சிதம்பரம் அருகே இன்று காலை சிலிண்டர் வெடித்து வீடு தீப்பிடித்து எரிந்தது

சிதம்பரம்: சிதம்பரம் அருகே வீட்டில் சமையல் செய்தபோது சிலிண்டர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டு ரூ.3 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பாலுத்தங்கரை கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (58). இவருடைய மனைவி விஜயா. இவர்களின் மகன் கதிரவன், மருமகள் தமிழ் இலக்கியா. இவர்கள் அனைவரும் அஸ்பெஸ்டாஸ் ஷீட் போட்ட வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை வீட்டில் சமையல் வேலை செய்வதற்காக தமிழ் இலக்கியா சிலிண்டரை பற்ற வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அப்போது கேஸ் கசிவால் எதிர்பாராத விதமாக சிலிண்டர் திடீரென வெடித்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியே ஓடி உயிர் தப்பினர். பின்னர் வெளியே இருந்தபடி ஊர் மக்கள் உதவியுடன் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.

இதையடுத்து சிதம்பரத்தில் உள்ள தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து வீட்டில் எரிந்து கொண்டிருந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். சிலிண்டர் வெடித்ததில் வீட்டில் இருந்த பீரோ, கட்டில், துணிமணிகள் மற்றும் ரூ.20 ஆயிரம் பணம் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தெரிந்து சேதமானது. அதேபோல் சிமெண்ட் கூரை மற்றும் ஜன்னல் கதவுகள் உட்பட பல பொருட்களும் எரிந்து சாம்பலானது. சேத மதிப்பு ரூ. 3 லட்சம் இருக்கும்.

தீவிபத்தில் வீட்டில் இருந்த அனைத்துப்பொருட்களும் எரிந்து சாம்பலானதை கண்ட ராமச்சந்திரன் குடும்பத்தினர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இச்சம்பவம் சிதம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?

திருவள்ளுவர் பிறந்தநாள் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்!!