அதிகரித்து வரும் நெரிசலுக்கு தீர்வாக சென்னையில் 493 இடங்களில் சாலையோர கடைகளுக்கு தடை: மாநகராட்சி சார்பில் அறிவிப்பு பலகை

சென்னை: சென்னையில் அதிகரித்து வரும் நெரிசலுக்கு தீர்வாக, 493 இடங்களில் சாலையோர தள்ளுவண்டி கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டு, மாநகராட்சி சார்பில் அறிவிப்பு பலகை அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. சென்னையில் நாளுக்குநாள் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பகல் நேரம் போலவே இரவு நேரங்களிலும் அதிக இடங்களில் பணிகள் நடைபெறுவதால் மக்கள் எப்போதும் சாலையில் நடமாடுவதை பார்க்க முடிகிறது. இதேபோல் இரவு முழுவதும் பல உணவகங்கள் திறந்துள்ளதால் சில இடங்களில் இரவு நேரங்களில் கூட போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

குறிப்பாக தி.நகர், பாரிமுனை, புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், அடையாறு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இரவு நேரங்களிலும் போக்குவரத்து எரிச்சல் ஏற்படுவதையும், சாலையோர கடைகள் முன்பு இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு பொதுமக்கள் உணவு அருந்தச் செல்வதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாவதையும் பார்க்க முடிகிறது. வருங்காலத்தில் இந்த பிரச்னை இன்னும் அதிகரிக்கும் என்ற காரணத்தினால் சென்னை மாநகராட்சி இதற்கு பல்வேறு வழிகளில் தீர்வு கண்டு வருகிறது. அதாவது விற்பனை மண்டலங்கள் மற்றும் விற்பனை செய்யக்கூடாத மண்டலங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஈவெரா பெரியார் சாலை, புதிய ஆவடி சாலை, திருமங்கலம் சாலை, கொளத்தூர் பிரதான சாலை, பிரகாசம் சாலை, மூலச்சத்திரம் பிரதான சாலை, லேபர் காலனி சாலை உள்ளிட்ட இடங்களில் சாலையோரம் வியாபாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் சாலைகளில் கடைகள் அமைத்து வியாபாரம் செய்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் சுமார் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் பல்வேறு விதமான வணிகங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தள்ளுவண்டிகளில் சாலையோர உணவகங்களை நடத்தி வருகின்றனர். சென்னையில் பலதரப்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இதில் பெரும்பாலான வடமாநில நபர்களும் அதிகம் சாலையோர கடைகளை நம்பி வசித்து வருகின்றனர். இதனால் சாலையோர கடைகளை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளில் சென்னை மாநகராட்சி இறங்கியுள்ளது. இதற்காக போக்குவரத்து நெரிசல் இல்லாத பகுதிகளில் சென்னை மாநகராட்சி கடைகளை கட்டி அந்த இடத்தில் வியாபாரிகள் கடைகளை அமைத்துக் கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்காக முதற்கட்டமாக 4 இடங்களை தேர்வு செய்துள்ளனர். வட சென்னையில் மகாகவி பாரதி நகரில் உள்ள வெஸ்ட் அவென்யூ ரோடு, எழும்பூரில் உள்ள பாந்தியன் லேன், அம்பத்தூரில் உள்ள பார்க் ரோடு, பெசன்ட் நகரில் உள்ள செகன்ட் அவென்யூ ஆகிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த தெருக்களில் 150க்கும் மேற்பட்ட கடைகளை கட்டமைக்க உள்ளனர். ஒவ்வொரு கடைக்கும் 5 அடி இடைவெளி இருக்கும். இவற்றுக்கு முறையாக உரிமம் வழங்கப்படும், உணவு பாதுகாப்பு உரிமமும் அளிக்கப்பட உள்ளது. இதில், உணவு கடைகள், ஆபரண கடைகள், சாலையோர சந்தைகள் மற்றும் பழக்கடைகள் ஆகியவை உள்ளன.

பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்காத விற்பனையாளர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும். நடைபாதைகளின் ஒரு பக்கம் விற்பனைக்கு அனுமதிக்கப்படும், எதிர்புறம் நடைபயிற்சிக்கு அனுமதிக்கப்படும், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சென்னையில் சாலையோர தள்ளுவண்டி கடைகள் அனுமதிக்கப்பட்ட இடம் மற்றும் சாலையோர தள்ளுவண்டி கடைகள் தடை செய்யப்பட்ட பகுதிகள் என்று பிரிக்கப்பட்டுள்ளது. இதற்காக சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் 776 விற்பனை மண்டலங்களின் பட்டியலும், 493 தெருக்களை விற்பனை இல்லாத பகுதிகளாகவும் அறிவித்து பெயர் பலகைகளை அமைக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, 776 தெருக்களில் தெருவோர வியாபாரிகள் அனுமதிக்கப்படுவார்கள். 493 தெருக்களில் உள்ள தெருவோர கடைகளை அகற்றும் பணி தொடங்கும். விற்பனை அல்லாத மண்டலங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள கடைகள் அகற்றப்படும்.
ராயபுரம் மண்டலம் அதிக எண்ணிக்கையிலான விற்பனை மண்டலங்களை கொண்டிருக்க வாய்ப்புள்ளது. இங்கே 162 தெருக்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த தெருக்களில் கடைகள் அமைக்கப்படும். அடுத்தடுத்தாக 109 தெருக்களில் விற்பனைகள் அனுமதிக்கப்படும்.

வளசரவாக்கத்தில் 90 விற்பனை மண்டலங்களும், தேனாம்பேட்டை மண்டலத்தில் குறைந்தது 74 விற்பனை மண்டலங்களும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல், 493 தெருக்களை விற்பனை இல்லாத பகுதிகளாக அறிவித்து பெயர் பலகைகளை அமைக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக அனுமதிக்கப்பட்ட இடங்களில் பச்சை நிறத்திலும், அனுமதிக்கப்படாத இடங்களில் சிவப்பு நிறத்திலும் அறிவிப்பு பலகை வைக்க முடிவு செய்துள்ளனர். இதன்மூலம், கடைகள் முறைப்படுத்தப்பட்டு, சென்னையில் நெரிசல் குறையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

* மீட்பு மையங்கள்
செப்டம்பரில் பருவமழை தொடங்குவதற்கு முன், அண்ணாநகர், ராயபுரம், அடையாறு உள்ளிட்ட பல மண்டலங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் சமுதாயக்கூடங்களில் உள்ள பல்வேறு மீட்பு மையங்கள் மற்றும் சமையலறைகளை மாநகராட்சி ஆணையர் சமீபத்தில் ஆய்வு செய்தார். அப்போது, இந்த மையங்களில் மின்சாரம், குடிநீர், செல்போன் சார்ஜ் செய்யும் வசதி, கழிப்பறைகள், ஜெனரேட்டர்கள் போன்ற அத்தியாவசிய வசதிகள் இருப்பதை உறுதி செய்ய மருத்துவ அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

* மாஸ் கிளீனிங்
சென்னை மாநகராட்சி ஆணையராக குமரகுருபரன் வந்த சில நாட்களில் சென்னையில் அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். முக்கியமாக சென்னையை அழகாக மாற்றுவதற்கான தீவிரமான பணிகளை மேற்கொள்ள தொடங்கி உள்ளார். ஏற்கனவே சென்னை மாநகராட்சியின் மண்டலங்களிலும் மாஸ் கிளீனிங் செய்யப்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் மிக தீவிரமாக மாஸ் கிளீனிங் செய்து வருகின்றனர்.

* வாகனங்கள் அகற்றம்
சென்னை சாலைகளை ஆக்கிரமிப்பு செய்துள்ள நபர்கள் தானாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ளுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் காவல்துறை உதவியுடன் அறிவுறுத்தல் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதன் மூலம் சாலை ஓரம் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கடைகள் அகற்றப்படும். மேலும் கைவிடப்பட்ட வாகனங்களை அகற்றப்பட்டு வருகிறது.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி