சென்னை மாநகரில் பணி ஓய்வு பெறும் 15 காவல் அலுவலர்களுக்கு பாராட்டு: கமிஷனர் அருண் சான்றிதழ் வழங்கினார்

சென்னை: சென்னை மாநகரில் பணி ஓய்வு பெறும் 15 காவல் அதிகாரிகள் மற்றும் போலீசாரை, போலீஸ் கமிஷனர் அருண் நேற்று நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கினார். சென்னை மாநகர காவலில் பணிபுரிந்து வந்த உதவி ஆணையர் புருஷோத்தமன், (ஆயுதப்படை-1), 1 மூத்த புகைப்படக்கலைஞர், 2 கண்காணிப்பாளர்கள், 5 காவல் உதவி ஆய்வாளர்கள், 5 சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் 1 உதவியாளர் என மொத்தம் 15 காவல் அலுவலர்கள் இந்த மாதம் பணி ஓய்வு பெறுகின்றனர்.

இதனையொட்டி நேற்று சென்னை காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பணி நிறைவு விழாவில், ஓய்வு பெறுகின்ற 15 காவல் அலுவலர்கள், சுமார் 23 ஆண்டுகள் முதல் 39 ஆண்டுகள் சிறப்பாக பணிபுரிந்ததை பாராட்டி, தமிழக காவல்துறைக்கும், சென்னை பெருநகர காவல்துறைக்கும் பெருமை சேர்த்ததை காவல் ஆணையர் அருண் நினைவு கூர்ந்து, சால்வை மற்றும் மாலை அணிவித்து பாராட்டி, சான்றிதழ்கள் வழங்கினார். காவல் ஆணையர், ஓய்வு பெற்ற காவல் குடும்பத்தினரிடம், காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளித்தமைக்காக நன்றி தெரிவித்தார்.

பணி ஓய்வு பெற்ற காவல் அலுவலர்கள் தங்களது உடல் நலத்தையும், குடும்பத்தையும் பேணி காக்க வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டாலோ அல்லது குறைகள் தெரிவிக்க விரும்பினாலோ தன்னை நேரில் சந்தித்து முறையிடலாம். மேலும் பணி ஓய்வு பெறுகின்ற காவல் அலுவலர்களுக்கு ஓய்வு ஊதிய பலன்களை விரைந்து வழங்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். நிகழ்ச்சியில், காவல் கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்) கபில்குமார் சி சரட்கர், இணை ஆணையாளர் (தலைமையிடம்) கயல்விழி, காவல் அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெறுகின்ற காவல் அலுவலர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

Related posts

வத்திராயிருப்பு அருகே திராவிட இயக்க வரலாற்று சாதனைகள் கலை நிகழ்ச்சி

ராஜபாளையம் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்

ரூ.2.05 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கல்