Friday, October 4, 2024
Home » முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான 3 ஆண்டுகால ஆட்சியில் 46 புதிதாக திறக்கப்பட்ட தொழிற்சாலைகள் 1.40 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான 3 ஆண்டுகால ஆட்சியில் 46 புதிதாக திறக்கப்பட்ட தொழிற்சாலைகள் 1.40 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள்

by Ranjith

* தொழில் வளர்ச்சியில் தலைசிறந்த மாநிலமாக திகழ்கிறது தமிழ்நாடு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் 2021க்கு பின் 46 புதிய தொழிற்சாலைகள் திறக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 1,39,725 இளைஞர்களுக்கும், மகளிருக்கும் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக திகழ்கிறது. 2021ம் ஆண்டில் திராவிட மாடல் ஆட்சி தொடங்கிய பின் 2030ம் ஆண்டிற்குள் தமிழ்நாடு ஒரு டிரில்லியன் பொருளாதார வளர்ச்சி பெற்ற மாநிலமாகும் எனும் இலக்குடன் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடுகள் நடத்தப்பட்டு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் பணிகள் தொடங்கப்பட்டன.

முதற்கட்டமாக, முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு என்ற பெயரில் சென்னை கோயம்புத்தூர், தூத்துக்குடி ஆகிய நகரங்களில் நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாடுகள் மூலம் ரூ.1,90,803 கோடிக்கான முதலீடுகள் ஈர்க்கப்பட்டு 2,80,600 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இரண்டாம் கட்டமாக ஐக்கிய அரபு நாடுகள், சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு 17,371 பேருக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துகிற வகையில், ரூ.7,441 கோடி மதிப்பிலான முதலீடுகள் பெறப்பட்டன.

மூன்றாம் கட்டமாக, 2024 ஜனவரி 7, 8 ஆகிய நாட்களில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தமிழ்நாடு அரசு நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முன் எப்போதும் இல்லாத அளவாக, 631 ஒப்பந்தங்கள் மூலம் ரூ.6,64,180 கோடி முதலீடுகளும், அவற்றின்மூலம் 14,54,712 பேருக்கு நேரடி வேலைவாய்ப்புகளும், 12,35,945 பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் என மொத்தம் 26,90,657 வேலைவாய்ப்புகளுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளன.

4ம் கட்டமாக, 27-1-2024 அன்று புறப்பட்டு ஸ்பெயின் நாட்டிற்கு புறப்பட்டு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள பொருளாதாரம் மற்றும் வர்த்தக துறை அமைச்சக அதிகாரிகள், ஸ்பெயின் தொழில் கூட்டமைப்பு பொறுப்பாளர்கள், இன்வெஸ்ட் ஸ்பெயின் என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் ஆகியோரை சந்தித்து தமிழ்நாட்டில் உள்ள தொழில் வாய்ப்புகளையும், அரசு வழங்கும் சலுகைகளையும், கிடைக்கும் திறன் வாய்ந்த மனித வளத்தையும் எடுத்துக்கூறி, தமிழ்நாட்டில் தொழில் தொடங்கிட வருமாறு அழைப்பு விடுத்தார்.

அவற்றின் பயனாக ரூ.3,440 கோடி அளவிற்கு தொழில் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. 5ம் கட்டமாக, முதல்வர் மு.க.ஸ்டாலின், 22-9-2024 அன்று அமெரிக்கா பயணம் மேற்கொண்டு உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களின் முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் உள்ள தொழில் வாய்ப்புகளையும் ஆற்றல் வாய்ந்த மனித வளங்களையும் எடுத்துரைத்து தொழில் தொடங்கிட வருமாறு அழைப்பு விடுத்தார்.

அதன் பயனாக அமெரிக்காவில் 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டன. அந்த ஒப்பந்தங்கள் மூலம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு 11,516 புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 21-8-2024 அன்று, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை சார்பில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.17,616 கோடி முதலீட்டில் 19 தொழிற்சாலைகளை திறந்து வைத்தார்கள்.

அதன் விவரம் பின் வருமாறு:
1. திருவள்ளூர் மாவட்டத்தில் மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் ஓம்ரான் தொழிற்சாலை
2. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயந்திர மின்னணுவியல் தயாரிக்கும் நிறுவனத் தொழிற்சாலை
3. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மின்னணுவியல் தயாரிக்கும் மதர்சன் எலெக்ட்ரானிக்ஸ் ஆலை
4. காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜூரோஜின் டெவலப்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தொழில் பூங்கா
5. திருவள்ளூர் மாவட்டத்தில் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் டிவிஎஸ் தொழிற்சாலை
6. சென்னையில் தகவல் தொழில்நுட்ப துறையில் எல் அண்ட் டி நிறுவனத்தின் புத்தாக்க மையம்
7 .செங்கல்பட்டு மாவட்டத்தில் தொழில்நுட்ப மையம் சார்பில் ரோனால்ட் நிஸ்ஸான் தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக மையம்
8. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் சுந்தரம் பாஸ்டனர்ஸ் தொழில் நிறுவனத்தின் பொது உற்பத்தி மையங்கள்
9. காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் எஸ்ஜாய் குழுமம் சார்பில் ரசாயன ஆலை
10. ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஏனஸ் ராம்ராஜ் நிறுவனத்தின் ஆடைகள் தயாரிப்பு தொழிற்சாலை
11. திருவள்ளூர் மாவட்டத்தில் மருத்துவ பொருள்கள் தயாரிக்கும் கேப்னின் பாய்ண்ட்ஸ் தொழிற்சாலை
12. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெக் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பொது உற்பத்தி தொழிற்சாலை
13. ஈரோடு மாவட்டத்தில் மில்க்கி மிஸ்ட் நிறுவனத்தின் உணவு பதப்படுத்துதல் தொழிற்சாலை
14. காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த குரிட்விண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பொது உற்பத்தி விரிவாக்க தொழிற்சாலை
15. காஞ்சிபுரம் மாவட்டத்தில்  ஹைபுரோ ஹெல்த் கேர் தொழிற்சாலை விரிவாக்கம்
16. திருவண்ணாமலை மாவட்டத்தில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மோட்டார் வாகன தொழிற்சாலை
17. காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த குரூபோ காஸ்டோஸ் நிறுவனத்தின் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை
18. திருவள்ளூர் மாவட்டத்தில் ஜிபி சல்போனேட்ஸ் தொழிற்சாலையின் ரசாயன தொழிற்சாலை
19. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதர்சன் ஹெல்த் நிறுவனத்தின் மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை
மேற்காணும் இந்த 19 தொழிற்சாலைகளும் மொத்தம் ரூ.17,616 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டவை. இந்த 19 தொழிற்சாலைகளிலும் மொத்தம் 64,968 இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இவை தவிர மேலும், பல தொழிற்சாலைகளும் தொடங்கப்பட்டு உற்பத்திகளில் ஈடுபட்டுள்ளன.

19 புதிய தொழிற்சாலைகளை தொடங்கி வைத்ததுடன், அதே நாளில் முதல்வர் ரூ.51,157 கோடி முதலீட்டிலான 28 புதிய தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். அந்த தொழிற்சாலைகளின் வாயிலாக, 41,835 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள்
கிடைக்கும்.

இவற்றுடன், முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.9,000 கோடி முதலீட்டில் 5,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைப்பதற்காக ராணிப்பேட்டைக்கு நேரடியாக சென்று அங்கு சிப்காட் பனப்பாக்கம் தொழிற்பூங்காவில் அடிக்கல் நாட்டியுள்ளார். இந்த தொழிற்சாலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 2024 மார்ச் மாதம் நடைபெற்று 6 மாதங்களில் தொழிற்சாலை அமைக்கப்படுகிறது என்பது திராவிட மாடல் அரசு தொழில் வளர்ச்சியில் கொண்டுள்ள அக்கறைக்கு சிறிய சான்றாகும்.

* ஒன்றிய அரசு பாராட்டும் தமிழ்நாட்டின் தொழில்வளம்
ஒன்றிய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் 2023-2024ம் ஆண்டுக்கான கள ஆய்வையும் கணக்கெடுப்பையும் நடத்தியதில் உற்பத்தி தொழில்களில் தமிழ்நாட்டில் 7.5 சதவிகித வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளதாகவும், நாட்டிலேயே அதிக தொழிற்சாலைகள் மற்றும் வேலைவாய்ப்பில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாகவும் அறிவித்துள்ளது. எனவே, தமிழ்நாடு தொடர்ந்து புரிந்துவரும் சாதனைகள் தொழில் வளர்ச்சியில் இந்தியாவின் தலைசிறந்த மாநிலம் தமிழ்நாடு என்னும் வரலாற்றை பறைசாற்றும்.

* முந்தைய ஆட்சியுடன் ஓர் ஒப்பீடு
திராவிட மாடல் அரசு புதிய புதிய தொழிற்சாலைகளை திறந்துவரும் சூழ்நிலையில் முந்தைய ஆட்சி காலத்தின் தொழில் வளர்ச்சி பணிகளை ஒப்பிட்டு நோக்குவது இந்த அரசின் சாதனைகளை மேலும் தெளிவுபடுத்தும் என கருதலாம். அதாவது, 2016-2021 ஆகிய 5 ஆண்டுகளில் முந்தைய ஆட்சியில் ரூ.15,543 கோடி முதலீட்டில் 10,316 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் 21 தொழிற்சாலைகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டு, அவற்றுள் 12 தொழிற்சாலைகள் மட்டுமே தொடங்கப்பட்டு உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன.

ஆனால், திராவிட மாடல் அரசு 3 ஆண்டுகளில் மொத்தம் 31 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கத்தக்க வகையில் ரூ.9.74 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு முதலில் 27 புதிய தொழிற்சாலைகளை திறந்து வைத்துள்ளது. அத்துடன் மேலும் 19 தொழிற்சாலைகள் ரூ.17,616 கோடி முதலீட்டில் முதல்வரால் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

ஆக மொத்தம் 46 புதிய தொழிற்சாலைகள் இதுவரை திறந்து வைக்கப்பட்டுள்ளன. மேலும், பல்வேறு தொழிற்சாலைகள் வந்து கொண்டிருக்கின்றன. இவற்றின் காரணமாக திராவிட மாடல் அரசின் தொழில் வளர்ச்சி சாதனைகள் இந்திய அளவில் சிறந்து விளங்குகின்றன இதனை ஒரிரு நாட்களுக்கு முன் ஒன்றிய அரசின் புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி உறுதிப்படுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment

eleven − 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi