சென்னையில் முதன்முறையாக மாநில இளைஞர் திருவிழா: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னையில் முதன்முறையாக மாநில இளைஞர் திருவிழாவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்து, இலச்சினையை வெளியிட்டார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் ஒருங்கிணைப்பில் தமிழ்நாடு மாநில நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் மாநில இளைஞர் திருவிழா 24ம் தேதி (நேற்று) முதல் வரும் 28ம் தேதி வரை 5 நாட்கள் சென்னையில் நடக்கிறது. இதன் தொடக்க விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது. விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு தொடங்கி வைத்து, திருவிழாவுக்கான இலச்சினையை வெளியிட்டார்.

அப்போது, அவர் பேசியதாவது: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை தமிழ்நாடு மாநில நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் முதன்முறையாக நடக்கிற மாநில இளைஞர் திருவிழாவினை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். உலகிலேயே இளைஞர்களை அதிகம் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்திய ஒன்றியத்தில் இளைஞர்களை அதிகம் கொண்ட 10 மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாக உள்ளது. அனைவரும் கல்வியில் முழுக் கவனம் செலுத்த வேண்டும். கல்வியுடன் பிடித்த விளையாட்டிலும் கவனம் செலுத்த வேண்டும்.

எதிர்வரும் குடியரசு தின அணிவகுப்பிற்கு என்.எஸ்.எஸ். மற்றும். என்.சி.சி. தன்னார்வலர்கள் விமானம் மூலம் சென்றுவர ஏற்பாடு செய்து தரப்படும். நாட்டு நலப் பணித் திட்ட செயல்பாடுகள், மாநில இளைஞர் திருவிழா, மாநில சாகச முகாம்கள், தேசிய ஒருமைப் பாட்டு முகாம், புதுமைப் பெண் திட்டம், மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு முகாம், தேசிய பேரிடர் மேலாண்மை ஆகிய சிறப்பு செயல்பாடுகளுக்காக முதன்முறையாக. ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த நிதி ஒதுக்கீட்டின் ஒரு பகுதியாகத் தான் முதல் மாநில இளைஞர் திருவிழா தொடங்கியுள்ளோம் என்று பேசினார்.

Related posts

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த புகாரில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதிய உத்தரவு: பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அதிரடி

டாக்டர் வீட்டில் 65 சவரன் திருடிய இளம்பெண் கைது

வக்பு சட்டத்திருத்த மசோதா குறித்து கருத்தரங்கு; காதர் மொகிதீன் தலைமையில் நடந்தது