முதல்வராக பிரதமராக ஒரு பேச்சு: கனிமொழி எம்பி பகிர்ந்த வீடியோ வைரல்; அது வேற வாய்…

மாநிலங்களுக்கான நிதி பகிர்வு தொடர்பாக மோடி முதல்வராக இருந்த போது பேசிய பேச்சும், பிரதமரானவுடன் மோடி பேசிய பேச்சையும் இணையத்தில் கனிமொழி எம்பி பகிர்ந்துள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31ம் தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. அடுத்த நாள் 2024-25ம் நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் ெசய்தார். நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. அதற்கு முன்பாக பாஜ அரசு தாக்கல் செய்யும் கடைசி பட்ஜெட் இது. இந்த பட்ஜெட்டில் எந்தவித திட்டங்களும் இல்லை, அறிவிப்புகளும் இல்லை என எதிர்க்கட்சிகள் ஒன்றிய பாஜ அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இந்த பட்ஜெட்டில் எதிர்க்கட்சி மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு குறைந்த நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது என்று கூறி கர்நாடகா, தமிழ்நாடு, கேரள அரசுகள் போராட்டம் அறிவித்தன. தொடர்ந்து ஒன்றிய அரசை கண்டித்து கர்நாடகா, கேரள முதல்வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தமிழ்நாட்டை சேர்ந்த திமுக எம்பிக்கள் கருப்புச் சட்டை அணிந்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி, ‘‘பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது நிதி பகிர்வு பற்றிப் பேசிய காணொலியை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதாவது ஒரு காலத்தில் முதல்வர், இப்போது பிரதமர் என்கிற தலைப்பில் காணொலியை பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில் பேசும் மோடி, ‘‘எனது சகோதர சகோதரிகளே, ஒவ்வொரு வருடமும் குஜராத் மாநில அரசு, ஒன்றிய அரசுக்கு வரியாக ரூ.60,000 கோடியை அளித்து வருகிறது. பதிலாக குஜராத் அரசுக்கு என்ன கிடைக்கிறது? ரூ.8000 கோடி, ரூ.10000 கோடி, ரூ.12000 கோடி. ஒன்றிய அரசு என்ன கூறுகிறது?. எப்போதும் நாங்கள் திருப்பிக் கொடுத்தோம், போதுமான அளவு திருப்பிக் கொடுத்தோம் என்று கூறுகிறது. குஜராத் மாநில அரசை என்ன பிச்சைக்காரர் என்று நினைக்கிறீர்களா?. ஒன்றிய அரசிடம் இருந்து தங்கள் நிதியைப் பெற எப்போதும் குஜராத் மாநில அரசு பிச்சை எடுக்க வேண்டுமா? என்று மோடி பேசியுள்ளார். மோடி பேசிய இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related posts

திருச்சி மாவட்டம் பாடாலூர் அருகே இன்று அதிகாலை விபத்து காரில் பயணித்த பெண் ஒருவர் பலி

திருக்கோவிலூர் அருகே மின்சார டிரான்ஸ்பார்மர் வெடித்து பயங்கர தீ விபத்து

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொலை: 8 பேர் கைது: மாயாவதி கண்டனம்