3 புதிய குற்றவியல் சட்டங்களும் 90- 99 சதவீதம் பழைய குற்றவியல் சட்டங்களின் கட், காபி, பேஸ்ட்தான் : ப.சிதம்பரம் விமர்சனம்

புதுடெல்லி: எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளையும் மீறி 3 புதிய குற்றவியல் சட்டங்கள் நாடு முழுவதும் இன்று அமலுக்கு வந்துள்ளன. இதை எதிர்த்து பல மாநிலங்களில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், பழைய குற்றவியல் சட்டங்களின் கட், காபி, பேஸ்ட்தான் புதிய குற்றவியல் சட்டங்கள் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய தண்டனை சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சியங்கள் சட்டம் ஆகிய ஆங்கிலேயர் காலத்து சட்டங்களுக்கு பதிலாக, முறையே பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷய அதிநியாம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. பழைய குற்றவியல் சட்டங்களின் கட், காபி, பேஸ்ட்தான் புதிய குற்றவியல் சட்டங்கள்.

3 புதிய சட்டங்களும் 90- 99 சதவீதம் பழைய குற்றவியல் சட்டங்களின் காபியே. 3 குற்றவியல் சட்டங்களில் சில திருத்தங்களை மட்டும் செய்துவிட்டு புதிய சட்டங்களை அமல்படுத்தியுள்ளனர். குற்றவியல் நீதியின் நிர்வாகத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதே இதன் முதல் தாக்கமாக இருக்கும். புதிய குற்றவியல் சட்டங்களில் சிலவற்றை வரவேற்கிறோம். புதிய சட்டங்களில் சில முன்னேற்றங்கள் உள்ளன; அதனை திருத்தங்களாக கொண்டு வந்திருக்கலாம். ஜனநாயகத்திற்கு விரோதமான பிற்போக்குத்தனமான பல விதிகள் சட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ளன. பல்வேறு நீதிமன்றங்களிலும் இப்புதிய சட்டங்களால் பல சவால்கள் உருவாகும்.

ஒன்றிய அரசு மேற்கொண்ட சில மாற்றங்களை எதிர்த்து நிலைக்குழு உறுப்பினர்கள் எழுதிய கடிதத்துக்கு பதில் இல்லை. புதிய சட்டங்களில் பெரும் குறைபாடுகள் உள்ளதை சுட்டிக் காட்டிய சட்ட நிபுணர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகளுக்கு பதில் இல்லை. புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் பயனுள்ள விவாதங்கள் நடைபெறவில்லை. காலப்போக்கில், அரசியலமைப்பு மற்றும் குற்றவியல் நீதித் துறையின் நவீன கோட்பாடுகளுக்கு இணங்க 3 சட்டங்களில் மேலும் பல மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்ற கட்டாயம் உருவாகும். நீண்ட காலத்திற்கு செயல்பாட்டில் இருக்க புதிய சட்டங்களில் இன்னும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தொழிலாளி கொலை வழக்கில் 8 பேர் கைது

ஹத்ராஸ் கூட்டநெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி அலகாபாத் ஐகோர்ட்டில் பொதுநல மனுத் தாக்கல்

குமரியில் கனமழை காரணமாக உப்பு விலை உயர்வு