Thursday, September 12, 2024
Home » முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அறிமுகப் படுத்திய புதிய திட்டங்களால் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக மிளிரும் தமிழ்நாடு: அரசு பெருமிதம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அறிமுகப் படுத்திய புதிய திட்டங்களால் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக மிளிரும் தமிழ்நாடு: அரசு பெருமிதம்

by Ranjith

* மக்களை கவரும் கலைஞர் மகளிர் உரிமை திட்டம், விடியல் பேருந்து திட்டம், புதுமைப் பெண் திட்டம்

* 69 ஆயிரம் மகளிருக்கு 8 கிராம் தங்க நாணயங்களுடன் நிதியுதவி தந்து மகத்தான சாதனை

* அண்டை மாநிலங்கள், அயல்நாடுகளை ஈர்த்து வருகின்றன

சென்னை: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு செயல்படுத்தி வரும் விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, புதுமைப் பெண் திட்டம், முதலீட்டாளர்கள் முதல் முகவரி, மீனவர்கள், விவசாயிகள் நலன் முதலான மக்கள் நலன் காக்கும் திட்டங்களால் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021ம் ஆண்டு பொறுப்பேற்றது முதல் ஒவ்வொரு நாளும் தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்காக ஓய்வின்றி உழைத்து வருகிறார்.

அதற்காக புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தி அதனை வெற்றிகரமாக நிறைவேற்றி வருகிறார். குறிப்பாக, பெண்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள் உட்பட அனைத்துப் பிரிவினரும் நல்வாழ்வு பெற முதல்வர் நிறைவேற்றி வரும் திட்டங்கள் அண்டை மாநிலங்களையும், அயல்நாடுகளையும் ஈர்த்துள்ளன.

* விடியல் பேருந்து திட்டம்
பெண்கள், மாற்றுத் திறனாளிகள், திருநங்கையர் ஆகியோர் கட்டணமில்லாமல் பயணிக்கும் இத் திட்டத்தில் இதுவரை ரூ.6661.47 கோடியில் மகளிரும் மாற்றுத் திறனாளிகளும் திருநங்கைகளும் ஏறத்தாழ 473.61 கோடி முறை பயண நடைகளும், திருநங்கைகள் 28.62 லட்சம் பயண நடைகளும், மாற்றுத்திறனாளிகள் 3.78 கோடி பயண நடைகளும் மேற்கொண்டுள்ளனர். இதனால் பெண்கள் மாதம் ஒன்றுக்கு ரூ.888 வரை சேமிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

* கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
இத்திட்டத்தில் இதுவரை 1 கோடியே 15 லட்சம் மகளிர்க்கு மாதந்தோறும் ரூ1,000 உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. இதுவரை மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கும் வழங்கிட அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

* புதுமைப்பெண் திட்டம்
6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவியர், தடையின்றி உயர் கல்வி பயிலும் நோக்கோடு, கல்லூரிகளில் பட்டப்படிப்புகள், பட்டயப் படிப்புகள் மற்றும் தொழில் துறைப் பயிற்சி நிறுவனங்களில் பயில உதவித் தொகையாக மாதந்தோறும் ரூ.1,000 ஒவ்வொரு மாணவிக்கும் அவர்களது வங்கி கணக்கில் நேரிடையாக வழங்கப்படுகிறது. இதனால் 2.73 லட்சம் மாணவிகள் பயன் பெற்று வருகின்றனர். இத்திட்டத்தின் பயனாக பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை தேசிய அளவில் 26 சதவிகிதம் என்ற நிலையில், தமிழ்நாட்டில் 52 சதவீதமாக உயர்ந்து மிகப்பெரும் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இதேபோல மாணவர்களுக்கும் மாதம் ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டம் தொடங்கப்பட உள்ளது.

* இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48 திட்டம்
“இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48” திட்டத்தில் சாலை விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, “முதல் 48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவ சிகிச்சை செலவை” தமிழ்நாடு அரசே ஏற்கும். சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, விபத்து நடந்த முதல் 48 மணிநேர நெருக்கடியான கால கட்டத்தில், துல்லியமான திட்டமிடல் மூலம், காலவிரயத்தைத் தவிர்த்து உயிரைக் காக்கும் உடனடி சிகிச்சையை இலவசமாகப் பெறுவதை இத்திட்டம் உறுதி செய்கிறது.

* நான் முதல்வன் திட்டம்
முதல்வரின் கனவுத் திட்டமான நான் முதல்வன் திட்டம் 1.3.2022 அன்று முதலமைச்சர் பிறந்த நாளில் தொடங்கப்பட்ட திட்டமாகும். இத் திட்டத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பெறுவதற்கான பயிற்சிகளும், பட்டதாரிகள் வேலைக்கு செல்வதற்கான திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. 2026க்குள் 20 லட்சம் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்குவது இத் திட்டத்தின் நோக்கமாகும். கடந்த 2 ஆண்டுகளில் 28 லட்சம் இளைஞர்கள் பயன் பெற்றுள்ளனர். இத் திட்டத்தில் பயன்பெற்ற பலர் ஒன்றிய அரசின் குடிமைப் பணித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர்.

* பணிபுரியும் மகளிருக்கான தோழி விடுதிகள்
சமூகநலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில் 19 மாவட்டங்களில் பணிபுரியும் மகளிருக்கு தோழி விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. முதல்கட்டமாக திருச்சி, கூடுவாஞ்சேரி மற்றும் தாம்பரம் ஆகிய 3 இடங்களில் ரூ 31.07 கோடி செலவில் மகளிர் விடுதிகள் கட்டப்பட்டு 688 பணிபுரியும் மகளிர் பயனடைந்து வருகின்றனர். 2ம் கட்டமாக ஓசூர், திருவண்ணாமலை மற்றும் பரங்கிமலை ஆகிய 3 இடங்களில் 432 பணிபுரியும் மகளிர் பயன்பெறும் வகையில் ரூ.35.87 கோடியில் தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் கட்டப்படுகின்றன. சேலம், தஞ்சாவூர், பெரம்பலூர், வேலூர், விழுப்புரம், திருநெல்வேலி, சென்னை-அடையாறு ஆகிய 7 இடங்களில் 476 படுக்கை வசதிகள் கொண்ட விடுதிகள் ரூ.4.21 கோடியில் புதுப்பிக்கப்பட்டு 13.7.2023 முதல் செயல்பட்டு வருகின்றன.

* திருநங்கைகள் நலன்
40 வயது க்கு மேற்பட்ட ஆதரவற்ற திருநங்கைகளுக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியம் ரூ.1,000லிருந்து 2023 மார்ச் முதல் ரூ. 1,500ஆக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் ரூ.2.36 கோடி நிதி ஒதுக்கீட்டில் 1482 திருநங்கைகள் பயனடைந்து வருகின்றனர். திருநங்கைகளுக்குச் சொந்தமாக தொழில் தொடங்கிட மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் மூன்று ஆண்டுகளில் ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 518 திருநங்கைகள் சுயதொழில் மானியம் பெற்று பயனடைந்துள்ளனர்.

* மீனவர் நலன்
மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகை ரூ.5,000 என்பது ரூ.8,000 மற்றும் மீன்பிடி குறைவு காலத்திற்கான சிறப்பு உதவி தொகை ரூ.5,000 என்பது ரூ.6,000 என இந்த இரு திட்டங்களிலும் 10,20,839 மீனவக் குடும்பங்களுக்கு ரூ.589 கோடி நிவாரண உதவித் தொகை பெற்று பயன் அடைந்து வருகின்றனர்.

* விவசாயிகள் நலன்
தொலைநோக்குத் திட்டமாக இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில்தான் வேளாண்மைக்கு என தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வேளாண் தொழில் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ரூ.4,366 கோடி பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை, ரூ.651 கோடியில் கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை, ரூ.614 கோடியில் கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், ரூ.270 கோடி விவசாய இயந்திரங்கள், ரூ.56 கோடியில் முதல் முறையாக ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியம், ரூ.137 கோடியில் குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டம், ரூ.139 கோடியில் பயறு பெருக்கத் திட்டம் ஆகியவை சிறப்புற செயல்படுத்தப்பட்டு விவசாயிகள் எண்ணற்ற பயன்களை பெற்று வருகின்றனர்.

* தொழில்துறை வளர்ச்சி
வரும் 2030ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்த வேண்டும் என்ற லட்சியத்தை எட்டும் வகையில், உயர் தொழில்நுட்பம் சார்ந்த தொழில் முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் வேலைவாய்ப்புகள் மிகுந்த முதலீடுகளை ஈர்ப்பது என்ற இருமுனை அணுகுமுறைகள் கொண்டுள்ள “முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு” திட்டம் முனைப்புடன் செயலாக்கம் பெற்று வருகிறது.

சென்னை, கோவை , தூத்துக்குடி ஆகிய இடங்களிலும், மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் ஆகிய நாடுகளிலும் நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாடுகள் வாயிலாக மொத்தம் ரூ.9.61 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு ஏறத்தாழ 30 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான ஒப்பந்தங்கள் நடைபெற்று, இதுவரை தொழில் வளர்ச்சி வரலாற்றில் இல்லாத ஒரு மாபெரும் புரட்சி நிகழ்த்தப்பட்டுள்ளது. முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்னர், 45 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 27 தொழிற்சாலைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலமாக 74,757 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் பெற்றுள்ளனர்.

* ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்
தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்கக் கொள்கை கடந்த 20.09.2023ல் முதலமைச்சர் வெளியிடப்பட்டது. 2021ம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 2,032. இன்றைய நிலவரப்படி இது 4 மடங்கிற்கும் மேல் அதிகரித்து 8,416ஆக உயர்ந்துள்ளது. மகளிர் ஸ்டார்ட்அப்களின் எண்ணிக்கை 2021-ம் ஆண்டில் 966 ஆக இருந்தது. தற்போது 3 மடங்குக்கு மேல் அதிகரித்து 3,163 ஆக உயர்ந்துள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உகந்த சூழலைக் கட்டமைத்துச் செயல்படும் மாநிலங்களின் பட்டியலை ஒன்றிய அரசு வெளியிட்டது.

இதில் தமிழ்நாடு முதல் நிலையை பிடித்து இருப்பதிலிருந்தே இந்த அரசின் சாதனையை புரிந்து கொள்ள முடியும். இப்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் மகளிர், மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்டோரின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வரும் மகத்தான திட்டங்களால் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதல் மாநிலமாக முன்னேற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

15 + 15 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi