Saturday, September 7, 2024
Home » அம்மா உணவக திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்: திமுக அறிக்கை

அம்மா உணவக திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்: திமுக அறிக்கை

by Suresh

சென்னை: அம்மா உணவக திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார், பேதம் பார்க்கும் பண்பு எப்போதும் இல்லை திமுக அறிக்கை வெளியிட்டுள்ளது. திராவிட நாயகர் ஆட்சியை குறைகூறி எதிர்க்கட்சித் தலைவர் சில செய்திகளை கூறி ஏமாற்றி வருகிறார் எனவும் அதிமுக ஆட்சியின் திட்டங்களை திமுக அரசு மேலும் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது எனவும் திமுக அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் வெளியான அறிக்கையில்; “திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அ.தி.மு.க ஆட்சியின் திட்டங்களை மேலும் சிறப்பாகச் செயல்படுத்துகிறது ! பேதம் பார்க்கும் பண்பு தி.மு.க-விடம் எப்பொழுதும் இல்லை !

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அம்மா உணவு திட்டத்தை மிகச் சிறப்பாகச் செயல்படுத்துகிறார் !

தி.மு.க. ஆட்சியைக் குறைகூறி “ஏமாற்றாதே ஏமாற்றாதே! ஏமாறாதே ஏமாறாதே!” எம்.ஜி.ஆர் பாடலையே நினைவுபடுத்துகிறோம்!

தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் திராவிட நாயகர் ஆட்சியைக் குறைகூறிச் சில செய்திகளைச் சொல்லி வருகிறார். அதிலும், அ.தி.மு.க. நிறைவேற்றிய திட்டங்களை தி.மு.க அரசு நிறுத்திவிட்டது. குறிப்பாக அ.தி.மு.க ஆட்சியின் திட்டத்தை மூடிவிட்டது, என்றெல்லாம் குறை சொல்லியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அம்மா உணவுத் திட்டம் குறித்துக் கூறியுள்ளார். மக்களுக்கு
உண்மை தெரிய வேண்டும் என்பதற்காகச் சில விளக்கங்களை இங்கே குறிப்பிடுகிறோம்.

2021 தேர்தலில் வென்று தி.மு.க. ஆட்சிக்கு வந்ததால், அம்மா உணவு திட்டத்தை உடனே மூடிவிடுவார்கள் என்று கூறினார்கள். சொல்லியதுபோல் அத்திட்டம் மூடப்படவில்லை. கடந்த மூன்றாண்டுகளில் திராவிட நாயகரின் தி.மு.க. ஆட்சி, அம்மா உணவுத் திட்டத்திற்கு ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்து சிறப்பாக நிறைவேற்றி வருகிறது.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை 19.7.2024 அன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள “அம்மா உணவகத்திற்கு” நேரில் சென்று பார்வையிட்ட முதலமைச்சர் , அங்குச் சமைக்கப்பட்டிருந்த உணவை எடுத்துச் சாப்பிட்டு உணவுப் பொருள்கள் குறித்து ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து அம்மா உணவகங்களில் சிதைந்த உணவு பாத்திரங்களுக்குப் பதிலாகப் புதிய பாத்திரங்கள் வாங்கிடவும், அம்மா உணவகங்ளுக்குத் தேவையான பணிகளுக்காகவும் உடனடியாக ரூ.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார்.

அ.தி.மு.க. கொண்டுவந்த திட்டம் என்பதற்காக எந்த ஒரு திட்டத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறக்கணித்திடவில்லை. மாறாக, கூடுதல் நிதி ஒதுக்கிச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறார்கள்.
எந்த ஒரு திட்டத்தையும் இது யார் கொண்டு வந்த திட்டம், எந்தக் கட்சி கொண்டு வந்த திட்டம்? என்று பார்ப்பது தி.மு.க-விடம் இல்லை.

எந்த ஒரு திட்டமும் மக்களுக்கு நன்மை பயக்கும் என்றால் அது திட்டத்தை மேலும் சிறப்புடன் நிறைவேற்றுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளது தி.மு.க. இதற்கு மேலும் சில சான்றுகள்:
எம்.ஜி.ஆரின் சத்துணவு திட்டத்தில் 5 முட்டைகள் வழங்கிய தி.மு.க. 1982ஆம் ஆண்டில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அறிமுகப்படுத்திய திட்டம், பள்ளிக் குழந்தைகளுக்குச் சத்துணவு வழங்கும் திட்டம். எம்.ஜி.ஆர் ஆட்சி முடிந்து, குடியரசுத் தலைவர் ஆட்சியும் முடிந்து தமிழ்நாட்டில் 1989இல் நடைபெற்ற தேர்தலில் தி.மு.க வென்று முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சிக்கு வந்தார்.

அம்மா உணவுத் திட்டத்தை மூடிவிடும் தி.மு.க. ஆட்சி என்று இப்பொழுது சிலர் சொல்லித் திரிவதுபோல், அப்போதும் தி,மு,க சத்துணவுத் திட்டத்தை மூடிவிடும் என்று சிலர் சொன்னார்கள். மூடியே பழக்கப்பட்டவர்கள் அல்லவா . அதனால்தான் அப்படிச் சொன்னார்கள். ஆனால் தி.மு.க. அப்பொழுது சத்துணவு திட்டத்தில் 1989இல் இரண்டு வாரங்களுக்கு ஒரு முட்டை சேர்த்து சத்துணவு திட்டத்தைப் பள்ளிக் குழந்தைகளுக்குச் சத்தான திட்டமாக வழங்கியது. 1996இல் நான்காவது முறையாக முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையில் தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைந்தது. அந்தக் காலகட்டத்தில் சத்துணவுடன் குழந்தைகளுக்கு வாரம் 5 முட்டைகள் வழங்கி அத்திட்டத்திற்கு மேலும் சிறப்புச் சேர்த்தவர் கலைஞர்.

இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை விரிவு படுத்தியது தி.மு.க.
அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் 27.7.2001 அன்று பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி அரசுப் பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிட பழங்குடியின மாணவ, மாணவியர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்தத் திட்டம் பள்ளி மாணவ, மாணவியருக்கு மட்டுமல்லாமல் அவர்களின் குடும்பத்தாருக்கும் பயனளிக்கும் திட்டம் என தி.மு.க கருதியது. அதனால், அ.தி.மு.க கொண்டு வந்த திட்டம் என எண்ணாமல் 2006இல் ஆட்சிக்கு வந்த தி.மு.க. 2006-2007 முதல் 5 ஆண்டுகளிலும் முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில் ஆதிதிராவிடர்- தாழ்த்தப்பட்டோர் மலைவாழ் இனத்தினர், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் உட்பட இதர பல வகுப்புகளைச் சார்ந்தவர்களுக்கும் விரிவுபடுத்தி 19 இலட்சத்து 54 ஆயிரத்து 627 மாணவ மாணவியர்க்கு 465 கோடியே 91 லட்சம் ரூபாய்ச் செலவில் இலவச மிதி வண்டிகள் வழங்கப்பட்டன என்பது வரலாறு.

அ.தி.மு.க. ஆட்சி முடக்கிய தி.மு.க. ஆட்சியின் திட்டங்கள்
தி.மு.க ஆட்சிக்காலத் திட்டங்களை அ.தி.மு.க. ஆட்சியில் முடக்கிய கொடுமைகளைத் தமிழ்நாடு மக்கள் அறிந்தவர்கள்தானே ! கட்சிப் பெயரில் அண்ணாவை வைத்திருக்கிறார்கள். ஆனால், அண்ணா பெயரில் அண்ணா நூற்றாண்டு நினைவாக ரூ.172 கோடியில் தி.மு.க.ஆட்சிக் காலத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் 8 தளங்களுடன் பிரம்மாண்டமாக உருவாக்கிய அண்ணா நூற்றாண்டு நூலகத்தைச் சிதைத்தவர்கள் அ.தி.மு.க.வினர் என்பது நாடறிந்ததல்லவா!

அமெரிக்க ஜனாதிபதியாகத் திகழ்ந்த பில்கிங்டன் அவர்களின் துணைவியார் திருமதி ஹில்லாரி கிங்டன் சென்னை வந்து, அண்ணா நூற்றாண்டு நூலகத்தைப் பார்வையிட்டு உலகத் தரத்தில் கட்டப்பட்டுள்ள மிகச் சிறந்த நூலகம் இது எனப் பாராட்டினார். அந்த நூலகம் திருமண மண்டபமாக – குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றப்படும் என அறிவித்து நடைமுறைக்கும் கொண்டுவர ஆணைகள் பிறப்பித்தது அ.தி.மு.க.ஆட்சி.

ஆனால், சென்னை உயர்நீதிமன்றம் குறுக்கிட்டு பல கட்டங்களாக விசாரணைகள் மேற்கொண்டு அறிவுரைகள் வழங்கிய பிறகும் முறையாக அண்ணா நூற்றாண்டு நூலகம் செயல்பட அ.தி.மு.க. ஆட்சி அனுமதிக்காத நிலையில் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், டி.எஸ்.சிவஞானம் இருவரும், “31.10.2016ல் அண்ணா நூலகத்தில் அனைத்துப் பணிகளையும் செய்து முடித்து 4.11.2016 அன்று அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்; இல்லையேல், நீதிமன்றமே ஒரு குழு அமைத்து அண்ணா நூலகத்தைப் பராமரித்திட நேரிடும்” என்று அ.தி.மு.க. அரசுக்கு எச்சரிக்கை விடுத்ததன் காரணமாக – நீதிமன்றத்தின் கெடுபடியால் அண்ணா நூற்றாண்டு நூலகத்தைச் செயல்பட வைத்த காலத்தை மறந்து விட்டாரா எதிர்க்கட்சித் தலைவர் ?

புதிய தலைமைச் செயலகம் பட்ட பாடு
புனித ஜார்ஜ் கோட்டை தலைமைச் செயலகத்தின் இடநெருக்கடிக்கு நிரந்தரத் தீர்வு காண ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் 1,000 கோடியில் நிர்மாணித்து பிரதமர் மன்மோகன் சிங் வருகை தந்து திறந்து வைத்த புதிய சட்டமன்ற – தலைமைச் செயலகக் கட்டடத்தை மீண்டும் தி.மு.க. ஆட்சி வந்தால்கூடப் பயன்படுத்தி விடக்கூடாது என்ற வக்கிர நோக்கத்துடன், அந்தக் கட்டடத்தின் உட்பகுதிகளை மாற்றி அமைத்து ஓமந்தூரார் மருத்துவமனையாக மாற்றினார்களே அதை மறந்து விட்டாரா எதிர்க்கட்சித் தலைவர்?

வள்ளுவர் கோட்ட மாண்பைச் சிதைத்த அதிமுக
உலக மக்கள் நலன்நாடி சாதி, மத, இன, மொழிக் கட்டுக்குள் அடங்காமல் மனிதநேயம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு 1330 அருங்குறட்பாக்களைப் பாடிய அய்யன் திருவள்ளுவர் புகழ்போற்றி சென்னை மாநகரில் தி.மு.க., ஆட்சிக் காலத்தில் 1974 ஆம் ஆண்டில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் கட்டப்பட்ட வள்ளுவர் கோட்டத்தை முறையாகப் பராமரிக்காமல், சிதைத்தார்களே! அது மட்டுமல்ல; இழிவான செயல்கள், ஒழுங்கீனங்கள் அங்கு நடைபெறச் செய்தார்களே அதை மறந்து விட்டாரா எதிர்க்கட்சித் தலைவர் ?

துறைமுகம்-மதுரவாயல் உயர்மட்ட மேம்பாலத்தை முடக்கினார்களே!
சென்னை மாநகரப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சென்னை துறைமுகப் போக்குவரத்துக்கள் சீராக நடைபெற போர் நினைவுச் சின்னத்தில் இருந்து மதுரவாயல் வரை 19 கிலோமீட்டர் நீள உயர்மட்ட மேம்பாலம் ரூ.1,655 கோடியில் கட்டிட அனுமதிக்கப்பட்டு; பிரதமர் மன்மோகன்சிங் வருகை தந்து முதலமைச்சர் கலைஞர் தலைமையில் அடிக்கல் நாட்டிப் பணிகளைத் தொடங்கி வைத்தார். கூவம் ஆற்றின் கரையோரங்களிலும், பூந்தமல்லி சாலையின் நடுவிலும் உயர்மட்ட மேம்பாலத்திற்குப் பிரம்மாண்டமான தூண்கள் கட்டப்பட்டு வந்தன. அப்படிக் கட்டப்பட்ட மேம்பாலப் பணிகள் விரைவாக நடைபெற்று வந்த வேளையில் 2011 இல் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அந்தத் திட்டத்திற்குத் தடை போட்டார்களே !
இன்றும் அவர்களின் பொறாமை உணர்வைப் புலப்படுத்தும் அடையாளங்களாகக் கூவம் ஆற்றுக் கரையோரங்களிலும், கோயம்பேடு முதல் மதுரவாயல் வரை பூந்தமல்லி நெடுஞ்சாலையிலும் 13 ஆண்டுகளாக நின்று கொண்டிருக்கும் பிரம்மாண்டமான தூண்கள் சொல்லும் கதையை மறந்து விட்டாரா எதிர்க்கட்சித் தலைவர் !

