிறிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் சலுகை
அரசு சில வகை, அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு, கட்டணச் சலுகையாக தாழ்வழுத்த வீதப்பட்டி கீழ் உள்ள பொதுவான வசதிகளுக்கான கட்டணத்தை யூனிட் ஒன்றிக்கு ரூ.8.15 லிருந்து ரூ.5.50 ஆக குறைத்து ரூ.2.65-ஐ மானியமாக வழங்குகிறது. இதற்காக புதிதாக தாழ்வழுத்த வீதப்பட்டி மிணி அறிமுகப்படுத்தி 1.11.2023 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த வீதப்படி மின்தூக்கி வசதி இல்லாத அடுக்குமாடி குடியிருப்புகளில் பொது விநியோகம் அதாவது 10 குடியிருப்பாளர்களுக்கு குறைவாகவோ அல்லது சமமாகவோ மற்றும் பொதுவான விளக்குகள் மற்றும் நீர் விநியோகத்திற்காக மூன்று தளங்களுக்குக் குறைவாகவோ அல்லது சமமாகவோ உள்ள சிறிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு பொருந்தும்.

எல்டி 3 பின் கீழ் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் 2023 நவ.10ம் தேதி முதல், சூரிய ஒளி மேற்கூரை மின் உற்பத்திக்கான வலையமைப்பு கட்டணத்தை 50% குறைத்துள்ளது. இந்த 50 சதவீதம் குறைக்கப்பட்ட வலையமைப்பு கட்டணத்தினால் தமிழ்நாட்டில் உள்ள 3.11 லட்சம் தொழில் நிறுவனங்கள் பயன் பெறுகின்றன. மூன்றாண்டுகளாக மின் தடையே இல்லை எனும் வரலாறு படைத்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்துள்ள சீர்திருத்தங்களால் புதியதாக துணை மின் நிலையங்களை நிறுவி, மின் மாற்றிகளை அமைத்து, மின்விநியோக அமைப்புகள் சீராகச் செயல்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் இந்த அரசை பாராட்டுகின்றனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

one × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi