Sunday, September 8, 2024
Home » தஞ்சையில் நடந்து சென்று வாக்கு சேகரித்த முதல்வர்

தஞ்சையில் நடந்து சென்று வாக்கு சேகரித்த முதல்வர்

by Ranjith

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தனது 20 நாள் சூறாவளி பிரசாரத்தை நேற்றுமுன்தினம் மாலை திருச்சி மாவட்டம் சிறுகனூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கினார். அங்கு திருச்சி தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோ, பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அருண் நேரு ஆகியோரை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.

அதன்பின் அங்கிருந்து கார் மூலம் இரவு 8.40 மணிக்கு தஞ்சாவூர் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், இரவு சங்கம் ஓட்டலில் தங்கினார்.  இந்நிலையில் நேற்று காலை 7 மணியளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நடைபயிற்சி செல்ல காரில் புறப்பட்டு அன்னை சத்யா விளையாட்டரங்கம் வந்தார். அவருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தஞ்சை தொகுதி திமுக வேட்பாளர் முரசொலி, எம்எல்ஏக்கள் துரை சந்திரசேகரன், நீலமேகம், மேயர் சண்.ராமநாதன் ஆகியோர் வந்தனர்.

அப்போது மைதானத்தில் நடைபயிற்சிக்காக வந்திருந்த மக்களுக்கு கைகொடுத்தபடி வாக்கு சேகரித்தபடி நடந்து சென்றார். மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு கைகொடுத்து வாழ்த்து தெரிவித்த முதல்வர், நடைபயிற்சியை முடித்துக்கொண்டு காலை 7.45 மணிக்கு அங்கிருந்து காரில் புறப்பட்டு 7.50 மணிக்கு காமராஜர் மார்க்கெட்டுக்கு வந்தார். அப்போது அங்கு மார்க்கெட் முழுவதும் நடந்து சென்று வியாபாரிகளிடம் திமுக வேட்பாளர் முரசொலிக்கு வாக்கு சேகரித்தார்.

வியாபாரிகள் முதல்வருக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர். காலை 8.10 மணிக்கு காரில் புறப்பட்டு ஓட்டலுக்கு சென்ற முதல்வர், அங்கு மாலை வரை ஓய்வெடுத்தார். பின்னர் மாலை 6 மணிக்கு அங்கிருந்து காரில் புறப்பட்டு திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரிக்கு சென்ற முதல்வர், அங்கு ஊர்குடி என்ற இடத்தில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு இருந்த பொதுக்கூட்ட மேடையில் தஞ்சாவூர் தொகுதி திமுக வேட்பாளர் முரசொலி மற்றும் நாகப்பட்டினம் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வை.செல்வராஜ் ஆகியோரை அறிமுகப்படுத்தி பேசினார். பின்னர் கூட்டத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்து காரில் திருச்சி விமான நிலையம் வந்த முதல்வர், இரவு 8.45 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டார்.

* உதயசூரியனுக்குதான் ஓட்டு முதல்வரிடம் கூறிய மூதாட்டி
அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அங்கே இருந்த மூதாட்டி ஒருவர், முதல்வரின் கையைப்பிடித்துக் கொண்டு ‘‘எங்கள் குடும்பம் பரம்பரையாக திமுக தான். நான் உதயசூரியனுக்கு மட்டும்தான் ஓட்டு போடுவேன். எங்களது ஒட்டு மொத்த குடும்ப ஓட்டு உனக்கு தான்னய்யா’’ (மு.க.ஸ்டாலின்) என முதல்வர் கையை பிடித்துக்கொண்டு ஆனந்த கண்ணீருடன் கூறினார். தொடர்ந்து முதல்வர், மூதாட்டிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

* பேக்கரியில் டீ குடித்த முதல்வர்
தஞ்சாவூர் காமராஜர் மார்க்கெட்டில் காலை 7.50 மணி முதல் 8.20 மணி வரை அரை மணி நேரம் நடந்து சென்று தஞ்சாவூர் தொகுதி திமுக வேட்பாளர் முரசொலிக்கு ஆதரவாக வியாபாரிகளிடம் தீவிர வாக்கு சேகரித்த முதல்வர், அந்த பகுதியில் இருந்த ஒரு பேக்கரியில் அமர்ந்து டீ குடித்தார். அப்போது டீ ரொம்ப சூடாக இருந்ததால் ஆத்தி கொடுக்க சொல்லி கேட்டு மீண்டும் டீ குடித்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது.

* ‘சாப்பிட்டீங்களா அங்கிள்’ சிறுவனின் அன்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் டீ சர்ட், டிராக் பேண்ட் அணிந்து அன்னை சத்யா ஸ்டேடியத்தில் 2 கி.மீ நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அங்கு ஹாக்கி விளையாடி கொண்டு இருந்த சிறுவன், முதல்வர் அருகே வந்து ‘சாப்பிட்டீங்களா அங்கிள்’ என கேட்டான். முதல்வர் சிரித்துக் கொண்டே சிறுவனை தட்டி கொடுத்து சென்றார்.

You may also like

Leave a Comment

1 × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi