சட்டீஸ்கரில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்திய மகாதேவ் சூதாட்ட செயலியின் முக்கிய குற்றவாளி துபாயில் கைது: இன்டர்போல் உதவியுடன் அதிரடி நடவடிக்கை

துபாய்: சட்டீஸ்கரில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்திய மகாதேவ் சூதாட்ட செயலியின் முக்கிய குற்றவாளி துபாயில் இன்டர்போல் உதவியுடன் கைது செய்யப்பட்டார். சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த சவுரப் சந்திரகர் மற்றும் அவரது நண்பர் ரவி உப்பால் ஆகிய இருவரும், கடந்த 2018ம் ஆண்டில் துபாய் சென்றனர். அங்கு மகாதேவ் என்ற பெயரில் சூதாட்ட செயலியை உருவாக்கினர். இதன்படி போக்கர், கார்டு கேம்ஸ், டென்னிஸ், கிரிக்கெட், பாட்மிண்டன், கால்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளின் பெயரில் சூதாட்டம் நடத்தப்பட்டது. இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது குறித்தும் இந்தச் செயலி வாயிலாக சூதாட்டம் நடைபெற்றிருக்கிறது. கடந்த பிப்ரவரியில் மகாதேவ் செயலியின் உரிமையாளர் சவுரப் சந்திரகரின் திருமணம் துபாயில் நடைபெற்றது.

இதற்காக ரூ.260 கோடி செலவிடப்பட்டது. இந்த திருமண விழாவில் பாலிவுட் நடிகர், நடிகைகள் பலர் பங்கேற்றனர். அவர்களுக்கு ஹவாலா முறையில் பெரும் தொகை கைமாறியதாகக் கூறப்படுகிறது. அதையடுத்து இவ்விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை பலர் மீது வழக்குபதிவு செய்தது. சட்டீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல் உள்ளிட்டோருக்கும், மகாதேவ் சூதாட்ட செயலி கும்பலுடன் தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்தது. அமலாக்கத்துறையின் இந்த தகவல், அரசியல் ரீதியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்வழக்கில் இதுவரை 32 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், காதேவ் சூதாட்ட செயலி வழக்கில் முக்கிய குற்றவாளிகளான ரவி உப்பல் என்பவர் துபாயில் கைது செய்யப்பட்டார்.

அதிகாரப்பூர்வ ஆதாரங்களின்படி, அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டின் பேரில், இன்டர்போல் வெளியிட்ட ரெட் கார்னர் நோட்டீசின் அடிப்படையில் துபாய் காவல்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதுகுறித்து அமலாக்கத்துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘கடந்த வாரம் துபாயில் ரவி உப்பால் போலீசாரால் தடுத்து வைக்கப்பட்டார். தற்போது கைது செய்யப்பட்டார். அவரை துபாயில் இருந்து இந்தியாவிற்கு அழைத்து வரும் நடவடிக்கையில் இறங்கியுள்ளோம். சட்டீஸ்கர் மற்றும் மும்பை போலீசார், ரவி உப்பலுக்கு எதிராக விசாரணை நடத்தி வருகின்றனர். அமலாக்கத்துறையும் விசாரித்து வருகிறது’ என்று கூறின.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி