ஒன்றிய அரசின் நிதியை முழுமையாக பெற்றால்தான் முழுமையான நிவாரண பணிகளை மேற்கொள்ள முடியும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி

டெல்லி : தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு குறித்து கோரிக்கை வைக்க பிரதமர் மோடி முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சந்திக்கிறார். இதையடுத்து டெல்லியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “இன்றிரவு பிரதமரை சந்திக்க நேரம் கொடுத்துள்ளார்கள்.வெள்ள பாதிப்புக்கு இடைக்கால நிவாரண தொகையை உடனடியாக வழங்க பிரதமரிடம் கோரிக்கை வைக்க உள்ளேன்.மிக்ஜாம் புயல் பாதிப்பு ஓய்வதற்குள் தென் மாவட்டங்களில் மிக மிக கனமழை பெய்துள்ளது. மிக்ஜாம் புயலின் போது, அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை சேர்ந்த மக்கள் காப்பாற்றப்பட்டனர். புயலுக்கு முன்பும், பின்பும் அரசு எடுத்த நடவடிக்கையால்தான் பாதிப்புகள் குறைந்தது.

ஒன்றிய அரசின் குழுவினர் 4 மாவட்டங்களில் ஆய்வு செய்தனர். இது பெரும் பேரிடர் என்பதால் கூடுதல் நிதியை கோரியுள்ளோம். ஒன்றிய அரசின் நிதி வரட்டும் என காத்திருக்காமல் 4 மாவட்ட மக்களுக்கான இழப்பீட்டை அரசு அறிவித்தது.ஒன்றிய அரசின் நிதியை முழுமையாக பெற்றால்தான் முழுமையான நிவாரண பணிகளை மேற்கொள்ள முடியும். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. வரலாற்றில் இதுவரை பதியப்படாத அளவுக்கு மழைப்பொழிவு பதிவாகி இருந்தது.ஒராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரேநாளில் கொட்டித் தீர்த்ததை நீங்கள் எல்லாம் அறிவீர்கள்.

கனமழைக்கான வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை சற்று தாமதமாகவே கிடைத்தது. வானிலை மையம் கணித்ததை விட பல மடங்கு கூடுதல் மழை பெய்துள்ளது. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு காயல்பட்டினத்தில் 95 செ.மீ. மழை பெய்துள்ளது. தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் ராணுவ வீரர்கள், பேரிடர் மீட்புப்படையினர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.வெள்ள நீர் சூழ்ந்த பகுதியில் உள்ள மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது.தென் மாவட்டங்களில் 8 அமைச்சர்கள், 10 ஆட்சி அலுவலர்கள் மீட்பு பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்,”என்றார்.

Related posts

நடப்பாண்டில் இயற்கை பேரிடர்களால் 1,492 பேர் பலி

இஸ்ரேலுக்கு பக்க பலமாக நிற்போம் என அமெரிக்கா சூளுரை … இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க தூதரகம் எச்சரிக்கை!!

மகாளய அமாவாசை : மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!!