பண்பாட்டுச் சின்னம் கண்ணகி சிலையை அகற்றினீர்களே
பேரறிஞர் அண்ணா காலத்தில் கொண்டாடப்பட்ட இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டின்போது சென்னை கடற்கரையில் முத்தமிழறிஞர் கலைஞர் வழங்கி நிறுவப்பட்ட தமிழனின் பண்பாட்டுச் சின்னம் கண்ணகி சிலையை இரவோடு இரவாகக் கடத்தி லாரி மோதி விட்டது எனக் கதை கட்டி அருங்காட்சியகத்தில் கொண்டுபோய்க் கிடத்தினீர்களே மறந்தா போச்சு !
கலைத் தொண்டுகளினால் தமிழ்நாட்டிற்கு உலகப்புகழ் சேர்த்த நடிப்புலக மேதை சிம்மக் குரலோன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்அவர்களுக்கு முத்தமிழறிஞர் கலைஞர் கடற்கரைச் சாலையில் நிறுவிய அகற்றியதும் நீங்கள்தானே!
10,000 சாலைப் பணியாளர்கள் வாழ்வைக் குலைத்தவர்கள்
10,000 குடும்பங்களை வாழவைக்க முத்தமிழறிஞர் கலைஞர் 10,000 சாலைப் பணியாளர்களை 1998-ஆம் ஆண்டில் நியமித்தார்.

2001-ல் அமைந்த அ.தி.மு.க. ஆட்சி அத்தனை பேரையும் பதவி நீக்கம் செய்தது. உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியும், நீதிமன்றங்களை நாடியும் மீண்டும் நியமனம் செய்யப்படவேண்டும் என்று போராடியும் சாலைப்பணியாளர் குடும்பங்களை வாழவிடாமல் அவர்களில் பலரை சாகவிட்டது அ.தி.மு.க. ஆட்சி அல்லவா.

மக்கள் நலப் பணியாளர்கள் வாழ்வைச் சிதைத்த அ.தி.மு.க. ஆட்சி
கலைஞர் அரசு 2.7.1990-இல் நியமனம் செய்த மக்கள் நலப் பணியாளர்களை அ.தி.மு.க. அரசு 13.7.1991-இல் வேலை நீக்கம் செய்தது. 3.6.1996-இல் கலைஞர் அரசு மறு நியமனம் செய்த அவர்களை 2001-இல் அ.தி.மு.க. அரசு மீண்டும் வேலை நீக்கம் செய்தது. பின் கலைஞர் அரசு, 1.6.2006 இல் மீண்டும் நியமனம் செய்திட 2011-இல் அமைந்த அ.தி.மு.க. அரசு மறுபடியும் டிஸ்மிஸ் செய்து 12,653 மக்கள் நலப் பணியாளர்களின் குடும்பங்களைச் சிதைத்துச் சித்திரவதை செய்துவிட்டது.

அந்த மக்கள் நலப் பணியாளர்களில் வறுமை காரணமாகவும், போராடிக் களைத்த இளைப்பினாலும் மாண்டுபோனார்களே – குடும்பங்களைத் தவிக்கவிட்டார்களே அ.தி.மு.க. ஆட்சியாளர்கள்.இந்த உண்மைகளையெல்லாம் ஒரு நொடி நேரம் கூட நினைக்க நேரமில்லையா எதிர்க்கட்சித் தலைவருக்கு!

செம்மொழிப் பூங்காவை சிதைத்தவர்களா பேசுவது ?
150 ஆண்டுகளுக்கு மேலாக அறிஞர் கால்டுவெல் முதன் முதல் கூறி, தொடர்ந்து பல அறிஞர்கள் கோரிக்கைகள் வைத்தும் எவராலும் நிறைவேற்றப்படாத தமிழ் செம்மொழி கோரிக்கையை ஒன்றிய அரசை வலியுறுத்தி 2005-ஆம் ஆண்டில் தியாகத்தின் திருவுருவம் அன்னை சோனியா காந்தி அவர்களின் ஒத்துழைப்போடு அன்னை தமிழ்மொழிக்குச் செம்மொழி என்னும் சிறப்பைப் பெற்றுத் தந்த வெற்றியின் அடையாளமாக 2010 ஜுன் திங்களில் கோவை மாநகரில் கொண்டாடிய உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டினைத் தொடர்ந்து; அந்தச் செம்மொழி வெற்றியின் மற்றொரு நினைவுச் சின்னமாக முத்தமிழறிஞர் கலைஞர் சென்னை அண்ணா மேம்பாலத்திற்கு அருகில் பல ஆண்டுகளாகத் தனியார் ஆக்கிரமிப்பிலிருந்த நூற்றுக் கணக்கான ஏக்கர் நிலங்களை மீட்டு, அங்கு அமைத்த செம்மொழிப் பூங்காவைச் சிதைத்தது எதிர்க்கட்சித் தலைவர் இடம்பெற்றிருந்த அ.தி.மு.க. ஆட்சி தானே!

அதேபோல அடையாற்றின் அருகே கிரீன்வேஸ் சாலைப் பகுதியில் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அமைத்திருந்த தொல்காப்பியர் பூங்காவை உருக்குலைத்ததும் அ.தி.மு.க. ஆட்சிதானே !
இவை மட்டுமல்ல ;
தி.மு.க. ஆட்சி கொண்டு வந்த, “நமக்கு நாமே திட்டம்” !
தி.மு.க. நடைமுறைப்படுத்திய, “அண்ணா மறுமலர்ச்சி திட்டம்”!
தி.மு.க. ஆட்சி கொண்டு வந்த, “சமத்துவபுரத் திட்டம்” !
தி.மு.க. ஆட்சி கொண்டு வந்த, “உழவர் சந்தை திட்டம்” !
தி.மு.க. ஆட்சி கொண்டு வந்த, மக்கள் பிரச்சனைகளை தீர்த்த, “மனுநீதி திட்டம்” !
தி.மு.க. ஆட்சி கொண்டு வந்த கலைஞர் “காப்பீட்டுத் திட்டம்”
தி.மு.க. ஆட்சி கொண்டு வந்த, “சமச்சீர் கல்வி திட்டம்” !
தி.மு.க. ஆட்சி கொண்டு வந்த “மினி பஸ் திட்டம்” !

முதலான திட்டங்களையெல்லாம் சிதைத்தது யார் என்பதையும் மறந்து விட்டாரா எதிர்க்கட்சித்லைவர் !
செய்ததெல்லாம் தி.மு.க. ஆட்சி! சீர்குலைத்ததெல்லாம் அ.தி.மு.க. ஆட்சி! அதனால்தான் தி.மு.க மக்களின் மகத்தான ஆதரவுடன் கட்டுக்கோப்பாக வளர்ந்து இன்றும் செழித்து நிற்கிறது; தொடர்ந்து மக்களுக்குத் தொண்டாற்றி வெற்றி மேல் வெற்றி பெற்று வருகிறது.
அதனால்தான், அ.தி.மு.க சிதைந்து சின்னாபின்னமாகி – இடைத் தேர்தலில் கூட போட்டியிடத் துணிவில்லாமல் ஓடி ஒளிந்து கொள்ள வேண்டிய அவலநிலைக்கு ஆளாகிப் பிதற்றிக் கொண்டுள்ளது. இதையெல்லாம் மறந்துவிட்டாரா எதிர்க்கட்சித் தலைவர் ?

இவை மட்டுமல்ல ! தி.மு.க. மக்கள் நலம் நாடும் இயக்கம் !
சுயமரியாதையைக் கற்றுத்தந்த தந்தை பெரியார் பகுத்தறிவு இனமான தமிழ் நெறிகளைப் போற்றிட வழிகாட்டிய பேரறிஞர் அண்ணா சமூகநீதி – சாதி, மத, பேதம் நீங்கிடும் சமத்துவச் சிந்தனைகளைத் தந்து தமிழ்நாட்டை வளர்த்தெடுத்து இந்திய அளவில் – சமதர்மச் செங்கோல் ஏந்தி சமூக நீதியைச் செழிக்கச் செய்த முத்தமிழறிஞர் கலைஞர். இந்த முப்பெரும் தியாக சீலர்களும் காட்டிய முன்னேற்றத் திசையில் மிடுக்கோடு ஆட்சிச் சக்கரத்தைச் சுழற்றியபடி தமிழ்நாட்டை இந்தியாவின் முன்னணி மாநிலமாக உயர்த்தி வருகிறார் திராவிட நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

திராவிட நாயகர் அவர்களால்தான் இந்த மாநிலம் வையத்தில் ஓங்கி நாளுக்கொரு பாராட்டு! நாளுக்கொரு வாழ்த்து எனப் புகழ் பெற்று வருகிறது. இதைப் பொறுக்க முடியாத வயிற்றெரிச்சலால் வாய்க்கு வந்ததை எல்லாம் கூறி தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றிப் புலம்புகிறார் எதிர்க்கட்சித் தலைவர் !
ஏமாற்றாதே ஏமாறாதே என்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். சொல்லெடுத்துக் கூறி, கவிஞர் வாலி எழுதி, அடிமைப்பெண் படத்தில் எம்.ஜி.ஆர். பாடுவது போல் அமைந்த பாடலின் தொடர்களையே நினைவுபடுத்துகிறோம். ஏமாற்றாதே ஏமாற்றாதே ! ஏமாறாதே ஏமாறாதே!” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

7 − 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi