Thursday, June 27, 2024
Home » ஓசூர் பகுதியில் உள்ள சிப்காட் தொழிற் பூங்காக்களுக்கான சுத்திகரிப்பு ஆலை (TTRO Plant) நிறுவுவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

ஓசூர் பகுதியில் உள்ள சிப்காட் தொழிற் பூங்காக்களுக்கான சுத்திகரிப்பு ஆலை (TTRO Plant) நிறுவுவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

by Arun Kumar
Published: Last Updated on

 

 

 

சென்னை: கிருஷ்ணகிரி ஓசூரில் 3ம் நிலை எதிர் சவ்வூடுபரவல் சுத்திகரிப்பு ஆலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். கெலவரப்பள்ளி அணையிலிருந்து சிப்காட்களுக்கு வழங்க 20MLD கொள்ளளவு கொண்ட ஆலை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. சிப்காட் சார்பில் பள்ளிகளுக்கு அச்சுப்பொறிகளை கொள்முதல் செய்து வழங்கவும் நிதியுதவி அளித்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (13.06.2023) தலைமைச் செயலகத்தில், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் சார்பில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து சிப்காட் தொழிற் பூங்காக்கள் மற்றும் பிற தொழிற்சாலைகளுக்கு இரண்டு கட்டங்களாக 20 MLD கொள்ளளவு கொண்ட மூன்றாம் நிலை எதிர் சவ்வூடுபரவல் சுத்திகரிப்பு ஆலையை (TTRO Plant) 187.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவுவதற்கான திட்டப் பணிக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், சிப்காட் சார்பில் 537 பள்ளிகளுக்கு பலசெயல்பாட்டு அச்சுப்பொறிகளை கொள்முதல் செய்து வழங்குவதற்காக பள்ளிக்கல்வித் துறைக்கு 50 இலட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.

சிப்காட் நிறுவனம் தமிழ்நாட்டில் பெரிய மற்றும் நடுத்தர தொழில்கள் உடனடியாக தொடங்கிட ஏதுவாக தொழில் வாய்ப்புள்ள பகுதிகளில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய தொழில் பூங்காக்களை ஏற்படுத்தி, பராமரித்து வருகிறது. இந்நிறுவனம் இதுநாள் வரை 6 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உட்பட 28 தொழிற் பூங்காக்களை, மொத்தம் 38 ஆயிரத்து 538 ஏக்கரில் ஏற்படுத்தி உள்ளது. இத்தொழிற் பூங்காக்களில் தற்போது வரை 3 ஆயிரத்து 142 நிறுவனங்களுக்கு நில ஒதுக்கீடு செய்து, 7 இலட்சத்து 56 ஆயிரம் நபர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.

* ஓசூர் சிப்காட் தொழிற் பூங்காக்களுக்கான சுத்திகரிப்பு ஆலை (TTRO Plant) நிறுவும் திட்டப் பணிக்கு அடிக்கல் நாட்டுதல்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து சிப்காட் தொழிற் பூங்காக்கள் மற்றும் பிற தொழிற்சாலைகளுக்கு இரண்டு கட்டங்களாக 20 MLD கொள்ளளவு கொண்ட மூன்றாம் நிலை எதிர் சவ்வூடுபரவல் சுத்திகரிப்பு ஆலையை (TTRO Plant) 187.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவுவதற்கான திட்டப் பணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் இன்று அடிக்கல் நாட்டினார். இத்திட்டத்திற்கான முதற்கட்டப் பணிகள் 15 மாதங்களில் நிறைவு பெறும். இத்திட்டத்தின் மூலம் 2092 ஏக்கரில் அமைந்துள்ள ஒசூர் சிப்காட் தொழிற்பூங்கா, 989 ஏக்கரில் அமைந்துள்ள சூளகிரி சிப்காட் தொழிற்பூங்கா மற்றும் ஓசூர் மண்டலத்தில் 1800 ஏக்கரில் அமையவுள்ள புதிய சிப்காட் தொழிற்பூங்காக்களில் உள்ள தொழிற்சாலைகளின் நீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு, 800-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் பயன்பெறும். இதனால், இப்பகுதியில் நிலத்தடிநீரும், மேற்பரப்பு நீரும் பாதுகாக்கப்படும். மேலும், இதன்மூலம், இத்தொழிற் பூங்காக்களில் புதிய தொழிற்சாலைகள் அமைந்திட வாய்ப்பு ஏற்பட்டு, கூடுதலாக 6,000 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்படுவதுடன், 10,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடவும் வழிவகை ஏற்படும்.

சிப்காட் சார்பில் 537 பள்ளிகளுக்கு பலசெயல்பாட்டு அச்சுப்பொறிகளை கொள்முதல் செய்து வழங்குவதற்காக ரூ.50 இலட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. சிப்காட் நிறுவனத்தின் பெருநிறுவன சமூக பொறுப்பு நிதியிலிருந்து திருவண்ணாமலை மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் உள்ள 537 பள்ளிகளுக்கு பலசெயல்பாட்டு அச்சுப்பொறிகளை (Multi Functional Printers) கொள்முதல் செய்வதற்காக பள்ளிக்கல்வித் துறைக்கு 50 இலட்சம் ரூபாய்க்கான காசோலையினை, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் இன்று தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ச. கிருஷ்ணன், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் எ. சுந்தரவல்லி, செயல் இயக்குநர் நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோர் கலந்துகொண்டனர்.

You may also like

Leave a Comment

nineteen − one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi