செஸ் போட்டியை தேதி மாற்றி நடத்தி குளறுபடி: கலெக்டர் அலுவலகம் முற்றுகை

திருவள்ளூர்: செஸ் போட்டியை தேதி மாற்றி நடத்தியதால் ஏற்பட்ட குளறுபடி காரணமாக திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதலமைச்சர் விளையாட்டு கோப்பை போட்டிகள் கடந்த 10ம் தேதி தொடங்கப்பட்டு அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளுக்கான அட்டவணை அனைத்து பள்ளிகள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறிப்பிட்ட நாட்களில் கிரிக்கெட், செஸ் உள்ளிட்ட அனைத்து போட்டிகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், செஸ் போட்டி நேற்று திருநின்றவூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெறும் என அட்டவணையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்பேரில் செஸ் போட்டியில் கலந்துகொள்ளும் மாணவ, மாணவிகளை அதிகாலையிலேயே அழைத்துக்கொண்டு பெற்றோர்கள் மேற்கண்ட தனியார் பள்ளிக்கு வந்தனர்.

ஆனால் பள்ளியில் போட்டிகள் நடைபெறவில்லை என்றும், திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் போட்டிகள் நடைபெறுவதாகவும் அறிவித்துள்ளனர். இதையடுத்து மாணவ, மாணவிகள் அங்கிருந்து திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு மைதானத்திற்கு வந்தனர். ஆனால் அங்கு பெற்றோர்களுக்கும், மாணவ, மாணவிகளுக்கும் உரிய பதில் தரவில்லை. மேலும் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட விளையாட்டு அலுவலர் இல்லாததால் போட்டிகளுக்கான தகவலை தொலைபேசியில் கேட்டனர். அப்போது போட்டிகளை நேற்றுமுன்தினம் நடத்திவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனால் மாணவ, மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் அங்குள்ள அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதில் ஒரு சில அகாடமிகளை நேற்றுமுன்தினம் அழைத்து அவர்களுக்கு மட்டும் செஸ் போட்டியினை நடத்தி முடித்துவிட்டதாக கூறப்படுகிறது. மீதமுள்ள 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்போது அலைக்கழிக்கப்பட்டதால் அவர்களது பள்ளி நேரமும், பெற்றோர்களின் நேரமும் வீணாகியுள்ளது. எனவே, விடுபட்ட மாணவர்களுக்கு மீண்டும் ஒரு தேதியை அறிவித்து போட்டிகளை நடத்தவேண்டும் என்று தெரிவித்து திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

Related posts

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு