உலகக்கோப்பை போட்டியை காண குவிந்த ரசிகர்கள் கிரிக்கெட் ரசிகர்களால் களைகட்டியது சேப்பாக்கம்

சென்னை: இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை போட்டியை காண குவிந்த கிரிக்கெட் ரசிகர்களால் சேப்பாக்கம் பகுதியே களைகட்டியது. 10 அணிகள் பங்கேற்றுள்ள 13வது ஐ.சி.சி. ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 5ம் தேதி அகமதாபாத்தில் தொடங்கியது. உலக கோப்பையின் 5வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரிட்சை மேற்கொண்டனர். இதற்கு முன்னர் கடந்த 1987ம் ஆண்டு இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதிய உலக கோப்பை போட்டி சென்னையில் நடைபெற்றது. இதையடுத்து 36 ஆண்டுகளுக்கு பின் நேற்று மீண்டும் இந்தியா- ஆஸ்திரேலியா சென்னையில் மோதின. இதனால் இந்த போட்டியை காண ரசிகர்கள் ஆர்வமாக குவிந்தனர். மேலும் இந்த தொடரில் இந்திய அணி விளையாடும் முதல் போட்டி என்பதால் சேப்பாக்கம் மைதானத்தில் மொத்தமுள்ள 50,000 டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான போட்டியை காண காலையில் இருந்தே சேப்பாக்கம் மைதானம் முன்பு ரசிகர்கள் குவிந்தனர். காலை 10 மணியளவில் ரசிகர்கள் வர தொடங்கினர். நேரம் செல்ல செல்ல ரசிகர், ரசிகைகள் எண்ணிக்கை அதிகமானது. மைதானத்துக்குள் நுழையும் அனைத்து வாயில்களிலும் ரசிகர்கள் நீண்ட வரிசையில் நின்றனர். 12 மணியளவில் ரசிகர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். டிக்கெட் வைத்திருந்த ரசிகர்கள் உற்சாகத்துடன் ஸ்டேடியத்துக்குள் சென்றனர். அவர்கள் எந்த வழியாக எந்த நுழைவு வாசலுக்கு செல்ல வேண்டும் என்பதை போலீசாரும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் ஊழியர்களும் அறிவுறுத்தினர். கிரிக்கெட் போட்டியையொட்டி சேப்பாக்கம் ஸ்டேடியம் முன்பு கொடிகள் அமோகமாக விற்பனையானது. ரசிகர்-ரசிகைகள் கொடிகளை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். இதேபோல இந்திய அணியின் ஜெர்சி, தொப்பி உள்ளிட்ட பொருட்களும் விறுவிறுப்பாக விற்பனையானது. மேலும் ரசிகர், ரசிகைகள் தங்களது முகத்திலும் வர்ணம் பூசிக் கொண்டனர்.

உலகக் கோப்பை கிரிக்கெட்டிற்காக மாநகராட்சி சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக சேப்பாக்கம் மைதானத்தை சுற்றி உள்ள பகுதிகளை தூய்மைப்படுத்தி, பல்வேறு வண்ணங்களில் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. அதேபோல் ரசிகர்கள் வசதிக்காக இன்று சேப்பாக்கம் மைதானம் உள்ள சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து வேளச்சேரி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது. மெட்ரோ நிர்வாகத்துடன் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ள நிலையில், மெட்ரோ ரயில் சேவையும் நீட்டிக்கப்பட்டது. மேலும், போட்டியை ஒட்டி பாதுகாப்புக்காக 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டனர். பெல்ஸ் சாலை, பாரதி சாலை, வாலாஜா சாலை, காமராஜர் சாலையில் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

Related posts

புரட்டாசி மாத பெளர்ணமி: சதுரகிரி மலைக் கோயிலில் குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்!!

நெல்லையில் பைக் மீது டேங்கர் லாரி மோதி 4 பேர் உயிரிழப்பு!!

கைதி துன்புறுத்தல் விவகாரம்: நிலை அறிக்கை தயாரிப்பு