சென்னை விமான நிலையத்தில் கார் பார்க்கிங், பிக்கப் பாயின்ட்டில் கூடுதல் கட்டணம் வசூலிப்பு: பயணிகள் குற்றச்சாட்டு

சென்னை: சென்னை விமான நிலைய புதிய கார் பார்க்கிங் பகுதியில் வாகனங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக விமானப் பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். சென்னை விமான நிலையத்தின் புதிய பன்னாட்டு முனையப் பகுதியில் ரூ.250 கோடி மதிப்பீட்டில், கடந்த ஆண்டு 2.5 லட்சம் சதுர அடி பரப்பளவில் 6 அடுக்குகள் கொண்ட மல்டிலெவல் கார் பார்க்கிங் பகுதி அமைக்கப்பட்டது. இங்கு ஒரே நேரத்தில் 2,150 கார்கள், 700 இருசக்கர வாகனங்கள் வரிசையாக நிறுத்த முடியும். சர்வதேச மற்றும் உள்நாட்டு முனையங்களில் இருந்து வரும் பயணிகளை கார்களில் பிக்கப் செய்வதற்கு, மல்டிலெவல் கார் பார்க்கிங்கின் பின்பகுதியில் புதிதாக பிக்கப் பாயின்ட் அமைக்கப்பட்டது. பின்னர் பார்க்கிங், பிக்கப் என தனித்தனியாக பாயின்ட்டுகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு வாகனங்களுக்கு அரைமணி நேரத்துக்கு ரூ.75 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக ரூ.75க்கு பதிலாக ரூ.150 வசூலிக்கப்பட்டு வருகிறது. மேலும், அரைமணி நேரத்துக்கு மேலாகும்போது அந்த வாகனங்களுக்கு ரூ.225 கட்டணம் பாஸ்டேக் மூலம் வசூலிக்கப்படுவதாக விமானப் பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டால் ஒப்பந்த நிறுவன ஊழியர்கள் அவதூறாகவும் மிரட்டும் தொனியில் தரக்குறைவாகவும் பேசுவதாக விமான பயணிகள் கூறுகின்றனர்.சென்னை விமானநிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘இது சம்பந்தமாக ஏற்கனவே ஏராளமான புகார்கள் வந்துள்ளன. இதுபற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பார்க்கிங் மற்றும் பிக்கப் பாயின்ட்டில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது என தனியார் ஒப்பந்த நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளோம். தொடர்ந்து கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக தகுந்த ஆதாரங்களுடன் புகார் தெரிவித்தால், அக்கட்டணத்தை திருப்பி கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தனர்.

Related posts

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

திமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் விக்கிரவாண்டியில் திண்ணை பிரசாரம்: விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி அறிவிப்பு

வெளிநாடு செல்லும் அண்ணாமலை; தமிழக பாஜவை நிர்வகிக்க கமிட்டி அமைக்க திட்டம்: தேர்தலில் வேலை செய்யாதவர் பதவியை பறிக்க முடிவு