சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ரூ.6,000 நிவாரண தொகை கேட்டு 5.67 லட்சம் பேர் விண்ணப்பம்: பரிசீலனை செய்து முடிவு எடுக்க திட்டம்

சென்னை: மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ரூ.6 ஆயிரம் நிவாரண தொகை கேட்டு சுமார் 5.67 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 3 மற்றும் 4ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் இடைவிடாமல் மழை பெய்தது. அதிகப்பட்சமாக பெருங்குடியில் 75 செ.மீ. மழை பெய்தது. சென்னை முழுவதும் 50 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. இதனால், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முக்கிய சாலைகள், தெருக்கள், வீடுகள் தண்ணீரால் சூழப்பட்டது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியது. முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் களத்தில் இறங்கி விரைந்து நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். தண்ணீர் தேங்கியதால் பொதுமக்களின் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் அவர்களின் உடமைகள் பாதிக்கப்பட்டது. அரசு எடுத்த துரித நடவடிக்கையால் ஒரு சில நாட்களில் இயல்பு வாழ்க்கை திரும்பியது.

இந்த நிலையில் மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரேஷன் கார்டு அடிப்படையில் தலா ரூ.6 ஆயிரம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி யார் யாருக்கெல்லாம் ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்ற பட்டியலும் அரசு சார்பில் ரேஷன் கடைகளில் வெளியிடப்பட்டது. வெள்ள பாதிப்பு நிவாரண பணியை கடந்த 17ம் தேதி சென்னை, வேளச்சேரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரேஷன் கடைகள் மூலம் இந்த பணம் வழங்கப்பட்டது. அதன்படி கடந்த 5 நாட்களில் சுமார் 25 லட்சம் பேருக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும், பாதிக்கப்பட்ட சிலருக்கு ரூ.6 ஆயிரம் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அவர்கள், ரேஷன் கடைகளில் அரசு வழங்கிய விண்ணப்பத்தை பெற்று, அதை பூர்த்தி செய்து ரேஷன் கடைகளிலேயே வழங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும், ரேஷன் அட்டை இல்லாதவர்களும் விண்ணப்பம் செய்யலாம் என்று கூறப்பட்டது.

இதன்படி, அனைத்து ரேஷன் கடைகளிலும் கடந்த 5 நாட்களாக ரூ.6 ஆயிரம் நிவாரண தொகை கேட்டு பல லட்சம் பேர் விண்ணப்பம் வாங்கி பூர்த்தி செய்து வழங்கியுள்ளனர். தற்போது, ரேஷன் கடைகளில் விண்ணப்பம் விநியோகம் செய்யும் பணிகள் நிறுத்தப்பட்டு விட்டது. இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் அரசு அறிவித்த நிவாரண தொகை ரூ.6 ஆயிரம் கிடைக்காதவர்கள் சுமார் 5.67 லட்சம் பேர் விண்ணப்பம் வாங்கி பூர்த்தி செய்து கொடுத்துள்ளதாக அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதன்படி, சென்னையில் 4.90 லட்சம் பேரும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 29 ஆயிரம் பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 22 ஆயிரம் பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 14 ஆயிரம் பேரும் விண்ணப்பித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
ரேஷன் கடைகளில் ரூ.6 ஆயிரம் நிவாரண உதவித்தொகை கேட்டு விண்ணப்பம் செய்தவர்களின் மனு மீது உடனடியாக பரிசீலனை நடத்தப்படும். அவர்கள் உண்மையில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு இருந்தால் அவர்களின் வங்கி கணக்குக்கு ரூ.6 ஆயிரம் செலுத்தப்படும். சென்னையை பொறுத்தவரை ரேஷன் அட்டை இல்லாத பலரும் விண்ணப்பம் செய்துள்ளனர். அதனால், அந்த விண்ணப்பங்கள் மீது கள ஆய்வு செய்யப்பட்டு நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related posts

2025-ல் நவீன வசதிகளுடன் கூடிய 500 மின்சார தாழ்தள பேருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சர் சிவசங்கர்

விஜயகரிசல்குளம் அகழாய்வில் சங்கு வளையல் கண்டெடுப்பு

மேலப்பாளையம் ஆட்டு சந்தையில் தீபாவளி விற்பனை அமோகம்: செம்மறியாடுகளோடு வியாபாரிகள் குவிந்தனர்