சென்னை எண்ணூரில் சாலைவிபத்தில் உயிரிழந்த போக்குவரத்துக் காவலர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; சென்னை, எண்ணூர் காவல் நிலையத்தில், போக்குவரத்துக் காவலராகப் பணியாற்றிவந்த லக்ஷ்மணன் (வயது 37) என்பவர் இன்று (05.10.2024) காலை சுமார் 6.00 மணியளவில் அம்பத்தூரில் நடைபெறவிருந்த காவல்துறை பயிற்சி அணிவகுப்பில் கலந்துகொள்வதற்காக மணலி, எண்ணூர் விரைவுச் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சாலையோரம் நின்றுகொண்டிருந்த கிரேன் மீது மோதிய விபத்தில் பலத்த காயம் ஏற்பட்டு உடனடியாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், இன்று காலை 8.00 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையுமடைந்தேன். போக்குவரத்துக் காவலர் லக்ஷ்மணன் அவர்களின் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். லக்ஷ்மணன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். என தெரிவித்துள்ளார்.

Related posts

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும்.! இயல்பைவிட கூடுதல் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

ரத்த அழுத்தத்தை சீராக்கும் ‘பேஷன்’ பழம்: ஊட்டியில் கிலோ ரூ.400க்கு விற்பனை

குளச்சலில் மீனவர்கள் வலையில் சிக்கிய நெத்திலி மீன்கள்: விலை வீழ்ச்சியால் கவலை