சிக்கன்சட்டிச்சோறு!

இது வேற லெவல் டெல்டா டேஸ்ட்

இந்திய மக்களுக்கு சென்னையைத் தெரிகிறதோ, இல்லையோ, கோடம்பாக்கத்தை நன்றாக தெரியும். தமிழ் சினிமாவின் தாயகமாக விளங்கும் கோடம்பாக்கத்தைத் தெரியாமல் இருப்பார்களா? என்ன? சினிமா என்றால் சென்னை. சென்னையில் சினிமா என்றால் கோடம்பாக்கம் என்ற நிலைமைதான் அன்று முதல் இன்று வரை. சினிமா வாய்ப்பு தேடி சென்னை வருபவர்களை அரவணைக்கும் இடமாகவும் கோடம்பாக்கம் விளங்குகிறது. இத்தகைய கோடம்பாக்கத்தில் சினிமாக் கனவோடு வந்த செந்தில்குமார் என்பவர் தனது மனைவியோடு தொடங்கி இருக்கும் உணவகமான வாவ் மெஸ் உண்மையாகவே வாவ் என சொல்ல வைக்கிறது.

அம்மா கைப்பக்குவத்தில், அசலான ஊர்மணத்தில் பல்வேறு உணவுகள் இங்கு பரிமாறப்படுகின்றன. சினிமா சார்ந்த தொழிலோடு இந்த உணவகத்தை நடத்தி வரும் செந்தில்குமார், அவரது மனைவி கிருத்திகா, பார்ட்னர் சுரேந்திரன் ஆகியோரைச் சந்தித்தோம். வாடிக்கையாளர்களை வரவேற்று சாப்பிட வைப்பதில் படு பிசியாக இருந்த மூவரும் நமக்கும் சற்று நேரம் ஒதுக்கி பேசினர்.“நாங்கள் மூவருமே காவிரி கொஞ்சி விளையாடும் டெல்டா மாவட்டமான தஞ்சையில் பிறந்து வளர்ந்தவர்கள். எம்பிஏ வரை படிச்சிட்டு, பிசினஸ் செய்து வருகிறேன். சினிமா மீதுள்ள காதலின் காரணமாக சென்னை வந்தேன். சளைக்காமல் சினிமாவில் முழு கவனத்தையும் செலுத்திய நான் இன்றைக்கு ஒரு நல்ல நிலைமையில் இருக்கிறேன். இந்த கோடம்பாக்கம் நமக்கான இடத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

இங்கு இருப்பவர்களில் அனைவரும் சினிமா கலைஞர்கள்தான். சினிமாவிற்காக அலைந்து திரிந்து ஓடி ஓடி உழைக்கும் இவர்களில் பலர் என்னைப் போல் பல ஊர்களில் இருந்து ஒரு கனவோடு இங்கு வந்தவர்கள்தான். இதுபோல பல பேர் சென்னைக்கு ஏதோ ஒரு கனவோடு வருவார்கள். சிலர் நல்ல எழுத்தாளர் ஆகவேண்டும், சிலர் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டும், சிலர் யூபிஎஸ்ஸி தேர்வுகள் எழுதி ஒரு மாவட்ட ஆட்சியர் ஆக வேண்டும், ஐபிஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற கனவுகளோடு வருகிறார்கள். சொந்த ஊரை விட்டு வரும் அனைவரும் ரொம்பவும் மிஸ் செய்வது உப்பு, காரம் என்று பார்த்துப் பார்த்து சாப்பிடும் அம்மாவின் உணவினைத்தான்.

என்னதான் ஸ்டார் ஹோட்டல்களில் சாப்பிட்டாலும் அம்மா செய்து கொடுக்கும் பருப்புக் குழம்பிற்கும், வடித்த சோறுக்கும் ஈடாகாது என்று என் மனைவி கிருத்திகா அடிக்கடி என்னிடம் சொல்லிக்கொண்டே இருப்பார். ஒருநாள் திடீரென்று ஏன் நாம் ஒரு உணவகத்தைத் தொடங்கி அனைவருக்கும் அன்லிமிட் ஃபுட் தரக்கூடாது என்று அவர் என்னிடம் கேட்டார். அதற்கு நான் உணவகத்தைத் திறக்கலாம். அதனை யார் நிர்வகிப்பது? என்று கேட்டேன். அப்போது அவர், உணவகத்தைத் தொடங்குங்கள், நான் பார்த்துக் கொள்கிறேன் என நம்பிக்கையோடு கூறினார். சரி இந்தளவுக்கு நம்பிக்கையோடு சொல்கிறாரே ஒரு உணவகத்தைத் தொடங்குவோம். அதுவும் கோடம்பாக்கத்திலேயே தொடங்குவோம் என்று திட்டமிட்டு தொடங்கியதுதான் வாவ் மெஸ்.

வெற்றிகரமாக ஒரு வருடத்தை நோக்கி உணவகம் சென்றுகொண்டு இருக்கிறது. உணவகத்திற்கு சாப்பிட வந்த சுரேந்திரனுக்கு நமது உணவுகள் மிகவும் பிடித்துவிட்டது. இங்கிருக்கும் அனைத்து டிஷ்களையும் வாங்கி சாப்பிடுவார். ஒருநாள் என்னைச் சந்தித்த சுரேந்திரன் எனக்கும் உணவகம் திறக்க வேண்டும் என்ற யோசனை இருக்கிறது. என்னையும் உங்கள் உணவகத்தில் பார்ட்னராக சேர்த்துக் கொள்ள முடியுமா? என்று கேட்டார். நம்பிக்கையோடு கேட்ட அவரை நானும் பார்ட்னராக சேர்த்துக் கொண்டேன். இன்றைக்கு மூவரும் சேர்ந்து உணவகத்தை நடத்தி வருகிறோம். உணவகத்தில் தயார் செய்யப்படும் அனைத்து டிஷ்களுமே எங்க அம்மாவின் ரெசிபிதான். என்னுடைய அம்மா தஞ்சாவூர் ஸ்டைலில் அனைத்து உணவுகளையும் தயார் செய்வார்.

ஒவ்வொரு உணவினையும் எப்படி செய்தோம் என்பதை அம்மா ஒரு நோட்டில் எழுதி வைத்திருப்பார். அதனைக் கொண்டுதான் எங்கள் உணவகத்தில் அனைத்து டி‌ஷ்களையும் தயார் செய்து கொடுக்கிறோம்’’ என்று கூறிய செந்தில்குமாரைத் தொடர்ந்து, நம்மிடம் பேசத்துவங்கினார் கிருத்திகா.“உணவகத்தில் அனைத்து டிஷ்களையும் நான்தான் அருகில் இருந்து பார்த்துப் பார்த்து சமைக்கிறேன். எந்தவொரு மசாலா பொருட்களையுமே நாங்கள் வெளியில் இருந்து வாங்குவது கிடையாது. அனைத்து மசாலாவையும் நாங்களே தயார் செய்கிறோம். குழம்பு, சிக்கன், வறுவல் என்று அனைத்திலும் ஊசி மிளகாய்தான் பயன்படுத்துகிறோம். இந்த மிளகாயை உணவில் சேர்ப்பது காரத்திற்காக மட்டும் கிடையாது. உணவினை சாப்பிடும் வாடிக்கையாளர்களுக்கு அசிடிட்டி பிரச்னை வரக்கூடாது என்பதற்காவும்தான்.

சோம்பு, சீரகம், கிராம்பு, மிளகு, பட்டை, மிளகாய் என்று அனைத்தையுமே நாங்கள் காய வைத்து அரைத்துதான் உணவில் சேர்ப்போம். மசாலாப் பொருட்களை பொருத்தவரையில் காலை, மாலை நேரங்களில் மட்டுமே காய வைத்து அரைப்போம். மதிய நேரத்தில் மசாலா பொருட்களைக் காய வைத்தால் அவை கருகி உணவில் சேர்க்கும்போது சரியான ருசியைக் கொடுக்காது. அரிசியையும் தஞ்சாவுரில் இருந்துதான் வாங்கி வந்து உணவகத்தில் பயன்படுத்துகிறோம். உணவுகள் தயாரிப்பதற்கு தேவையான எண்ணெயும் தஞ்சையில் இருந்துதான் வாங்கி வருகிறோம். எந்தவொரு பாக்கெட் எண்ணெயும் நாங்கள் பயன்படுத்துவது கிடையாது. கடலை எண்ணெய், நல்லெண்ணெய் என்று அனைத்தும் மரச்செக்கில் ஆட்டியதுதான்.

`கங்கையின் மேலான காவிரித் தீர்த்தம்’ என்ற பாடலைக் கேட்டு இருப்போம். அத்தகைய சிறப்பு மிக்க காவிரி நீரில் விளைந்த நெற்பயிர்களில் இருந்து பிரித்து எடுத்த அரிசியைத்தான் நாங்கள் எங்களது உணவகத்தில் பயன்படுத்துகிறோம். அதனால் உணவின் ருசி நாங்கள் எதிர்ப்பார்ப்பதைப் போல் இருக்கிறது. கூட்டு, பொரியல், சாம்பார், சிக்கன் சுக்கா, மட்டன் சுக்கா, சிக்கன் கிரேவி, வத்தக் குழம்பு, காரக்குழம்பு, மோர்க்குழம்பு என்று அனைத்திற்குமீ சின்ன வெங்காயம் மட்டும்தான் பயன்படுத்துகிறோம். இதுபோக சிக்கன் சட்டிச்சோறுன்னு தஞ்சாவூர் டி‌ஷ் ஒன்னு கொடுத்துட்டு இருக்கோம். வீட்டில் சாப்பிடும்போது வாணலியில் இருக்கும் மசாலாவோடு சோற்றைப் போட்டு சாப்பிட்டால் ருசி அல்டிமேட்டாக இருக்கும்.

அந்த டைப்தான் இந்த சட்டிச்சோறு. இப்போது பலர் பேர் இந்த டிஷ்ஷை ஆர்டர் செய்து சாப்பிடுகிறார்கள். மீனில் அயிலா, சங்கரா, வவ்வால், வஞ்சிரம் மட்டும்தான் செய்து கொடுத்து வருகிறோம். இது எல்லாம் அசத்தலாக இருக்கும்’’ என்று கூறிய கிருத்திகாவைத் தொடர்ந்து சுரேந்திரன் பேசத்துவங்கினார்.“இப்ப வரைக்கும் மதியம், இரவு என்று இரண்டு வேளை உணவுகளை வழங்கி வருகிறோம். மதியம் அன்லிமிட்வெஜ் மீல்ஸ் ரூ.100க்கும், அன்லிமிட் சிக்கன் மீல்ஸ் மற்றும் அன்லிமிட் பிஷ் மீல்ஸ் ரூ.150க்கும் கொடுத்து வருகிறோம். இந்த இரண்டு மீல்ஸ்க்குமே சாம்பார், ரசம், வத்தக் குழம்பு, காரக்குழம்பு, மோர்க்குழம்பு, ரசம், கூட்டு, பொரியல், முட்டை, அப்பளம் கொடுத்துட்டு இருக்கோம். சிக்கன் மீல்ஸில் சிக்கன் குழம்போடு சிக்கன் தொக்கு எக்ஸ்ட்ராவாக இருக்கும். அதேபோல் பிஷ் மீல்ஸிலும் பிஷ்குழம்பு, பொரிச்ச மீனும் கொடுத்துட்டு இருக்கோம்.

சிக்கன் கிரேவியிலும், மீன் குழம்பிலும் பீஸ் இருக்கும். இதுபோக தனியா சிக்கன் சுக்கா, மட்டன் சுக்கா, பெப்பர் சிக்கன், சிந்தாமணி சிக்கனும் கொடுத்துட்டு இருக்கோம். சட்டிச்சோறை ரூ180க்கு கொடுக்குறோம். இரவில் தோசை, இட்லி, பரோட்டா, சப்பாத்தி கொடுக்குறோம். இப்போது உணவகம் சிறப்பாக நடந்துட்டு இருக்கு. எல்லா தரப்பு மக்களும் உணவகத்திற்கு வருகிறார்கள். நிறைய பேர் காத்திருந்து சாப்பிட்டுச் செல்கிறார்கள். சாப்பிட்டவர்கள் பலர் வீட்டில் அம்மா கையால் செய்த சாப்பாட்டினைச் சாப்பிடுவது போல் இருக்கிறது என்கிறார்கள். நிறைய பேர் பார்சலும் வாங்கிச் செல்கிறார்கள். ஆர்டர் எடுத்து ஃபுட் தயார் செஞ்சு கொடுத்துட்டு இருக்கோம். 35 பேருக்கான சிக்கன் அல்லது பிஷ் மீல்சை ரூ.4500க்கு கொடுத்துட்டு இருக்கோம். 35 பேருக்கான வெஜ் மீல்சை தற்போது ரூ.3000க்கு கொடுத்துட்டு இருக்கோம். ரெகுலர் கஸ்டமர்ஸ் இப்போ அதிகம் ஆகி இருக்காங்க. எங்கள் உணவகத்திற்கு பெயர் மட்டும் வாவ் கிடையாது. உணவினை சாப்பிடுபவர்கள் சொல்லும் முதல் வார்த்தையும் வாவ் என்றே மாறி இருக்கிறது’’ என்று புன்னகையுடன் கூறி முடித்தார் சுரேந்திரன்.

குணா
படங்கள்: ஆ.வின்சென்ட்பால்.

Related posts

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு