தனியார் பள்ளிகளை விட உலக தரத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளதால் சென்னை பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்

சென்னை: சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலத்துக்கு உட்பட்ட சைதாப்பேட்டை மாந்தோப்பு பகுதியில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மேல்நிலை கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா, நேற்று நடைபெற்றது. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை வகித்து மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி பேசியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைப்படி, சென்னை பள்ளிகளின் கல்வி தரத்தை உயர்த்துவதற்கு சென்னை மாநகராட்சி நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தற்போது மாநகராட்சி பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 90 சதவீதத்திற்கும் கடந்து செல்கின்றது என்றால், அதற்கு மாநகராட்சி கல்வித்துறையின் கட்டமைப்பும், பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள உல தரத்திலான வசதிகளும் தான் காரணம்.

கடந்த வாரம் இந்த பகுதியில் வார்டு உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர் வகுப்பறை திறந்து வைக்கப்பட்டது. இந்த பள்ளிக்கு அருகில் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த 32 கிரவுண்ட் நிலம் மீட்கப்பட்டு, தற்போது அந்த இடத்தில் மிகப் பெரிய விளையாட்டு மைதானம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த மைதானத்திற்கு இணையாக சென்னையில் வேறு எந்த பள்ளியிலும் இதுபோன்ற விளையாட்டு மைதானம் இல்லை. இவ்வாறு அவர் பேசினார். விழாவில், மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், துணை ஆணையர் ஷரண்யா அறி, நிலைக்குழு தலைவர் விசுவநாதன், மண்டலக்குழுத் தலைவர் எம்.கிருஷ்ணமூர்த்தி, கவுன்சிலர்கள் ப.சுப்பிரமணி, தரன், மோகன் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்