காஞ்சியில் வரும் 15ம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் விழா முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்: கால்கோள் விழாவில் கலெக்டர், எம்எல்ஏ பங்கேற்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் வரும் 15ம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் விழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். இதற்கான கால்கோள் விழாவில் கலெக்டர், எம்எல்ஏ, மேயர் பங்கேற்றனர். கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் கால்கோள் விழாவை கலெக்டர் கலைச்செல்வி மோகன், எம்எல்ஏ வக்கீல் எழிலரசன் துவக்கிவைத்தனர். தமிழக சட்டமன்ற தேர்தலின்போது திமுக சார்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் ஒன்றான மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை வரும் 15ம்தேதி அண்ணா பிறந்த நாளில் காஞ்சிபுரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார்.

இதற்கான விழா நடைபெறும் இடமாக காஞ்சி பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி விளையாட்டு மைதானம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விழா முன்னேற்பாடு பணி துவங்கும்முகமாக நேற்று மாலை கால்கோள் விழா நடைபெற்றது. காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன், காஞ்சிபுரம் எம்எல்ஏ வக்கீல் எழிலரசன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டு, பூஜைகளுடன் பணிகளை துவக்கி வைத்தனர். இதையடுத்து, பொக்லைன் இயந்திரங்கள் மூலம் மண் சமன்படுத்தும் பணி துவங்கியது. பின்னர், பந்தல் அமைக்கும் பணிகளும் துவங்கியுள்ளது.

200 அடி அகலமும் 500 அடி நீளமும் கொண்ட பிரமாண்டமாக 10 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் பந்தல் அமைக்கப்பட உள்ளது. விழாவிற்கு வரும் விஐபி வாகனங்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் வாகனங்கள் என பல்வேறு பகுதிகளில் வாகன நிறுத்தமிடம் அமைக்கப்பட உள்ளது. குடிநீர், கழிவறை வசதிகள் மாநகராட்சி சார்பில் செய்யப்பட்டு வருகிறது. விழாவில், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ், மாநகராட்சி கவுன்சிலர்கள் சந்துரு, சுரேஷ், கமலக் கண்ணன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சிவசண்முகசுந்தரம், உதவி செயற்பொறியாளர்கள் சோம சுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

Related posts

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!

மாநில ஜூனியர் தடகள போட்டி நாளை தொடக்கம்

மெத்தனால் பதுக்கிய பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்!