பாலத்தின் தடுப்பு சுவரை உடைத்து பள்ளத்தில் கார் பாய்ந்து சென்னை தம்பதி பலி: மகள் படுகாயம்

மணப்பாறை: திருச்சி அருகே நேற்று காலை பால தடுப்பு சுவரில் கார் மோதி பள்ளத்தில் கவிழ்ந்ததில் தம்பதி உயிரிழந்தனர். அவர்களது மகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியை சேர்ந்தவர் சசிதரன் (41). இவர், தனது மனைவி ராஜ (40), மகள் ருதீஸ் (13) ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு தங்களது காரில் பூந்தமல்லியில் இருந்து பழனிக்கு சென்று கொண்டிருந்தனர். காரை சசிதரன் ஓட்டினார். இந்நிலையில் நேற்று காலை திருச்சி மாவட்டம் மணப்பாறைக்கு முன்னதாக திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அஞ்சாலிகளம் என்ற இடத்தில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாறாக சென்று சாலையோரத்தில் உள்ள பால தடுப்பு சுவரில் மோதி 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காரின் முன்பகுதி தீப்பற்றியது. இதைகண்ட அப்பகுதி மக்கள் தண்ணீர் ஊற்றி காரில் ஏற்பட்ட தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த மணப்பாறை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் காரிலிருந்த ராஜ மற்றும் சிறுமியை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் காரின் முன் பகுதி முழுவதும் சேதமடைந்ததால் சசிதரன் கால்கள் இரண்டும் இடிபாட்டுக்குள் சிக்கிக்கொண்டது. தீயணைப்பு வீரர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சசிதரன் பரிதாபமாக இறந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறிது நேரத்திலே ராஜயும் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதில் அவர்களது மகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்துகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related posts

உலக சாம்பியன்களுக்கு உற்சாக வரவேற்பு: மும்பையில் இன்று வெற்றி ஊர்வலம்

டி20 ஆல்ரவுண்டர் தரவரிசை; ஹர்திக் பாண்டியா நம்பர் 1: முதல் இந்திய வீரராக சாதனை

பிரசந்தா பதவி விலக வேண்டும்; நேபாளி காங்கிரஸ் கோரிக்கை: நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த பிரதமர் முடிவு?