சென்னையில் விளையாட்டு உட்கட்டமைப்புகளை சர்வதேச தரத்திற்கு உயர்த்த ரூ.25 கோடி நிதி ஒதுக்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: சென்னையில் விளையாட்டு உட்கட்டமைப்புகளை சர்வதேச தரத்திற்கு உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ 25 கோடி நிதி ஒதுக்கி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான தமிழக அரசின் செய்திக் குறிப்பு: “தமிழக இளைஞர்களிடையே விளையாட்டுத் திறன்களை வளர்ப்பதிலும், தமிழகத்தில் சர்வதேசத் தரத்திலான உள்கட்டமைப்புகளை உருவாக்குவதிலும் தனிக் கவனம் செலுத்துவதற்காக முதன் முதலில் விளையாட்டுத் துறைக்கென ஒரு தனி அமைச்சர் பதவியை 9-12-1999 அன்று ஏற்படுத்தியும், தலைமைச் செயலகத்தில் விளையாட்டுத் துறையை ஒரு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியின்கீழ் தனித்துறையாக 2000 ஆண்டு ஜூன் திங்களில் ஏற்படுத்தியும் முன்னாள் முதல்வர் கருணாநிதி விளையாட்டுத் துறை வளர்ச்சிக்கு ஊக்கமளித்தார்கள்.

அதனைத் தொடர்ந்து, 2021-ல் பொறுப்பேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் உலகத் தரம் வாய்ந்த விளையாட்டுக் கட்டமைப்புகளை ஒவ்வொரு விளையாட்டுக்கும் தமிழ்நாட்டில் ஏற்படுத்திட வேண்டும் என்று முனைப்புடன் ஈடுபட்டுள்ளார்கள்.அதற்கு ஏற்ப இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரும் தமிழகத்தின் விளையாட்டுக் கட்டமைப்புகளை உருவாக்குவதில் மிகுந்த ஆர்வத்துடன் செயலாற்றுகிறார்கள். முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் கட்டமாக சர்வதேச விளையாட்டுப் போட்டிகளைத் தமிழகத்தில் நடத்துவதற்கு மிகுந்த ஆர்வம் கொண்டு மத்திய அரசின் ஒப்புதலோடு பிரதமர் மோடியை அழைத்து 2022ஆம் ஆண்டில் 44வது செஸ்ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் நடத்தப்பட்டு உலக அளவில் பாராட்டுகளைப் பெற்றது.

உதயநிதி ஸ்டாலினின் கடும் உழைப்பால் அண்மையில், கேலோ இந்தியா 2023 விளையாட்டுப் போட்டிகள், நந்தம்பாக்கம் வர்த்த மையத்தில் இந்திய பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டு ஏறத்தாழ 5,000-த்துக்கு மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்று வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளன. இந்தப் போட்டியில் 38 தங்கப் பதக்கங்கள் பெற்று தமிழக பதக்கப்பட்டியலில் 2-ஆம் இடம் பெற்று, மாபெரும் சாதனை நிகழ்ந்துள்ளது. 2023 – 2024 ஆம் ஆண்டிற்கான இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கையின்போது, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர், சென்னையில் உள்ள ஐந்து முக்கிய விளையாட்டரங்கங்களில் விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் ரூ.25 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைத்து மேம்படுத்தப்படும் என அறிவித்தார்.

அந்த அறிவிப்புகளைச் செயல்படுத்தும் வகையில் சென்னை மாநகரில் உள்ள 25 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான விளையாட்டு உட்கட்டமைப்புகளைச் சர்வதேச தரத்திற்கு உயர்த்தி மேம்படுத்திட மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கம் ரூ.11 கோடியே 34 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம் 5 கோடியே 71 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், ஜவர்ஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கம் 2 கோடியே 35 லட்சம் மதிப்பீட்டிலும், வேளச்சேரி நீச்சல்குளம் வளாகம் 4 கோடியே 72 லட்சம் மதிப்பீட்டிலும் நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டு அரங்கம் 88 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் மேம்படுத்தப்பட மொத்தம் 25 கோடி ரூபாய் நிதி வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சென்னை அருகே பீர்க்கன்கரணையில் இரட்டைக் கொலை

ஜூலை-02: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு