படிங்க, படிங்க, படிச்சுக்கிட்டே இருங்க, படிப்பு ஒன்றுதான் யாராலும் பறிக்க முடியாது சொத்து : முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை : சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் “ஐம்பெரும் விழா” நடைபெற்று வருகிறது. நேரு உள்விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “ஐம்பெரும் விழா” நடைபெறுகிறது. இந்த விழாவில் தமிழ் பாடத்தில் 100/100 மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்களுடன் முதலமைச்சர் புகைப்படம் எடுத்துக் கொண்டார். பொது தேர்வில் தமிழ் பாடத்தில் 100/100 மதிப்பெண் எடுத்த மாணவர்கள் 43 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் அரசுப்பள்ளிகளில் 22,931 திறன்மிகு வகுப்பறைகளை (SMART CLASS) முதல்வர் தொடங்கி வைத்தார். பொது தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 1761 அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி (TAB) வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.மேலும் 7 வது தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,”தேர்தல் நடத்தை விதிகள் முடிந்த உடன் முதல் நிகழ்ச்சியாக பள்ளிக்கல்வித்துறை நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பினேன். அரசியல் மேடைகளில்தான் பெரும்பாலும் முப்பெரும் விழா, ஐம்பெரும் விழா நடைபெறும். தற்போது பள்ளிக்கல்விதுறை சார்பில் ஐம்பெரும் விழா நடைபெறுகிறது. பள்ளிகளில் செயல்படுத்தப்படும் காலை உணவு திட்டத்தால் 16 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர். இல்லம் தேடி கல்வி திட்டம் மூலம் 27 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றன. நான் முதல்வன் திட்டத்தின்கீழ் 28 லட்சம் பேர் பயன் பெறுகின்றனர். அரசு பள்ளிகளின் மேம்பாட்டுக்காக நம்ம ஸ்கூல் நம்ம பள்ளி திட்டம் அறிமுகம் செய்யப்படும். ஆகஸ்ட் மாதம் தமிழ் புதல்வன் திட்டம் தொடங்கப்படும். அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு “தமிழ்ப் புதல்வன் திட்டம்” மூலம் மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படுகிறது.

அரசு பள்ளிகளில் படித்துவிட்டு கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு ஆகஸ்ட் முதல் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும். திராவிட மாடல் ஆட்சியில் பள்ளிக்கல்வித் துறையில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நான் பிரச்சாரத்துக்கு சென்றிருந்தபோது பலரும் புதுமைப்பெண் திட்டத்தை பாராட்டி பேசினர். கல்வியிலும் மோசடி செய்வதே நீட் தேர்வு. நீட் தேர்வை முதலில் எதிர்த்தது தமிழ்நாடுதான், நீட் தேர்வு மோசடிக்கு விரைவில் முடிவு கட்டுவோம். படிங்க, படிங்க, படிச்சுக்கிட்டே இருங்க, படிப்பு ஒன்றுதான் யாராலும் பறிக்க முடியாது சொத்து. கல்வி எனும் நீரோடை தடைபடாமல் இருக்க இந்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்,” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு

புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது