தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் சாலை, மேம்பால பணிகளை தலைமை செயலாளர் ஆய்வு: விரைந்து முடிக்க உத்தரவு

தாம்பரம்: தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வரும் வாகனங்கள் பெருங்களத்தூர், தாம்பரம் வழியாக சென்னைக்குள் நுழையாமல் மாற்றுப் பாதை வழியாக பெருங்களத்தூர், சதானந்தபுரம், ராஜகீழ்ப்பாக்கம், வேளச்சேரி சாலை வழியாக செல்லும் வகையில் தாம்பரம் – ஈஸ்டர்ன் பைபாஸ் சாலை திட்டம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இந்த சாலை பீர்க்கன்காரணை பழைய காவல் நிலையம் அருகே துவங்கி சதானந்தபுரம், ஆலப்பாக்கம், நெடுங்குன்றம், திருவஞ்சேரி, ராஜகீழ்ப்பாக்கம், சேலையூர் வழியாக வேளச்சேரி பிரதான சாலையை இந்த சாலை வந்தடையும். சுமார் 8 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.48.7 கோடி மதிப்பில் இந்த சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட இந்த பணி, கடந்த ஜூன் மாதம் முதல் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. 4 கிலோ மீட்டர் தொலைவில் இந்த சாலை பணிகள் முடிவடைந்த நிலையில், ராஜகீழ்பாக்கம் பகுதியில் ஆக்கிரமிப்பு, மாடம்பாக்கம் புதூர் பகுதியில் நரிக்குறவர்களுக்கு இடம் வழங்குவது, நெடுங்குன்றம் மற்றும் பெருங்களத்தூர் பகுதியில் நிலம் கையகப்படுத்துவது போன்றவற்றால் சாலை பணியை தொடர்வதில் சிக்கல் உள்ளது.

இந்நிலையில் நேற்று தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு, நெடுஞ்சாலை துறை செயலாளர் பிரதீப் யாதவ், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா மற்றும் அதிகாரிகளுடன் சேலையூர் – அகரம் தென் பிரதான சாலையில் மப்பேடு பகுதியில் தாம்பரம் – ஈஸ்டர்ன் பைபாஸ் சாலை பணிகளை ஆய்வு செய்து அங்கு நடைபெறும் பணிகளின் விவரங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து விரைவாக பணிகளை முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் ரூ.234.34 கோடி செலவில் பெருங்களத்தூர் பகுதியில் நடைபெறும் மேம்பால பணிகளில் தற்போது 69 சதவீத பணிகள் நிறைவடைந்து உள்ளதை தலைமைச் செயலாளர் அதிகாரிகளுடன் பார்வையிட்டு, பணிகளை விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து குரோம்பேட்டை, ராதா நகர் பகுதியில் நடைபெற்று வரும் சுரங்கப்பாதை பணிகளை தலைமைச் செயலாளர் இறையன்பு, பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதியுடன் ஆய்வு செய்தார்.

அப்போது, அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். ஆய்வின்போது மண்டல குழு தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். இதேபோல், திருவான்மியூர் முதல் அக்கரை வரை 4 வழிச்சாலையாக உள்ள கிழக்கு கடற்கரை சாலையை 6 வழிச் சாலையாக அமைக்க ரூ.1,111 கோடியில் 10.50 கி.மீ நீளத்திற்கு நில எடுப்புடன் கூடிய சாலை அகலப்படுத்தும் பணியை ஆய்வு செய்தார். நெடுஞ்சாலைத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் பிரதீப் யாதவ், நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் சந்திரசேகரன், கோட்ட பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Related posts

பல்கலைக்கழக நிர்வாகம் தகவல் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில்

முன்னாள் துணை கலெக்டர் மயங்கி விழுந்து சாவு வேலூர் கலெக்டர் அலுவலகத்தில்

3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றினால் இடமாற்றம் பட்டியல் தயாரிக்க உத்தரவு பள்ளிக்கல்வித்துறையில்