முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் துரை வைகோ சந்திப்பு: மகள் திருமண அழைப்பிதழ் வழங்கினார்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினை, துரை வைகோ நேரில் சந்தித்து தனது மகள் திருமண அழைப்பிதழை வழங்கினார். அப்போது, முதல்வரின் அமெரிக்க பயணம் தமிழக மக்களின் சாதனை பயணமாக அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து, மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை, அவரது இல்லத்தில் சந்தித்து எனது மகள் திருமண அழைப்பிதழை அளித்தேன். மிகுந்த மகிழ்ச்சியுடன் மணமக்களுக்கு வாழ்த்துகளை கூறுவதாக தெரிவித்தார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் உடல் நலன் குறித்து முதல்வர் மிகுந்த அக்கறையுடன் கேட்டு அறிந்தார். அண்மையில் அமெரிக்கா சென்று வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம் வெற்றிகரமாக அமைந்தது குறித்து அவரிடம் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டேன்.

அமெரிக்காவில் 17 நாட்களில் 25 நிறுவனங்களுடன் மேற்கொண்ட சந்திப்பில் ரூ.7,618 கோடி மதிப்பிலான 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதிற்கும், இதன் மூலம் 11,516 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதற்கும் முதல்வரின் அமெரிக்கப் பயணம் தமிழ்நாட்டு மக்களுக்கான சாதனைப் பயணமாக அமைந்தது என்று தெரிவித்தேன். குறிப்பாக எனது திருச்சி தொகுதியில் மின்னணு சாதனங்களை உற்பத்தி செய்து தரும் ஜேபில் நிறுவனம் ரூ.2000 கோடி முதலீட்டில் தொழிற்சாலை தொடங்க இருப்பதாகவும், இதனால் 5000 வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளதற்கு மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்தேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related posts

மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண இருநாட்டு அதிகாரிகள் அடங்கிய குழுவை உடனே அமைக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

சென்னையில் இன்று புறநகர் ரயில் சேவையில் மாற்றம்; கூடுதல் பேருந்துகள் இயக்கம்!

சென்னை விமான நிலையத்தில் விமானம் பழுதுபார்க்கும் எம்ஆர்ஓ மையம் அமைக்கும் திட்டம் ரத்தா?: தமிழக அரசு 32,300 சதுர அடி நிலம் வழங்கி 2 ஆண்டுகள் ஆகியும் ஆணையம் அலட்சியம்