செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற தங்கங்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சர்வதேச செஸ் பெடரேஷனால் (FIDE) நடத்தப்படும் செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்த ஆண்டு செப்டம்பர் 10ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நடைபெற்றது. ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரத்தில் நடைபெற்ற 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் பொதுப்பிரிவு மற்றும் பெண்கள் பிரிவில் இந்திய அணிகள் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். இந்தப் போட்டியில் பொதுப் பிரிவில் 193 அணிகளும் பெண்கள் பிரிவில் 181 அணிகளும் பங்கேற்றன. இதில் இந்தியா சார்பில் ஸ்ரீநாத் நாராயணன், குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி, விதித் மற்றும் பெண்டாலா ஆகியோர் அடங்கிய ஆடவர் அணியும், அப்ஜித், திவ்யா தேஷ்முக், வந்திகா அகர்வால், ஹரிகா துரோணவல்லி, தானியா , வைஷாலி ஆகியோர் அடங்கிய மகளிர் அணியும் பங்கேற்றது.

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் இந்தியா தங்கம் வெல்வது இதுவே முதல் முறை. இரண்டு பிரிவுகளிலும் சிறப்பாக ஆடும் அணிக்கு ‘கப்ரிந்தஷ்விலி கோப்பை’வழங்கப்படும். 2022-ஆம் ஆண்டு இந்தக் கோப்பையைப் பெற்றிருந்த இந்தியா, இந்த ஆண்டு அதைத் தக்க வைத்துள்ளது. அது மட்டுமில்லாமல் இந்திய வீரர்கள் அர்ஜுன் எரிகைசி, குகேஷ் டி, திவ்யா தேஷ்முக், வந்திகா அக்ராவால் ஆகியோர் வெவ்வேறு நிலைகளில் தனி நபர் ஆட்டத்துக்குத் தங்கப் பதக்கங்கள் வென்றுள்ளனர்.

2022ஆம் ஆண்டு சென்னை மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றபோது, இந்திய அணிகள் வெண்கலப் பதக்கம் வென்றன. இம்முறை இரண்டு தங்கப் பதக்கங்களுடன் இந்திய அணிகள் வெற்றியை உறுதி செய்தன. 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஆடவர் மற்றும் மகளிர் சதுரங்க அணிகள் பிரிவுகளில் தங்கப் பதக்கங்களை வென்றதால், இந்தியாவுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாக அமைந்தது. 11வது மற்றும் கடைசிச் சுற்று ஆட்டத்தில் டி குகேஷ், அர்ஜுன் எரிகைசி மற்றும் ஆர்.பிரக்ஞானந்தா ஆகியோர் தத்தமது ஆட்டங்களில் வெற்றி பெற்றதை அடுத்து ஆண்கள் அணி ஸ்லோவேனியாவை தோற்கடித்தது.

மகளிர் அணி 3.5-0.5 என்ற கணக்கில் அஜர்பைஜானை வீழ்த்தி பட்டத்தை தட்டிச்சென்றது. இந்திய ஆண்கள் இதற்கு முன்பு 2014 மற்றும் 2022இல் இரண்டு வெண்கலம் வென்றுள்ளனர். 2022 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற போட்டியில் இந்திய பெண்கள் வெண்கலம் வென்றனர். வெற்றியை தனதாக்கிக்கொண்டதும், ஒட்டுமொத்த இந்திய அணியினரும் மூவர்ணக் கொடியுடன் உற்சாகமாக போஸ் கொடுத்தனர். இந்திய அணிகளின் மாபெரும் வெற்றியை பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்ற ஆண்கள் அணியில் பிரக்ஞானந்தா, குகேஷ், பெண்கள் அணியில் வைஷாலி ஆகியோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹிஸ்புல்லா தலைவர் இருப்பிடத்தை காட்டிகொடுத்த ஈரான் ஸ்பை: லெபனானில் தாக்குதலைத் தீவிரப்படுத்தும் இஸ்ரேல் ராணுவம்

பஞ்சாமிர்தம் பற்றி அவதூறு – இயக்குநர் மோகன் மன்னிப்பு கேட்க உத்தரவு

ஒசூரில் ரூ.3,699 கோடியில் டாடா எலக்ட்ரானிக்ஸ் செல்போன் உற்பத்தி ஆலை விரிவாக்கம்