கோடி கணக்கில் பேரம் பேசிய ஒன்றிய அமைச்சர் மகன் மீது எப்போது விசாரணை?: சட்டீஸ்கர் முதல்வர் கேள்வி

ராய்ப்பூர்: ஒன்றிய அமைச்சரின் மகன் பண பரிவர்த்தனை தொடர்பாக பேசிய வீடியோவை வெளியிட்ட சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், இது தொடர்பான விசாரணை எப்போது தொடங்கும் என்று கேள்வி எழுப்பி உள்ளார். சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேலுக்கு மகாதேவ் சூதாட்ட செயலியின் விளம்பரதாரர்கள் ரூ. 508 கோடி கொடுத்ததாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியது. இதனிடையே, ஒன்றிய அமைச்சர் நரேந்திரசிங் தோமரின் மகன் தேவேந்திர பிரதாப் சிங் தோமரும் இடைத்தரகர் ஒருவரும் பல கோடி ரூபாய் பேரம் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், ஒன்றிய அமைச்சரின் மகன் பேசும் மற்றொரு வீடியோவை தனது எக்ஸ் வலைதளத்தில் சட்டீஸ்கர் முதல்வர் பாகேல் பதிவிட்டார்.

அதில், கனடாவில் வசிப்பவர் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட ஜக்மந்தீப், முந்தைய வீடியோவில் தோமரின் மகனுடன் நிதி பரிவர்த்தனைகள் குறித்து பேசியதாக கூறினார். மேலும், அது ரூ. 500 கோடி அல்ல. மொத்தம் ரூ. 10,000 கோடி ஆகும் என்று தெரிவித்தார். அமைச்சரின் மகன் கஞ்சா சாகுபடிக்காக வெளிநாட்டில் 100 ஏக்கர் நிலத்தை வாங்கி இருப்பதாக தெரிவித்தார். இது குறித்து முதல்வர் பாகேல் தனது எக்ஸ் பதிவில், ‘’உறுதிப்படுத்தப்படாத வீடியோ, ஓட்டுநர் ஒருவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் உங்களது அரசு என் மீது நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறியது. இப்போது இந்த வீடியோவை பாருங்கள். எந்த அரசு அமைப்பு இதனை விசாரிக்கும்? சோதனை எப்போது நடக்கும்? இது தொடர்பான ஒரு மணி நேர ஊடக விவாத நிகழ்ச்சிகள் எப்போது தொடங்கும்,’’ என்று கேள்வி எழுப்பினார்.

* காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

ஒன்றிய அமைச்சர் நரேந்திர சிங் தோமரின் மகன் தேவேந்திர சிங் தோமர் பல கோடி ரூபாய் லஞ்சம் கேட்ட விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணை நடத்த கோரி இளைஞர் காங்கிரசார் டெல்லியில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அமலாக்கத்துறை அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த போராட்டத்தின்போது போலீஸ் தடுப்பை மீறிய காங்கிரசார் கைது செய்யப்பட்டனர்.

Related posts

பீகாரில் கொட்டும் கனமழையால் 10 நாளில் 4 பாலம் இடிந்து விழுந்தது: எதிர்கட்சிகள் கடும் கண்டனம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் ஜார்க்கண்டில் மேலும் 2 பேரை சி.பி.ஐ. கைது செய்துள்ளது

மதுவிலக்கு திருத்தச்சட்டம் நாளை சட்டப்பேரவையில் அறிமுகம் செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு