Saturday, June 29, 2024
Home » ஒரு மனிதர் இறந்தாலும் அது மாபெரும் இழப்பு.. தேர்தல் தோல்வியை மறைக்க கள்ளக்குறிச்சி விவகாரத்தை தொடர்ந்து எழுப்பி அதிமுக சதி : முதல்வர் மு.க.ஸ்டாலின் சாடல்

ஒரு மனிதர் இறந்தாலும் அது மாபெரும் இழப்பு.. தேர்தல் தோல்வியை மறைக்க கள்ளக்குறிச்சி விவகாரத்தை தொடர்ந்து எழுப்பி அதிமுக சதி : முதல்வர் மு.க.ஸ்டாலின் சாடல்

by Porselvi

சென்னை : தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகள் தொடர்பான மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அளித்த பதிலுரை:-

பேரவைத் தலைவர் அவர்களே,

நாற்பதுக்கு நாற்பது என்ற வெற்றியைப் பெற்ற பெருமிதத்துடன் இந்தப் பேரவைக்கு நாங்கள் வருந்துள்ளோம். நின்ற தேர்தலில் எல்லாம் வென்ற தலைவர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவில் நூற்றுக்கு நூறு வெற்றியைப் பெற்று புகழ் மாலையைச் சூட்ட வேண்டும் என்று நான் உறுதி எடுத்து பயணம் தொடங்கினேன். எடுத்த உறுதியில் வென்று நூற்றாண்டு நாயகருக்கு புகழ்மாலை சூட்டிய பெருமையோடு உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன்.

நடைபெற்றது நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும், எதிர்க்கட்சிகள் என்னைக் குறி வைத்தும், இந்த திராவிட மாடல் அரசை விமர்சித்தும்தான் தேர்தல் களத்தில் அதிகம் பேசினார்கள். திராவிட மாடல் ஆட்சியின் செல்வாக்கைக் குறைத்துக்காட்ட அவர்கள் செய்த உண்மைக்குப் புறம்பான பிரச்சாரங்களை மக்கள் முறியடித்து, “செய்கூலி சேதாரம் இல்லாமல்” முழுமையான வெற்றியை வழங்கினார்கள். ஆளும் திராவிட முன்னேற்றக் கழக அரசின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

நான் ஆட்சிப் பொறுப்பேற்ற காலம் முதல், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணிநேரமும் நாட்டு மக்களுக்கு நல்ல பல திட்டங்களைத் தீட்டி வந்துள்ளேன் என்பதை தமிழ்நாட்டு மக்கள் உணர்ந்ததன் அடையாளம்தான் இந்த 100 விழுக்காடு வெற்றி.

சட்டமன்றத் தேர்தலில், ‘வாக்களித்த மக்கள் – வாக்களிக்காத மக்கள்’ என்ற பாகுபாடின்றி, அனைவருக்கும் கடந்த மூன்றாண்டு காலத்தில் ஏராளமான நன்மைகளைச் செய்துள்ளோம். அதற்கான அங்கீகாரத்தை வாக்குகள் மூலமாக மக்கள் நமக்கு அளித்துள்ளார்கள். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நின்று, வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

வரும் இரண்டாண்டு காலமும் இதே போன்ற ஈடு இணையற்ற திட்டங்களைத் தீட்டித் தந்து, 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் மகத்தான வெற்றியை நாங்கள் பெறுவோம் இதனை மமதையோடு நான் சொல்லவில்லை; மனச்சாட்சிப்படி செயல்படும் இந்த ஸ்டாலின் மீதும் திராவிட மாடல் அரசின் மீதும் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையின் அடிப்படையில் துணிச்சலோடு சொல்கிறேன்.

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக ஆய்வு செய்தால், திமுக கூட்டணி 221 தொகுதிகளைக் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது.மக்கள் மனதில் யார் இருக்கிறார்கள்? யாரை மக்கள் அடியோடு புறக்கணித்து உள்ளார்கள்? என்பதையெல்லாம் இதன் மூலம் உணர முடியும். அதனால்தான், மக்களால் ஒதுக்கப்பட்டவர்கள், நமது முகத்தை நேருக்கு நேராகப் பார்க்க முடியாமல், தினந்தோறும் இந்த அவைக்கு வந்து, அவையின் மாண்புக்கும் குந்தகம் விளைவித்து சென்றுவிட்டார்கள்.

இந்தத் தேர்தல் தோல்வியை மறைக்க அவர்கள் போட்ட சதித்திட்டம்தான், நடவடிக்கை எடுக்கப்பட்ட கள்ளக்குறிச்சி விவகாரத்தை தொடர்ந்து கிளப்பியது. கடந்த 19 ஆம் தேதி இந்த சம்பவத்தை நான் கேள்விப்பட்டதும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டேன். அது குறித்து இதே அவையில் 20 ஆம் தேதி முழுமையான அறிக்கையை தாக்கல் செய்துள்ளேன். கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கான உண்மையான காரணத்தை அறிய – உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் கோகுல்தாஸ் அவர்கள் தலைமையில் ஆணையம் அமைத்தேன். சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க உத்தரவிட்டேன்.

அமைச்சர்கள், உள்துறை செயலாளர், டி.ஜி.பி. ஆகியோரை உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தேன். குற்றவாளிகளில் 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கள்ளச்சாராயம், விஷச்சாராயம் ஒழிப்பு மற்றும் குற்றவாளிகள் கைது நடவடிக்கைகள் தீவிரமாகத் தொடர்கிறது.

இறந்தோர் மற்றும் பாதிக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. பெற்றோரை இழந்த பிள்ளைகளின் கல்வி, வாழ்க்கைப் பொறுப்பை அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள்மீது பணியிடை நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட நடவடிக்கைகளை 24 மணி நேரத்தில் எடுத்துள்ளோம். இதன் பிறகும் நடவடிக்கைகள் சரியில்லை என்று சொல்வது, அவர்கள் நடத்தும் திசைதிருப்பல் நாடகம்

எதை மறைத்தோம் என்று சி.பி.ஐ. விசாரணை கேட்கிறார்கள்? “சாத்தான்குளம் சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டதற்கே சி.பி.ஐ. விசாரணை கேட்டீர்களே” என்று எதிர்க்கட்சித் தலைவர் பேட்டி அளித்திருக்கிறார். மனித உயிர்கள் இறந்து போனால், இரண்டு பேரா, இருபது பேரா என்று பார்ப்பது இல்லை. ஒரே ஒருவர் இறந்தாலும் அது மாபெரும் இழப்புதான். சாத்தான்குளம் சம்பவத்தை அன்றைய அ.தி.மு.க. அரசு முழுக்க முழுக்க மறைக்க, திரிக்க நினைத்தது. அதனால் அப்போது சி.பி.ஐ. விசாரணை கேட்டோம். ஆனால் இன்றைக்கு இந்த அரசு எதையும் மறைக்கவில்லை. குறுகிய காலத்திற்குள், குற்றவாளிகளைக் கைது செய்து, ஒருவர்கூட தப்ப முடியாது என்ற நிலையை உருவாக்கி இருக்கிறோம்.

விஷச்சாராய விற்பனை என்பது ஒரு சமூகக் குற்றம். விலை மதிப்பில்லாத மனித உயிர்களை பலி வாங்குகிற இதை முற்றிலுமாக ஒழிக்க இந்த அரசு உறுதி பூண்டுள்ளது என்பதை நான் இந்த அவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு பிறகு மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை எஸ்.பி.-க்கள் ஆய்வுக் கூட்டத்தில் பேசிய நான் இது தொடர்பாக கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளேன். இனிமேல் எங்காவது கள்ளச்சாராய உயிர் பலி நடக்குமானால், அதற்கு அந்த மாவட்ட காவல் துறை அதிகாரியும், எல்லைக்குட்பட்ட காவல் நிலைய அதிகாரியும்தான் பொறுப்பேற்க வேண்டும் என்பதை மிகவும் கண்டிப்புடன் சொல்லியிருக்கிறேன்

அதைப்போலவே, போதைப் பொருள் நடமாட்டம் மற்றும் விற்பனையை முற்றிலுமாகத் தடுக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறோம். வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வரப்படும் கஞ்சாவைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இக்குற்றங்களில் கைது செய்யப்படுபவர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்கிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக, குற்றவாளிகளின் 18 கோடியே 5 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 46 சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

கள்ளச்சாராயத்தை போலவே போதை மருந்து ஒழிப்பிலும் காவல் துறை அதிகாரிகள் உறுதியாக இருக்க வேண்டுமென்று தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறேன். மது, போதைப் பழக்கங்களுக்கு எதிராக குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை அரசு ஒரு பக்கம் எடுத்தாலும் இது தொடர்பான விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் அதிகம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று அரசு கருதுகிறது. போதை மருந்தின் பாதிப்புகளை உணர்த்துதல், குடிநோயாளிகளை மீட்பது ஆகியவற்றை ஒரு இயக்கமாகவே நடத்தி வருகிறது. அந்த இயக்கத்தை சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கட்சி பாகுபாடின்றி மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

அடுத்து, மிக முக்கிய வழக்கான கொடநாடு வழக்கு குறித்து இந்த அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை இந்த அவைக்குத் தெரிவிப்பதை எனது கடமையாகக் கருதுகிறேன். கொடநாடு வழக்கில், இதுவரை 268 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, எதிரிகள் பயன்படுத்திய 8 செல்போன்கள், 4 சிம் கார்டுகள் கோவை வட்டார தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து 8 ஆயிரம் பக்கம் கொண்ட ஆய்வறிக்கை பெறப்பட்டுள்ளது. சம்பவம் நடந்தபோது, எதிரிகள் சிலருக்கு வெளிநாட்டு போன் அழைப்புகள் வந்துள்ளது. எனவே, அதனை இண்டர்போல் உதவியுடன் விசாரிக்க வேண்டும். மேலும், சிலருக்கு இதில் தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறோம்.

சட்டம்-ஒழுங்கைக் காப்பதில் தமிழ்நாடு அரசு வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. அனைத்து விழாக்களையும் அமைதியான முறையில் நடத்திக்காட்டி இருக்கிறோம். 18 ஆண்டுகளாக நின்று போயிருந்த சிவகங்கை கண்டதேவி அருள்மிகு சொர்ணமூர்த்தீஸ்வரர் திருக்கோயில் தேரோட்டத்தை எந்தப் பிரச்சினையும் இன்றி, சுமுகமாக நடத்திக் காட்டியிருக்கிறோம். அதற்காக, அந்தப் பகுதி மக்கள் என்னை நேரில் சந்தித்து நன்றி கூறினார்கள் .

40 லட்சம் பேர் திரண்ட திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா, 2 லட்சம் பேர் பங்கெடுத்த மதுரை சித்திரைத் திருவிழா, 8 லட்சம் பேர் கூடிய திருச்செந்தூர் சூரசம்ஹாரம், 5 லட்சம் பேர் கூடிய பழனி தைப்பூசத் திருவிழா, 12 லட்சம் பேர் பங்கேற்ற குலசேகரப்பட்டினம் தசரா, 3 லட்சம் பேர் பங்கேற்ற வேளாங்கண்ணி தேவாலயக் கொடியேற்றத் திருவிழா, 20 ஆயிரம் பேர் பங்கேற்ற நாகூர் சந்தனக்கூடு திருவிழா உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் விழாக்கள் அனைத்தையும் அமைதியாக நடத்திக் காட்டியிருக்கிறோம் .

இன்றைக்குத் தமிழ்நாடு வளர்ச்சி மிகு மாநிலமாக இருக்கிறது என்றால் அமைதி மிகு மாநிலமாக அது இருப்பதால்தான். வளர்ச்சி மிகு மாநிலமாக இருக்கிறது என்பதை இந்த மாமன்ற உறுப்பினர்கள் அறிவார்கள். காவல் துறையில் கடந்த மூன்றாண்டு காலத்தில் மொத்தம் 190 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதில் 179 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளன என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மற்ற அறிவிப்புகளும் விரைவில் அரசாணையாக ஆகும் என்று உறுதி அளிக்கிறேன்.

கடந்த ஆண்டு மட்டும் காவல் துறையில் பல்வேறு சீர்திருத்த முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டன. மாணவர்களைப் பண்படுத்தும் “சிற்பி திட்டம்” மூலமாக மாணவர்களுக்கு ஒழுக்கப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. சிறு குற்றம் செய்யும் குற்றவாளிகளைத் திருத்தி அவர்களது எதிர்காலத்தை சிறப்பானதாக மாற்றுவதற்கு “பறவை திட்டம்” தீட்டப்பட்டது.பதிவேடு குற்றவாளிகள் குறித்த தகவல்களை ஒருங்கிணைக்க “பருந்து திட்டம்” செயல்பாட்டில் உள்ளது.

காவலர்களது நன்மைக்காக “ஸ்மார்ட் காவலர்” செயலி உருவாக்கப்பட்டது. விடுப்புகளை முறைப்படுத்த “விண்ணப்ப செயலி” அறிமுகம் செய்யப்பட்டது. காவலர்களின் மனஅழுத்தத்தைக் குறைக்கும் பயிற்சியாக “மகிழ்ச்சி” என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டது. மகளிர் காவலர்களுக்காக “ஆனந்தம் திட்டம்” அமலில் உள்ளது. வாகனத் திருட்டைக் கண்காணிக்க “ஐ.வி.எம்.எஸ். திட்டம்” நடைமுறைக்கு வந்துள்ளது.

பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்யவும், புகார்களை விரைந்து விசாரிக்கவும், நீதிமன்ற வழக்குகளை விரைந்து முடிக்கவும் இந்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

குற்றங்களைக் குறைக்கும் துறையாக மட்டுமல்லாமல், குற்றங்களைத் தடுக்கும் துறையாக செயல்பட வேண்டுமென்று காவல் துறை அதிகாரிகள் மாநாட்டில், ஆலோசனைக் கூட்டங்களில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். குற்றங்களின் எண்ணிக்கையைக் குறைப்பது அல்ல; குற்ற எண்ணத்தைக் குறைப்பது காவல் துறையின் பணியாக இருக்க வேண்டும் என்றெல்லாம் கட்டளையிட்ட வகையில் குற்றச்சூழல் கட்டுக்குள் உள்ளது. வருங்காலங்களில் குற்றங்களைத் தடுக்க மேலும் நடவடிக்கைகள் கடுமையாக இருக்கும் என்று உறுதியளிக்கிறேன்.

தமிழ்நாடு இன்று இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக உயர்ந்து வருகிறது. தொழில் வளர்ச்சியில், கல்வி வளர்ச்சியில், உள்கட்டமைப்பில், மனித வளர்ச்சிக் குறியீட்டில் என எந்த வகையை எடுத்துக் கொண்டாலும் தமிழ்நாடு உயர்ந்து வருகிறது. அதன் தனித்தன்மையை தனிச்சிறப்பாக வளர்த்து வருகிறோம். இந்த வளர்ச்சி என்பது என்னால் மட்டும் ஆனதல்ல. என்னை முதலமைச்சராக ஏற்றி வைத்து, ஒவ்வொரு துறையையும் தங்களது ஆக்கபூர்வமான நடவடிக்கைகளால் வளர்த்து வரும் எனது அருமை அமைச்சரவை சகாக்களால்தான் இந்த வெற்றியையும் உயர்வையும் பெற்று வருகிறோம் என்பதை எப்போதும் மறக்காமல் சொல்லி வருகிறேன். அனைத்து அமைச்சர் பெருமக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கூட்டணிக்கட்சியாக இருந்தாலும் பாராட்ட வேண்டிய நேரத்தில் பாராட்டி, சுட்டிக்காட்ட வேண்டிய நேரத்தில் கனிவோடு சுட்டிக்காட்டும் கூட்டணிக் கட்சியின் உறுப்பினர்களது வாதங்களும் பாராட்டுகளும் ஆலோசனைகளும் எங்களுக்கு எப்போதும் ஊக்கமளித்து வந்துள்ளது.

நேற்று நடைபெற்ற விவாதத்தின்போது, சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கோரிக்கைகளைப் பொறுத்தவரை, பரந்தாமன் அவர்கள் சென்னை மாநகரில் காவலர் குடியிருப்புகளில் பழுதுபார்க்கும் பணிகளை மேற்கொள்ள கோரிக்கை விடுத்தார். ஒவ்வொரு ஆண்டும் காவல் துறையில் சிறப்புப் பழுதுபார்க்கும் பணிகளுக்காக வழங்கப்பட்டு வரும் 40 கோடி ரூபாய், இந்த ஆண்டு முதல் 50 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டு அப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

சட்டமன்ற உறுப்பினர்கள் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களும் மற்றும் சின்னதுரை அவர்களும் கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்ட அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் மீதும், பொதுமக்கள் மீதும் காவல் துறையால் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதால் கடவுச் சீட்டு மற்றும் தடையில்லாச் சான்று போன்றவைகளைப் பெறுவதில் சிரமம் ஏற்படுகிறது என்று தெரிவித்திருந்தார்கள். கடந்த மூன்று ஆண்டுகளில் இது போன்ற பல ஆயிரம் வழக்குகள் திரும்ப பெறப்பட்டுள்ளன. மீதமிருக்கும் வழக்குகள் குறித்தும் உரிய தரவுகள் பெற்று திரும்பப்பெற நடவடிக்கை எடுக்குமாறு சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல்துறை இயக்குநர் அவர்களை அறிவுறுத்தியிருக்கிறேன்.

அருமைச் சகோதரர் சிந்தனைச் செல்வன் அவர்கள் பேசும்போது செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் பகுதியில் ஒரு புதிய தீயணைப்பு நிலையம் அமைத்து தரக் கோரினார். அக்கோரிக்கையை ஏற்று, கோவளத்தில் ஒரு புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் அமைக்கப்படும். இதன் மூலம் திருப்போரூர் பகுதியும், கடலோரப் பகுதியான கோவளமும் பயன்பெறும்.

பா.ம.க. சட்டமன்றக் கட்சித் தலைவர் ஜி.கே.மணி அவர்கள் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் பணி செய்த காவலர்களுக்கு தேர்தல் பணிப்படி வழங்க கோரிக்கை விடுத்தார். அக்கோரிக்கையின் அடிப்படையில் காவல்துறை தலைமை இயக்குநர் அவர்களிடம் கருத்துரு பெற்று விரைவில் தேர்தல் பணிப்படி வழங்கப்படும்.

முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க., இந்தக் கூட்டத்தொடரில் எடுத்த தவறான நிலைப்பாடு எனக்கு வருத்தம் அளிப்பதாகவே இருக்கிறது. ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கு பதில் சொல்வதற்கு நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம். அந்த பதிலைக் கேட்பதற்குத்தான் அ.தி.மு.க. தயாராக இல்லை. ஒருபுறம் தேர்தல் தோல்வி; மறுபுறம் சொந்தக் கட்சியில் நெருக்கடி என இரண்டுக்கும் இடையே சிக்கிக் கொண்டு, அதில் இருந்து தப்பிப்பதற்காக அவை நடவடிக்கைகளுக்குக் குந்தகம் ஏற்படுத்தியது அ.தி.மு.க. நாம் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து எதிர்க்கட்சியினர் இந்த அவையில் எவ்வளவு நேரம் பேசியுள்ளார்கள் என்பதையும், அ.தி.மு.க. ஆட்சியில் நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது எங்களுக்கு எவ்வளவு நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது என்பதையும் ஒப்பிட்டு பார்த்தால் இரண்டு ஆட்சிகளின் ஜனநாயகப் பண்பும் தெரியும், புரியும்!

பேரவைத் தலைவர் அவர்களே, ஆசிரியருக்கே உரிய கண்டிப்புடனும், தெளிந்த அறிவுக்கூர்மையுடனும், அதே நேரத்தில் சுவைபடவும் இந்த அவையை நடத்திச் செல்லும் தங்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் .

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

eighteen − 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi