சென்னை போக்குவரத்து போலீசார் சார்பில் ‘விபத்து இல்லாத நாள்’ குறித்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போட்டி: அதிக பார்வைகளை பெறும் ரீல்ஸ்க்கு ரூ.2 லட்சம் பரிசு

சென்னை:‘விபத்து இல்லாத நாள்’ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போட்டியை சென்னை போக்குவரத்து காவல் ஆணையம் தொடங்கியுள்ளது. இதில், அதிக பார்வைகளை பெறும் ரீல்ஸ்க்கு ₹2 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்ட அறிக்கை: சென்னை போக்குவரத்து காவல்துறையினர் விபத்தில்லாத நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போட்டியை நடத்தவுள்ளனர். ஆகஸ்ட் 9ம் தேதி முதல் ஆகஸ்ட் 20ம் தேதி வரை, இப்போட்டியில் பங்கேற்பவர்கள் பாதுகாப்பான சென்னையை பற்றிய அவர்களின் பார்வையை பிரதிபலிக்கும் இன்ஸ்டாகிராம் ரீலை உருவாக்க வேண்டும். இப்போட்டியில் பங்கேற்கும் பங்கேற்பாளர்கள் சென்னை போக்குவரத்து காவல்துறையின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கை @chennaitrafficpolice-ஐ பின்தொடர வேண்டும்.

விபத்தில்லா நாள் தொடர்பான எந்தவொரு தலைப்பிலும் 60 வினாடிகள் வரை ரீலை உருவாக்க வேண்டும். இவ்வாறு உருவாக்கப்பட்ட ரீல்ஸ் பதிவினை சென்னை போக்குவரத்து காவல்துறையினரால் வழங்கப்பட்ட க்யூர் குறியீட்டை பயன்படுத்தி ZAD ரீல் டெம்ப்ளேட்டுகளைப் பதிவிறக்கி, உங்கள் ரீலில் டெம்ப்ளேட்டை இணைத்து, சென்னை போக்குவரத்து காவல்துறையின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறியிட வேண்டும். பின்னர் #zeroaccidentday, #ZAD, #safechennai, #GCTP மற்றும் #zeroisgood என்ற ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்தி உங்கள் ரீலை இன்ஸ்டாகிராமில் பதிவிடவும். கடைசியாக ரீல்ஸ் போட்டிக்கான கூகுள் படிவத்தை பூர்த்தி செய்து உங்கள் பதிவை முடிக்க வேண்டும். போட்டியில் மூன்று விருதுப் பிரிவுகள் உள்ளன. அதாவது, அதிக பார்வைகளைக் கொண்ட வைரல் ஹிட் ரீல்ஸ்க்கு ₹2 லட்சம், சிறந்த படைப்பாளிக்கு ₹1 லட்சம் (ZAD ஸ்பிரிட்டை மிகச்சரியாகப் படம்பிடிக்கும் சிறந்த ரீல்) மற்றும் சிறந்த வினையூக்கிக்கு ₹50,000 (அதிக லைக்குகளைப் பெற்ற இம்பாக்ட் ரீல்).

இப்பதிவினை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 20ம் தேதி ஆகும். இப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களின் விவரங்கள் ஆகஸ்ட் 24ம் தேதியன்று அறிவிக்கப்படுவார்கள். ரீல் ஒரு அசல் படைப்பாக இருக்க வேண்டும், திருட்டு உள்ளடக்கம் தகுதியிழப்புக்கு வழிவகுக்கும். எந்தவொரு நபரையும் அல்லது சமூகத்தையும் புண்படுத்தும் மொழி, பெயர்-அழைப்பு, இழிவான கருத்துக்கள் மற்றும் பிராந்திய ஸ்லாங் கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது. ரீல்களின் கால அளவு 1 நிமிடத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் மற்றும் ஆங்கிலம் அல்லது தமிழில் இருக்கலாம். போட்டியில் பதிப்புரிமை பெற்ற பொருட்கள் எதுவும் அனுமதிக்கப்படவில்லை. நீதிபதிகளின் முடிவே இறுதியானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்