முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு வருங்காலங்களில் நிரந்தர சான்றிதழ்

சென்னை: மாநில அரசால் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சிறுபான்மையினர் அந்தஸ்து சான்றிதழ், வருங்காலங்களில் நிரந்தர சான்றிதழாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று சிறுபான்மையினர் நலன் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

அமைச்சர்கள் துரைமுருகன், கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், உதயநிதி ஸ்டாலின், சு.முத்துசாமி, பி.கீதா ஜீவன், பி.கே.சேகர் பாபு, செஞ்சி கே.மஸ்தான், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எம்எல்ஏ இனிகோ இருதயராஜ், மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர், துறை செயலாளர்கள், கிறிஸ்துவ திருச்சபைகளின் பேராயர்கள், அருட்சகோதரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழ்நாட்டில் வாழும் சிறுபான்மையினரின் நலன்களைப் பாதுகாப்பதிலும், அவர்களது சமூகப் பொருளாதார நிலையினை மேம்படுத்துவதிலும் அரசு எப்போதும் கவனமாக உள்ளது. உபதேசியர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்கள் பதிவு செய்வதற்கான நிபந்தனைகள் தளர்வு செய்யப்பட்டு, அது இம்மாத இறுதிக்குள் தொடங்கப்படும். கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து சான்றிதழ் பெறுவதற்கு இணைய வழியில் விண்ணப்பித்து சான்றிதழ் பெற்றுக் கொள்வதற்கான வெப் போர்டல் இந்த மாதத்திற்குள் நடைமுறைக்குக் கொண்டுவரப்படும்.

கிறித்துவர்கள் ஜெருசலேம் புனிதப் பயணம் செல்வதற்கு அரசு நிதியுதவி வழங்குவதற்கு திருத்தியமைக்கப்பட்ட வழிமுறைகளும் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும். கிறித்துவக் கல்லறைகளில் மீண்டும் ஒரு உடலை அடக்கம் செய்வதற்கு தற்போதுள்ள விதிகளைத் தளர்த்தி சவப்பெட்டியில்லாமல் புதைக்கப்பட்ட இடத்தில், 12 மாதங்களுக்குப் பிறகு வேறு ஒருவரின் சடலத்தைப் புதைக்க அனுமதி அளிக்கும் ஆணையையும்; மரத்தினால் செய்யப்பட்ட சவப்பெட்டியில் புதைக்கப்பட்ட இடத்தில் 18 மாதங்களுக்குப் பிறகு அதே குடும்பத்தைச் சேர்ந்த வேறு ஒருவரின் சடலத்தைப் புதைக்க அனுமதி அளிக்கும் ஆணையையும்;

உலோகத்தினால் செய்யப்பட்ட சவப்பெட்டியில் புதைக்கப்பட்ட இடத்தில், ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அதே குடும்பதைச் சேர்ந்த வேறு ஒருவரின் சடலத்தைப் புதைக்க அனுமதி அளிக்கும் ஆணையையும்; சென்னை கீழ்ப்பாக்கத்திலுள்ள கிறித்துவக் கல்லைறையில் இருப்பதைப் போன்று உடல்களை அடுக்ககப் பெட்டகங்களில் அடக்கம் செய்ய அனுமதியளிக்கும் ஆணையையும் இந்த வார இறுதிக்குள் வெளியிடப்படும். இந்தப் புதிய விதி, தமிழகத்திலுள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றில் உள்ள கிறித்துவக் கல்லைறைகளுக்குப் பொருந்தும்.

கிறித்தவர்களுக்கான கல்லறைத் தோட்டங்கள், இஸ்லாமியர்களுக்கான கபர்ஸ்தான் இல்லாத மாவட்டத் தலைநகரங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு, மாநகராட்சி, நகராட்சி சார்பில் கல்லறைத் தோட்டம், கபர்ஸ்தான் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் நிதியுதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்ற மாணவிகள் புதுமைப்பெண் திட்டத்தில் சேர்த்தல் குறித்து நிதி நிலை அறிக்கையில் நல்ல செய்தி வரும். கிராமப்புறங்களில் உள்ள அரசின் நிதியுதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் முதலமைச்சரின் காலைச் சிற்றுண்டி திட்டம் விரிவாக்கம் குறித்து பரிசீலிக்கப்படும்.

சிறுபான்மையினரின் கல்லூரி ஆசிரியர் பணியிடங்களில், யு.ஜி.சி. மற்றும் அரசு விதிகளுக்குட்பட்டு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு, பல்கலைக்கழகம் மற்றும் அரசால் மூன்று மாத காலத்திற்குள் நியமன அங்கீகாரம் அளிக்கப்படும். மாநில அரசால் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மதசார்பு சிறுபான்மையினர் அந்தஸ்து சான்றிதழ் தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இனிவருங்காலங்களில் இச்சான்றிதழ் காலம் குறிப்பிடப்படாமல் நிரந்தர சான்றிதழாக வழங்கப்படும்.

சமூகநலத் துறை, ஆதி திராவிடர் நலத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை ஆகிய துறைகளின் கீழ் உதவி பெறும், அரசு சாரா தொண்டு நிறுவனங்களைப் பதிவு செய்தல், உரிமங்களைப் புதுப்பித்தல், நிதியுதவி மற்றும் மானியங்களைப் பெறுவதற்கான நடைமுறைகள்ஆகியவை எளிமைப்படுத்தப்படும். இதற்கென பிரத்யேகமாக ஒரு இணையதளம் உருவாக்கப்படும். மற்ற கோரிக்கைகள் மற்றும் கருத்துகள் மீதும் அரசு உரிய கவனம் செலுத்தி விரைவில் தீர்வு காணப்படும். திராவிட மாடல் அரசின் இந்தப் பணி தொய்வின்றித் தொடரும்.  இவ்வாறு அவர் பேசினார்.

Related posts

ஆன்லைன் சூதாட்டத்தில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட பாஜ நிர்வாகியின் அண்ணன் கைது: ரூ.48.80 லட்சம், 89 பவுன் நகை பறிமுதல்

குப்பை, உணவு கழிவுடன் சேர்த்து நாப்கின், ஊசியை போடக்கூடாது: வார்டுசபை கூட்டத்தில் அறிவுறுத்தல்

சிறுவன் உட்பட 8 பேர் சேர்ந்து பாடகர் மனோவின் மகன்கள் மீது தாக்குதல்: வைரலாகும் புதிய சிசிடிவி காட்சி