சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவிக்கான காசோலைகளை அமைச்சர்கள் வழங்கினர்!!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், புதுக்கோட்டை மாவட்டம். கந்தர்வகோட்டை வட்டம். கல்லாக்கோட்டை ஊராட்சி, கண்ணுகுடிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் பலத்த காயமடைந்தவர்களுக்கு. முதலமைச்சரின் பொது நிவாரண நிதி வழங்கிட உத்தரவிட்டதைத் தொடர்ந்து, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் திரு.எஸ்.ரகுபதி அவர்கள். சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் ஆகியோர் இன்று (18.07.2024) அவர்களது குடும்பத்தினர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கான காசோலைகளை வழங்கினார்கள்.

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், வளம்பக்குடி அருகில் 17.07.2024 அன்று கந்தர்வகோட்டையில் இருந்து சமயபுரம் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்றுகொண்டிருந்தவர்கள் மீது எதிர்பாராதவிதமாக ஈச்சர் வாகனம் மோதிய விபத்தில் புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டம், கல்லாக்கோட்டை ஊராட்சி, கண்ணுகுடிபட்டியைச் சேர்ந்த திரு.முத்துசாமி (வயது 60), திருமதி. ராணி (வயது 37), திருமதி. மோகனாம்பாள் (வயது 27), திருமதி. மீனா (வயது 26) மற்றும் திருமதி. தனலட்சுமி (வயது 36) ஆகிய 5 நபர்கள் உயிரிழந்தனர்.மேலும் இவ்விபத்தில், பலத்த காயமடைந்து தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திருமதி. சங்கீதா என்பவர் அனுமதிக்கப்பட்டு சிறப்பு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது
உறவினர்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆழ்ந்த
இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டதோடு, உயிரிழந்தவர்களின்
குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாயும், காயமடைந்து
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவருக்கு ஒரு இலட்சம் ரூபாயும்
முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்கள்

அதன்படி, சட்டத்துறை அமைச்சர் திரு.எஸ்.ரகுபதி அவர்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் ஆகியோர். சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் பலத்த காயமடைந்தவரின் குடும்பத்தினர்களை இன்று (18.07.2024) நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கான காசோலைகளை வழங்கினார்கள்.

இந்நிகழ்வில், கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.எம்.சின்னத்துரை அவர்கள். புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் செல்வி.பா.ஐஸ்வர்யா. வட்டாட்சியர் திருமதி.விஜயலட்சுமி, மங்களாபுரம் ஊராட்சிமன்றத் தலைவர் திரு.பரமசிவம், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Related posts

ஓணம் பண்டிகைக்கு ரூ.818 கோடி மது விற்பனை: கடந்த வருடத்தை விட ரூ.9 கோடி அதிகம்

குழந்தை தொழிலாளர் விவகாரம் சமாஜ்வாடி எம்எல்ஏ நீதிமன்றத்தில் சரண்

டெல்லி முதல்வராக அடிசி நாளை பதவியேற்கிறார்: முகேஷ் புதிய அமைச்சர்