சென்னை ராயப்பேட்டை, ஆலப்பாக்கம், பூந்தமல்லியில் ரூ.63,246 கோடியில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு, பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ் ரூ.63,246 கோடியில் செயல்படுத்தப்பட்டு வரும் இரண்டாம் கட்டப் பணிகளில் ராயப்பேட்டை, ஆலப்பாக்கம், பூந்தமல்லி ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ், மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலான வழித்தடம் (45.8 கி.மீ), கலங்கரைவிளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச் சாலை வரையிலான வழித்தடம் (26.1 கி.மீ) மற்றும் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான வழித்தடம் (47.0 கி.மீ), என மொத்தம் 118.9 கி.மீ நீளத்திலான 3 வழித்தடங்களை ரூ. 63,246 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்துவதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று சென்னை ஒருங்கிணைந்த பெருநகர் போக்குவரத்து குழுமத்தின் ஆய்வில் உள்ள ஒருங்கிணைந்த நகர்வு திட்டமான பன்முக போக்குவரத்து ஒருங்கிணைப்பு, பொதுவான நகர்வு அட்டை, பெருந்திரள் துரித போக்குவரத்து அமைப்பின் ஒருங்கிணைப்பு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தை மேம்படுத்தல் ஆகியவை குறித்து உயர் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

மெட்ரோ ரயில் திட்டத்தின் கட்டம்- 2, வழித்தடம்-3ல் பவானி என்று பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் மூலம் ராயப்பேட்டை முதல் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை வரை 910 மீட்டர் சுரங்கம் அமைக்கும் பணியை ராயப்பேட்டையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்து பார்வையிட்டார்.பேரூரில் ஆலப்பாக்கம் இரண்டு அடுக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டார்.

பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ் பூந்தமல்லி அரியமந்தநல்லூர் கிராமத்தில் ரூ.187 கோடி செலவில் 40.5 ஏக்கர் நிலத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் பூந்தமல்லி பணிமனை கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த பணிமனையில் நிர்வாக கட்டிடம், பணிமனை கிடங்கு, பணிமனை கூடம், ரயில்கள் நிறுத்தும் வசதி மற்றும் சிறப்பு வசதிகளான ஒரு சோதனைத்தடம் மற்றும் தானியங்கி ரயில்கள் கழுவும் அமைப்பு போன்ற 17 கட்டிடங்கள் உள்ளன.

இப் பணிமனையில் 6 பெட்டிகள் கொண்ட 56 ரயில்கள் வரை பராமரிக்கப்படவுள்ளன. இந்த ரயில்கள் தானியங்கி அமைப்புகளை கொண்டதுடன் ஓட்டுநர் இல்லாத ரயில்கள் இயக்க அமைப்பினை கொண்டுள்ளது. தற்போது 82% கட்டுமான பணிகள் முடிவுற்றுள்ளன. இதில் ரயில் நிறுத்தும் பகுதி, சோதனை தடம் ஆகிய பணிகள் 6 மாதத்திற்குள் இறுதிக்கட்டத்தை அடையும்.

* 2025 நவம்பரில் பூந்தமல்லி-போரூர் வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் மெட்ரோ ரயில் திட்ட இயக்குனர் அர்ஜுன் நேற்று அளித்த பேட்டி: பூந்தமல்லியில் இருந்து போரூர் வரை நடைபெறும் பணிகள் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டறிந்தார். இந்த பணிகள் முடிந்து இரண்டு மாதங்கள் சோதனை ஓட்டம் நடைபெறும். 2025ம் ஆண்டு நவம்பர் மாதம் பூந்தமல்லியில் இருந்து போரூர் வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும். அதனைத் தொடர்ந்து மற்ற வழித்தட பணிகள் விரைந்து முடிக்கப்படும்.

பூந்தமல்லி பணிமனையில் 75 சதவீத பணிகள் முடிந்து விட்டன. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் அனைத்து பணிகளும் முடிந்து விடும். மெட்ரோ ரயில் பணிக்காக நிலம் எடுப்பது 99 சதவீதம் முடிந்து விட்டது. கிளாம்பாக்கத்திற்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து தாம்பரம் வழியாக மெட்ரோ ரயில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலை இடையில் 25 மீட்டர் இடைவெளியில் இடம் உள்ளது‌. அந்த வழியில் எதிர்காலத்தில் மெட்ரோ ரயில் பயன்படுத்தப்படும் சாத்தியம் குறித்து ஆய்வு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு