சென்னையில் தெற்காசிய ஜூனியர் தடகளம்

சென்னை: இந்தியா உட்பட ஏழு நாடுகள் பங்கேற்கும் 4வது தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார். சென்னை நேரு விளையாட்டு அரங்கில் ஒளி வெள்ளத்தில் நடைபெறும் இப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பூட்டான், நேபாளம், வங்கதேசம், மாலத்தீவுகள் என ஏழு நாடுகளை சேர்ந்த 174 வீரர், வீராங்கனைகள் இந்த போட்டியில் பங்கேற்கின்றனர். இவர்கள் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஓட்டப் பந்தயங்கள் என 28 வகையான போட்டிகளில் பதக்க வேட்டை நடத்த உள்ளனர்.

முதலில் நடைபெற்ற பெண்களுக்கான 800 மீ. ஓட்டத்தில் இலங்கை வீராங்கனை சன்சாலா ஹிமாசினி 2 நிமிடம், 10.13 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். 2வது இடம் பிடித்த இந்திய வீராங்கனை லட்சுமி பிரியா (2 நிமிடம், 10.87 விநாடி) வெள்ளி, இலங்கை வீராங்கனை அபிசேகா பிரேம்சிறீ (2 நிமிடம்,10.97 வி.) வெண்கலம் வென்றனர். ஆண்களுக்கான 800 மீ. ஓட்டத்தில் இந்தியாவின் போபண்ணா கிளப்டா முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். 2வது இடம் பிடித்த இந்திய வீரர் வினோத்குமார் வெள்ளிப் பதக்கம், 3வது இடம் பிடித்த இலங்கை வீரர் ஷாவிந்து அவிஷ்கா வெண்கலம் வென்றனர். மகளிர் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தமிழ் நாடு வீராங்கனை அபிநயா தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.

முன்னதாக போட்டியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் அணிவகுப்பையும் பார்வையிட்டார். தொடக்க விழாவில் ஆசிய தடகள கூட்டமைப்பு தலைவர் தஹ்லான் ஜூமான் அல் ஹமீத், தெற்கு ஆசிய தடகள கூட்டமைப்பு தலைவர் லலித் பானட், இந்திய தடகள கூட்டமைப்பு தலைவர் அணில் சுமரிவாலா, தமிழ் நாடு தடகள சங்கத் தலைவர் தேவாரம், துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா ஆகியோர் பங்கேற்றனர். தமிழக அரசு இந்த போட்டிக்காக ரூ.3.67 கோடி நிதியுதவி அளித்துள்ளது.

Related posts

திருவாலங்காடு அருகே தொடர் திருட்டில் ஈடுபட்டவருக்கு தர்ம அடி: போலீசில் ஒப்படைத்தனர்

திருத்தணி பேருந்து நிலையத்தில் யணிகளிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது

கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக புகார்